வேலைத் தலத்தில் என்னையும் சேர்த்து 3 இலங்கையர். அனேகமாக ஒன்றாகத்தான் மதிய உணவை உண்போம். மற்ற இருவரும் சிங்களவர் என்றாலும் எனக்காக முதலில் ஆங்கிலத்தில் தான் கதைத்தார்கள். என் சிங்கள(பேச்சுப் பழக்க)த்தை மறக்காதிருக்க வேண்டும் என்பதால் அவர்களுடன் சிங்களத்தில் கதைக்கத் தொடங்கினேன். இப்போது சாப்பாட்டு அறைக்குள் மற்றவர்கள் வந்தாலும் நாங்கள் மூவரும் சிங்களத்திலேயே தொடர்ந்தும் உரையாடுவோம். எங்கள் பட்டப்பெயர் : Sri Lankan Mafia!
இந்த மாஃபியாவிலே "ரங்கிக", நடந்த சம்பவங்களை சுவைபடச் சொல்லுவதில் விண்ணன்.ஒரு முறை இலங்கையில் தங்களது CIMA வகுப்பில் நடந்தததாம் என்று இதைச் சொன்னார்:
ஒரு மாணவன், இங்கிலாந்திலிருந்து திரும்பியவன். பிரிடிட்டிஷ் accent உடன் ஆங்கிலத்தில் கதைப்பதும், ஆசிரியரிடம் கேள்விகள் கேட்பதும் என்று பெரும் அலட்டல் பேர்வழியாம். மற்றவர்களெல்லாரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து இயலாக் கட்டத்தில் ஒரு நாள் அவனிடம் எப்போது இங்கிலாந்திற்குப் போனாய், எங்கே படித்தாய் என்று பூர்வீக விசாரணை நடத்தியிருக்கிறார்கள். தான் சாதாரண தரப் பரீட்சைக்கு (16 வயது) இலங்கையில் தோற்றிய பின்பு இங்கிலாந்து சென்றதாயும், இப்போ 7 - 8 வருடங்கள் இங்கிலாந்திலேயே இருந்து படித்து விட்டதால் சிங்களம் சுத்தமாக மறந்து விட்டதென்றும் சொல்லியிருக்கிறான். இவர்களும் ஒன்றும் பேசாமல் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து விட்டு "அப்படியா" என்று எல்லாத்தையும் கேட்டுக் கொண்டார்களாம்.
வகுப்பு நடப்பது கடற்கரைக்கு அண்மையில். மதிய உணவு இடைவேளையில் கடற்கரைக்குச் சென்று அலையில் விளையாடுவது வழக்கமாம். ஒருநாள் அலட்டல் மாணவனையும் அழைக்க, அவனும் கடற்கரைக்கு சென்றிருக்கிறான். மாணவர்களில் ஒருவன் அல.மாணவனின் காலணிகளை கழற்றியிருந்த இடத்திலிருந்து எடுத்து வந்து கடலுக்குள் எறிந்து விட்டானாம். அல. மா.வும் காலணிகளி மீட்க காற்சட்டை நனைந்து விடாமல் தூக்கிய படியே மெது மெதுவாக நீருக்குள் செல்லும் போது, காலணிகளை எறிந்த மாணவன் பின்னாலிருந்து இவனை பலமாக நீருக்குள் தள்ளி விட்டானாம்.
"புது அம்மோ" ( ஐயோ அம்மா) என்று சொல்லிக்கொண்டே அல.மா. நீருக்குள் விழுந்தானாம்.
அந்தச் சம்பவத்திற்குப் பின் வகுப்பில் யார் என்ன கேட்டாலும் முழுக்க முழுக்க சிங்களத்திலேயே பதில் சொல்வானாம்.
சொந்த மொழியை, பேசுவதில் இவ்வளவு வெட்கமும் தயக்கமும் எதற்கு? இங்கே அவுஸ்திரேலியாவில் பார்க்கிறேன், தமிழைப் பேசத் தெரியாது, அப்படியே தெரிந்தாலும் கதைப்பதற்கு வெட்கம் அல்லது ஆங்கிலத்தைக் கதைப்பது போல ஒரு accent உடன் பேசுகிறார்கள். பெற்றோரே "என்ட பிள்ளைக்கு தமிழ் தெரியாது " என்று பெருமையடிக்கும் போது முகத்திலே 2 விட வேண்டும் போல இருக்கும். இரண்டு மொழிகள் தெரிந்திருப்பதில் நன்மையே தவிர தீதில்லை. தமிழ்ப் பிள்ளைக்குத் தமிழ் வராது/தெரியாது, ஆனால் பள்ளியில் 2ம் பாடமாக பிரெஞ்சோ, சீனமோ படிக்கும், அதைப் பெருமையாகவும் கதைக்கும். இதை ஊக்குவிக்க இங்கே நிறையவே பெற்றோருமுண்டு.எங்கே போய் சொல்வது!
1 படகுகள் :
சரியான நெத்தியடி என்கிறது இதுதான் இஞ்ச கொஞ்சப்பேர் உந்த நினைப்பிலதான் திரியினம்.புலம்பெயர்ந்து வாழும் சீனர்களோ வேறுநாட்டவர்களோ பொதுத்தொடர்பாடலுக்கு ஆங்கிலத்தைப்பயன்படுத்தினாலும் தமது மொழியைவிட்டுக்கொடுப்பதில்லை.அதேபோல சீக்கிய இனத்தவர்கள் எந்த வெட்கமும் இன்றி தமது மதத்துக்குரிய தலைப்பாகையை உரிய முறையில் சுற்றிக்கொண்டுதான் வேலைக்குச்செல்கிறார்கள் சகல இடங்களுக்கும் போய்வருகிறார்கள்.எங்கட ஆக்களிண்ட பிள்ளையளில எத்தினைபேர் கோயிலுக்கு வேட்யோட வரீனம்.விரல் விட்டு எண்ணலாம்.
எங்கட தமிழ் வித்துவான்களுக்குத்தான் தங்களை தமிழ் என்று இனங்காட்டுவதில கொஞசம் கஸ்டமாக்கிடக்கு.ஆனா சுனாமி அடித்த நேரத்தில தாங்கள் சீறிலங்கன்ஸ் எண்டும் தங்கட பீப்பிள் சரியாப்பாதிக்கப்படவை எண்டும் வெள்ளைக்காரிடமே வலிந்துபோய் சொல்லி பணம் சேர்த்தார்கள்.இதில நான் அவர்களின் உதவும் சிந்தனையை தூஷிக்கவில்லை.தம்மை வெள்ளையள் மதிக்கவேணும் திரும்பிப்பாக்கவேணும் எண்டதுக்காக தமது கலாசாரத்தை கைத்தடியாக தூக்கும் எங்கட ஆக்கள் அந்தக்கலாசாரத்தை உரிமையுடன் வளர்க்கவோ அல்லது பின்பற்றவோ சுயஉணர்வுடன் முன்வருவது மிகக்குறைவு.
வெள்ளைக்கார கலாசாரத்தை பின்பற்றி ஆகவேண்டிய காரியங்களையும் அவர்களது மொழி மூலம் கல்வியை பெறுவதிலும் எந்தத்தப்பும் இல்லை.இங்கு தமிழ் தெரியாது என்றால் அதைப் பெருமையாக தம்பட்டமடிக்கும் ஆக்கள நினைக்கத்தான் சிரிப்பாக்கிடக்கு.
Post a Comment