அறிவித்தல்

தமிழ் கற்பிக்க ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்கலாம் என்று சொன்னேன் தானே..அதற்கு டோண்டு ராகவன் தன்னாலியன்ற உதவி செய்வதாக கூறியுள்ளார். சந்திரவதனாவும் உதவுவதாக சொன்னா. இருவருக்கும் நன்றி. ஒருத்தரும் தமிழ் வாத்தியாரக முன்மொழியப்படவில்லை. எனவே நானே உருவாக்கப்போகிறேன். (தலையில் அடித்துக் கொள்ளும் சத்தம் நிறையவே கேட்கிறது! :0)). எனக்கு பள்ளிக்கூடத்தில் திட்டித் திட்டிப் படித்த இலக்கணம் கொஞ்சம் தான் ஞாபகத்திலிருக்கிறது. என்ன ஒழுங்கில் ஆரம்பிக்கலாம் என்பது பற்றி ஒரு மூளைப்புயல் நடத்திக் கொண்டிருக்கிறேன் ..எனக்குள்ளே. உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன். இந்த வலைப்பதிவை (அடிப்படை தோற்றத்துடன்) உருவாக்கியிருப்பினும் இன்னும் பதிவுகள் எதுவும் இல்லை. அதிகாரபூர்வமாக தொடங்க சில நாட்கள்/ வாரங்கள் ஆகலாம். என்ன பெயர் வைக்கலாம் தலைப்பாக?யார் பதிவதாக போடலாம்?

என் கிறுக்கல் பலகையில் கேட்டிருப்பதை மீண்டும் இங்கே கேட்கிறேன். இலங்கையில் பள்ளிக்கூடத்தில் பாட நூல்கள் இலவசம். எனக்கு அப்புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள வசதியுண்டு. இந்தியாவில் பாடப்புத்தகங்கள் என்ன முறையில் விநியோகிக்கப்பட்டன?இலவசமாகவா அல்லது வாங்க வேண்டியிருந்ததா? குறிப்பாக ஏதாவது புத்தகங்கள் பரிந்துரைக்கப்பட்டதா? இவற்றை எங்கே பெறலாம்? வலைப்பதிவரில் யாராவது தமிழை கல்லூரியில் பட்டப்படிப்பிற்காக அல்லது வேலை நிமித்தமாக படித்தவர்கள் இருக்கிறார்களா?

நிறையக் கேள்விகள் கேட்கிறேன்..உங்கள் கருத்துக்களை அறியத்தரவும்.


அறிவித்தல் 2: சிட்னி முருகன் கோயிலின் மஹோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகிறது. பூங்காவனம் சி.மு.இளைஞர் வட்டத்தினரால் வருடா வருடம் பொறுப்பேற்கப்பட்டு விமரிசையாக நடத்தப் பெறும் நிகழ்வு.. அதற்கு ஆயத்தம் செய்யுமுகமாக வரும் சனிக்கிழமை(19-மார்ச்) பலகாரம் தயாரிக்கப்பட இருக்கிறது. மத்தியானம் 1 மணி போல ஆரம்பிக்க யோசித்திருக்கிறோம். சிட்னி வாழ் இளைஞர்கள்/சிட்னி விருந்தாளிகள் விருப்பமிருந்தால் வந்து உதவலாம். மேலும் தகவல்களை இங்கே பெற்றுக் கொள்ளலாம். பாமினி எழுத்துரு தேவைப்படும்:

5 படகுகள் :

Anonymous March 16, 2005 4:42 pm  

தமிழை வலைப்பதிவுல கத்துக் கொடுக்கலேனு யாரு அழுதா? உருப்படியா எதாச்சும் செய்ங்க!

Moorthi March 16, 2005 4:53 pm  

ஷ்ரேயா நல்ல செய்தியைச் சொன்னீர்கள். வலைப்பதிவென்று மட்டும் இல்லை. எப்படி நீங்கள் தமிழ் வளர்த்தாலும் மகிழ்வான செய்திதான். தலைப்பாக தமிழாசான் அல்லது தமிழாசிரியர் என இடலாம்.

மாலன் March 16, 2005 5:41 pm  

தமிழ்க் கற்றுக் கொடுக்கும் இணையதளங்கள் போதுமான அளவில் இருக்கின்றன.குழந்தைகளை அந்தத் தளங்களுக்கு இட்டுச் சென்று பயிற்றுவிப்பது பயனுள்ளதாக இருக்கும். தொழில்முறை ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட, அறிவியல் ரீதியாக அமைக்கப்பட்ட தளங்கள் அவை.

நீங்கள் உங்கள் நேரத்தையும், உழைப்பையும் வேறு இரு விதங்களில் செலவிடலாம்.

1.இப்போது பதிப்பிக்கப்படும் வலைப்பதிவுகள் பலவற்றில் எழுத்துப்பிழைகள் (ல, ள, ற,ர) சந்திப் பிழைகள், ஒற்றுப் பிழைகள் காணப்படுகின்றன. நீங்கள் அவற்றை சம்பந்தப்பட்டவர்களுக்குச் சுட்டிக் காட்டலாம். அது போன்ற பிழைகளின் எண்ணிக்கை நாளடைவில் குறைய வாய்ப்புண்டு.

2.குழந்தைகளை வலைப்பதிவுகள் எழுதத் தூண்டலாம். அப்படி அவர்கள் எழுத முற்படும் போது தமிழ் அவர்களுக்கு வசப்படுவதுடன், அவர்கள் தங்கள் எண்ணங்களைக் கோர்வையாக வெளிப்படுத்தும் ஆற்றலும் மேம்படும்.

இது குறித்து சிந்திக்க வேண்டுகிறேன்.

மாலன்

Anonymous March 16, 2005 11:48 pm  

உங்கள் ஆர்வத்துக்கும் முயற்சிக்கும் பாராட்டுக்கள். மாலன் சொல்வது யோசிக்க வைக்கிறது. அப்பிடியான தளங்களின் பட்டியலொன்றை எடுத்து அவற்றை ஒப்பு நோக்கி எம்மால் புதிதாக ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கலாம்.
மேலும் இலக்கணம் சொல்லிக் கொடுக்கும் போது நேரடியாக "தீத்தாமல்" இலக்கிய வடிவங்களுக்கூடாகவே சொல்லப்பட வேண்டும் (சிறுவர்களென்ற படியால்). அதாவது சின்னச் சின்ன கதை, பாட்டு, நாடகம் மாதிரி வடிவங்கள்.

மேலும் மாலன் சொன்னது போல் அவர்களை எழுதத் தூண்டுவதுதான் உச்சபட்ச பயன்பாட்டைத் தரும் என்பது என் கருத்து. அப்பதிவுகளை ஓரிடத்தில் நீங்கள் ஒருங்கிணைத்து அவர்களை வழிநடத்தலாம். இதில்தான் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அதுவும் தமிழில் தட்டச்சிடும் வசதியும் அதுபற்றின அறிவும் பங்குபற்றும் குழந்தைகளுக்குத் தேவை.

குரல் வழித்தொடர்பு முறையை ஏற்படுத்திப்பேணுதல் சிறந்தது (skype, yahoo messenger, msn messenger). அதன் மூலம் ஆர்வமானவர்கள் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் உங்களைத் தொடர்பு கொண்டு கதைக்கலாம்; கருத்துக்கள் கேட்கலாம்.

இவ்வளவும் தாண்டி ஒரு வலைப்பக்கம் நிறுவினாலும் எத்தனைபேர் வந்து பயன்பெறப்போகிறார்கள் என்பது கேள்விக்குறி. இது சம்பந்தமாக ஏதாவது கணக்கு இருக்கிறதா? சிட்னியில் இதுபற்றி தமிழர்களிடம் கதைத்துப் பாருங்கள். அத்தோடு தமிழ் அமைப்புக்களிடமும் தொடர்புகொண்டு ஒரு கணிப்புச் செய்யுங்கள். எல்லாம் சரிவந்தால் தொடங்குங்கள்.

கற்பித்தலில் மரபு முறைகளை முற்றாக மாற்றவேண்டுமென்பதில் எனக்கு உடன்பாடில்லை. பாட்டிவடைசுட்ட கதையையும் நமது சிறுவர் பாடல்கள் தாலாட்டுப்பாடல்களையும் பழிப்பவர்களைக் கண்டால் கோபம் தான் வருகிறது. ஆகவே மரபோடு இணைந்து புதிதாய் காலத்துக்கும் களத்துக்கும் (வெளிநாடுகளில் வாழ்பவர்கள் தான் இலக்கு) ஏற்றாற்போல் முன்னெடுக்க வேண்டும்.

நன்றி.

`மழை` ஷ்ரேயா(Shreya) March 17, 2005 8:51 am  

அனானிமஸ்:- உருப்படியாகத்தான் முயற்சிக்கிறேன். ஒவ்வொருவர் பார்வையும் ஒவ்வொரு விடயங்களிலும் வேறு படுமல்லவா!

மாலன்..உங்கள் கருத்து சிந்திக்க வைக்கிறது. நீங்களும் வசந்தனும் சொல்வது போல குழந்தைகளை எழுத வைப்பதே எனது எண்ணமாக இருப்பினும் அவர்களை வலைப்பதிவுலகிற்கு அறிமுகப்படுத்துவது எனக்கு நீங்கள் சொல்லும் வரையில் தோன்றவில்லை. நான் யோசித்தது, எப்படி எழுதுவது என்று அதாவது ஆனா என்றால் புள்ளியில் ஆரம்பித்து சுழித்து..என்று எழுத்தை முதலில் அறிமுகப்படுத்துவோம் என்றுதான். வலைப்பதிக்க முன் எழுத்துக்களையும் அவற்றின் ஒலி வடிவங்களையும் அறிந்து கொள்வது நன்மை பயக்குமல்லவா!
நீங்கள் குறிப்பிட்டது போல, தமிழ் கற்பிக்கும் இணையத் தளங்களை அவற்றிற்கிடையில் காணப்படும் வேறுபாடுகள், எந்தெந்த வயதுக்குரியவர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன, பாடங்கள் கற்றுக்கொள்ள எவ்வளவு இலகுவாக இருக்கிறன என்பவற்றின் அடிப்படையில் பட்டியலிடலாம்.

வசந்தன் சொல்வது போல இங்கே தமிழர்களிடம் கதைத்துப் பார்க்கிறேன். தமிழ்ச் சிறுவர்களிடமும் பேசிப்பார்க்கிறேன் - அவர்களுக்காகத்தானே இந்த முயற்சி. தமிழ் எப்படிக் கற்பிக்கப்பட வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள் என்று அறிந்து கொள்ளலாம்.

பெட்டகம்