வருத்தும் எதுவுமே வன்முறைதான்


சமீபத்தில் இலங்கைப் பயணம் போயிருந்தேன். மகிழ்ச்சியாகக் கழிந்த சில நாட்களின் பின்னர் ஓர் ஊருக்குச் சென்றேன்.  பலவருடங்களாக எதிர்கொள்ளாத ஒன்றை முன்னிலும் கீழ்த்தரமான வடிவில் சந்திக்க நேர்ந்தது.  11 வயதுச் சிறுவனும்  17  வயதுச் சிறுமியும் நானும் நடந்து கொண்டிருந்தோம். சிறுவன் எங்களிலும் பார்க்க ஒரு ஐந்தாறு மீற்றர் முன்னால். போகிற வழியில் ஒரு  பெரிய   பெட்டிக்கடை. அங்கே நின்றிருந்தவர்களை நாங்கள் கவனிக்கவில்லை எம் பாட்டில் பேசிக் கொண்டு வந்து கொண்டிருந்ததால்.

சரியாக கடையை நாங்கள் கடக்கவும் அந்தக் குழுவிலிருந்து  " பார்க்க குப்பென்டு  இருக்கு.  கொண்டே வைச்சு என்னவும் செய்யலாம் போல இருக்கு" என்று ஒரு குரல் எழுந்தது. அதற்குச் சொல்லுவதற்கு என்னிடம் பதிலிருந்தது. ஆனாலும், அவர்களைக் கடந்து வந்துவிட்டதும், நான் அங்கிருந்து புறப்பட்ட பின்பும்  அப்பெண் தொடர்ந்து அவ்வழியால் சென்று வர வேண்டியதன் அவசியம் இருப்பதும் (அவரது உள/உடல் பாதுகாப்புக்காக), அதற்குப் பதில் சொல்லி விஷயத்தை வளர்க்க & எங்களைத்  தாழ்த்திக் கொள்ள விரும்பாததுமே நாங்கள் பதிலிறுக்காமல்  கடந்து வரக் காரணங்களாய் அமைந்தன."பொம்பிளைகளுக்கு 'நல்ல' மரியாதை" என்பதைத்  தாண்டி வேறொன்றையும் எங்களுக்குள்ளே  பேசிக்  கொள்ளவில்லை. இதை வாசிக்கிற நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் எப்படி நாங்களிருவரும் உணர்ந்திருப்போம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை - உங்களுக்கே தெரியும். ஆணாக இருக்கும் பட்சத்தில், உங்கள் அந்தரங்கத்தை உங்களது விருப்பின்றி ஒருவர் தொடுவது போன்று x 1000 என்று  உதாரணமாகச்  சொல்லலாம்.

பல பெண்களுக்கு இப்படியான வதைச் சொற்பிரயோகங்கள் கேட்பதென்பது துரதிர்ஷ்டவசமாக அன்றாட நிகழ்வாக அமைந்து விடுகிறது. சொற்களைக் கணக்கில் எடுக்காமல் கடந்து விடலாம்தானே என்று சொல்லலாம். சொல்லும் வதைக்கும்தானே ? பேசாமலிருக்கிறார்கள்.. அதனால் இப்படியானதை விரும்புகிறார்கள் என்று எடுத்துக் கொண்டால்?  சொல் ஒரு நாளைக்குச் செயலாக மாறுகிற போது?

பெண்களை நோக்கி இப்படி  நடந்து கொள்வது ஏன்? பெண்ணை ஒரு சக மனிதராய் பார்க்காது மறைப்பது என்ன? எனக்குத் தோன்றுவது (இதைச் செய்கிற ஆணிடம் தன்னம்பிக்கை/ சுயமரியாதை இல்லாமை, ஈகோ பிரச்சனை  என்பனவற்றையெல்லாம் தாண்டி) அடிப்படையாய் பெண் என்றால் ஒரு ஆணுக்குரிய மரியாதையைத் தரத் தேவையில்லை .. அவள் ஒரு படி குறைந்தவள் என்கிற பொதுப்புத்தியில் படிந்துள்ள கருத்து. யாரும் குறிப்பாக உங்களை இருத்தி வைத்து 'பெண் என்றால் ஆணிலும் குறைந்தவள்' என்றோ 'அவளுக்கு மரியாதை தரத் தேவையில்லை' என்றோ தனிவகுப்பு எடுத்துச் சொல்லித்தர வேண்டியதில்லை. செய்வதுமில்லை.  எங்களைச் சுற்றி வீட்டிலிருந்து  அலுவலகம் வரை அப்படித்தான் மனதில் படிய வைக்கப்பட்டிருக்கிறது பெரும்பாலான இடங்களில். அப்படிச் சிந்தனை இருக்கிறது என்பதையே பலர் உணர மாட்டார்கள். இதுவும் வன்முறைதான். அடிப்பது, வெட்டுவது, இரத்தம் என்பது மட்டுமே வன்முறையல்ல. வருத்தும் எதுவுமே வன்முறைதான். மரியாதை இருந்தால் பெண்ணை வதைக்கிற எதற்கும் - சொல்லோ, செயலோ, கருத்தோ எதுவாயினும் - சரியாகச் சிந்திக்கிற யாரும் உடன்போக மாட்டார்கள். இங்கே சொல்லுகிற மரியாதை என்பதை  பேருந்தில் எழுந்து இடம் கொடுப்பது அல்லது ஆசிரியருக்கு வணக்கம் சொல்லுவது போல என்று எடுத்துக் கொண்டால் நீங்கள் போக வேண்டிய தூரம் அதிகம் :O).


பெண்ணை நுகர்வுப் பண்டமாய் இவ்வுலகமே பார்க்கிறது. 'சந்தைப்படுத்தலில்' பெண்ணின் நிலை எப்படி என்பது தெரியும்தானே? கொஞ்ச நாளைக்கு முன் பார்க்கக் கிடைத்த, காட்சிகளால் கோபப்படுத்திய காணொளி கீழே. காணொளி இந்தியாவை மையமாகக் கொண்டதாயினும் எல்லா நாடுகளிலும் இதைப் போன்ற ஆபத்தான கருத்துப்பாடு சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.


http://youtu.be/Rt1Rhd_sRhg

கடைசியில் திரையில் இடது பக்கமிருப்பவர் சொல்லுவது சரியெனத் தோன்றுகிறதா அபத்தமாயிருக்கிறதா உங்களைப் போறுத்தவரை? பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை விட பதுங்க வைப்பது சரியானதாய்ப் படுகிறதா? ஒரு 4 வயதுச் சிறுமிக்கே தனது  உடல் & அதன் நீட்சியாக உயிரும் குறித்தான பாதுகாப்பில்லாத போது (அண்மையில்  நடந்தது) பெண்களுக்கான நம்பிக்கை எதிலிருந்து வரும்? நாங்கள் வாழும் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு சிறு வயதிலிருந்தே மரியாதை என்பது எப்பாலருக்கும் உரியது/சமமானது என்பது  பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

~~~~~~~~~~~

பெப்ரவரி 14. பெண்கள்  வன்முறைக்கெதிராக எழுவதைக் குறிக்க எடுத்துக் கொண்ட நாள். One Billion Rising (100 கோடி பெண்கள் எழுக) நிகழ்வு. இந்தத் தளத்தில் பாருங்கள்.  பெண்களுக்கு மரியாதை அளிக்கிற, எந்தப் பெண்ணுக்கும் பாதுகாப்பான ஒரு சூழலை அமைக்கிற ஒருவராக இருக்கிறீர்களா?

அந்தர(ங்க)த்தில் மழை


டாலிங் ஹாபரின் சில்லிட்ட படிக்கட்டில்
என் இதயத்தையும் அவளிருந்த குமிழியையும்
அன்று நான் உடைத்துக் கொண்ட பின்
என் மீது வந்தமர்ந்து,
இப்பொழுதும்  என்னோடு ஒட்டிக்
கொண்டிருக்கிறது  அந்த மாய வண்ணத்துப்பூச்சி - அன்றைய இரவின்
ஈரலிப்புடனும்  மாறாத அதே கதகதப்புடனும்.

உடை(ந் )த்ததற்குப் பதிலாக
மீண்டுமொரு குமிழி செதுக்குகிற போதெல்லாம்
தன் வண்ணங்களையெல்லாம் உதிர்த்து அதிலே  பூசியபடி
சத்தமில்லாமல் கேட்கிறது அந்த வண்ணத்துப் பூச்சி - அந்தப்
பெண்ணை என்னசெய்து விட்டேனென்று.
அந்த ஒரு வினவலில் துண்டு துண்டாய்ச் சிதறுகிறது
வண்ணம் பூசிய புதுக்குமிழி. 

செதுக்கிச் செதுக்கிக் களைத்துப் போனாலும் 
வாளாவிருக்க விடாமல் துரத்துகிறது வண்ணத்துப் பூச்சி.
வாலை ஆட்டாமல்,
சிறு முனகல் தானும் இல்லாமல்,
காதுகளைத்  தொங்கவிட்டு,
தலையைச் சரித்து,
துளைக்கும் மினுமினுத்த கண்களால் மட்டும் என்னைத் தொடர்கிறது
துரத்தினாலும் போகாத அவளது நாய்க்குட்டி.

ஒரு அதிகாலையில்
தேநீரின் துணையோடு - உனக்கு
உண்மையைச் சொல்லும் துணிவு எனக்கு வரும்வரை
பெய்ய விரும்பாமலும் 
பெய்யாமலிருக்க முடியாமலும்
அந்தரத்தில் தொங்குகிறது மழை.

இன்றைய தருணம்


இன்றைக்கு நல்ல வானிலை. இதமான வெயில், சுகமான தென்றல். கார் கழுவலாம் என்று நேற்றே யோசித்திருந்தேன். கராஜிலிருந்து வெளியில் எடுத்து வாகாய் நிழலில் நிறுத்தி ஸ்பொன்ஞ்சும் நீரும் கொண்டு கழுவ ஆரம்பிக்கையில் மனம் கட்டுக்குள் இருக்கவில்லை. அலைபாயும் தனது தொழிலை அது செவ்வனே செய்து கொண்டிருந்தது.  அதன் போக்கில் விட்டுவிட்டு கை மட்டும் காரைக் கழுவிக் கொண்டிருந்தது.   சுற்றியலைந்து களைத்த பின் நான் வாகனம் கழுவிக் கொண்டிருந்த இடத்துக்கே என் மனம் திரும்பியது. கழுவக் கழுவ அற்றுப் போய்க் கொண்டிருந்த வாகனத்துத் தூசியைப் போலவே எண்ணங்களும் மனதிலிருந்து கலைந்து போக, ஒரு கட்டத்தில் அங்கே வண்டியும் நானும் மட்டுமே மிஞ்சியிருந்தோம். அதைக் கழுவி விடுவது மட்டுமே தலையாய பணியாக இருந்தது. இன்றைக்குத்தான் வண்டியின் சரியான நிறத்தைப் பார்த்தேன் என்று சொன்னால் நம்பக் கஷ்டப்படுவீர்களோ தெரியவில்லை. காரினை மட்டுமே கண்டு புலன்களில் அதனை நிறைத்துக் கொண்ட நாளில் அதன் வண்ணத்தை சரியாகப் பார்த்துக் கொண்டதில் ஆச்சரியமில்லை எனக்கு.

நாங்கள் குளிப்பது போலத்தான் வாகனக் குளியலும். முதலில் நீர் வார்த்து, பின் சவர்க்காரம் தேய்த்து, நீர் கொண்டு அலசிய பின் துவட்டிக் கொள்வது.
வாகனம் கழுவ என்றிருக்கிற திரவத்தை ஒரு வாளியில் இட்டு அது நுரைக்க நுரைக்க நீர் நிரப்பி எடுத்துக் கொள்ள வேண்டும். நுரையில் விரும்பியபடிக்கு அளைந்து விளையாடிக் கொள்ளலாம். முழங்கை வரை வாளிக்குள் அமிழ்த்தி ஸ்பொஞ்சினை நனைத்து காரின் ஒவ்வொரு பகுதியாக தேய்த்துக் கழுவினேன். வாகனம் கழுவுவதென்பது ஒரு முழு உடற்பயிற்சி. குனிந்து நிமிர்ந்து வளைந்து எட்டியெல்லாம் வேலை செய்ய வேண்டி வரும். காரில் ஒவ்வொரு பகுதியாகத்தான் நுரைக் கரைசல் கொண்டு கழுவிய பின் நீர் கொண்டு அலசி அதற்கென இருக்கிற துணியால் துடைக்க வேண்டும். இங்கே தான் நம் குளியலும் வாகனக் குளியலும் வித்தியாசப்படுகின்றன. நம்மைப் போல் தலை முதல் கால் வரை ஒரே தடவையில் நுரை குளித்து அலம்பிக் கொள்ள முடியாது. அப்படியாக  ஒவ்வொரு பகுதியையும் தேய்த்து நுரை போகக் கழுவி துடைத்தும் விட்ட பின் கொஞ்சமாய்ப் படுகிற இளஞ்சூட்டு வெயிலில் செல்லம் போல நின்றிருந்தது.

சில்லுகளைக்  (wheel hub) கழுவும் போது தான் கொஞ்சம் கிரீசும் தூசும் நகத்தினடியில் ஒளிந்துகொண்டன. எல்லாம் கழுவி முடிக்கும் வரை வேறொரு சிந்தனையுமில்லாமல் இருந்தது அழகான  உணர்வாய் இருந்தது. தியானம் போல. கனவுகளில்லாத நித்திரை போல. 

வீட்டுக்குள் வந்த பின்னர் மனம் உணர்ந்த நிறைவும் நகத்தினடியிலிருந்த அழுக்கும்தான் வாகனம் கழுவினதற்குச் சாட்சியாக இருந்தன. கைகளைச் சுத்தப்படுத்திக் கொண்ட பின் வெயில் கொட்டிக் கிடந்த புல்லில் கிடந்து புத்தகம் வாசித்தேன். கார்திக் வேலுவின் 'மொழி  பெயர்த்த மௌனம் ' கவிதை நினைவுக்கு வந்தது. இலக்கியச்  சந்திப்புக்கு எதைக் கொண்டு செல்ல என்று இதுவரை இருந்த  குழப்பம் தீர்ந்தது. 

சந்திப்பிற்குப் போகும் வழியில் எதிர்பாராத ஒரு அழகான நிலவைக் கண்டேன். உதட்டில் புன்னகையொன்று வந்து குந்திக் கொண்டது. பூமிக்கு மிகவும் அண்மையில் நிலவு வரும் காலத்துப் பூரணைக்கு அடுத்த நாள். பெரியதொரு பந்து. கோழிக் குஞ்சினதை விடக் கொஞ்சம் அழுத்தம் கூடின மஞ்சள் நிறத்தில். அடிவானத்தில் சில மரங்களின் பின்னால் முகில்களோடு  மறைந்து விளையாடிய வட்டப் பந்து. சந்திப்பு நடக்கும் இடத்திற்கு நிலவைக்  கண்டு ஐந்து நிமிடங்களுக்குள் போய் விட்டேன். அங்கு நின்றவருக்குக் காட்டுவதற்கிடையில் மஞ்சள் வெளிறி பந்தும் சற்றே மேலேறி விட்டிருந்தது. கொஞ்ச நேரம் நிலவையே ரசித்துக் கொண்டிருந்தோம். மூன்றாவமர் வர, அவருக்குக்கும் காட்டினோம். சந்திப்பு முடிந்து கலையும் போது நிலவு உயரத்தில் சின்னதொரு வெண்பந்தாகிச் சிரித்துக் கொண்டிருந்தது. 

முன்னமே தெரிந்திருந்தாலும் பல வேளைகளில் உணர்ந்தாலும் இப்போ கொஞ்ச நாட்களாக திரும்பத் திரும்ப எனக்கு நினைவுறுத்தப்படுகிறது ஒரு நாளினையும் வாழ்க்கையையும் அழகாக்குவது எதிர்பாராமல் வரும் சின்னச்சின்னத்  தருணத்துச்  சந்தோசங்கள்தான் என்று. அதையே கொஞ்ச நேரம் சந்திப்பில் பேசிக் கொண்டிருந்தோம். தேவதேவனின் கவிதையொன்றைப்  பற்றிப் பகிர்ந்து கொண்டார் ஒருவர்.

வேறெதையும் எழுதாவிட்டாலும், இன்றைய என் நாளை  அழகாக்கிய கார் கழுவினதும் நிலவைப் பார்த்ததும் போன்ற தருணங்களைச் சில நாட்களுக்கொருமுறையாவது  இங்கே பதிந்து வைக்கும் உத்தேசம்.

உங்கள் நாட்கள் எதனாலானவை? 

வாழ்வதற்கு ஒரு வண்ணம்


உங்களுக்கென்று மிகப் பிடித்த ஒரு (அல்லது சில/பல) நிறங்கள் இருக்குமல்லவா? எனக்கும் சில நிறங்களிருக்கின்றன. என் மனநிலையைப் பொறுத்து ஒவ்வொரு நேரங்களிலும் ஒவ்வொரு நிறம் - பச்சை நிறமே பாட்டிலே வருவது போல. ஆனாலும் 80 - 85% அது ஒரு குறிப்பிட்ட நீலம். அதை நான் என் இருபதுகளின் ஆரம்பத்தில் கண்டு கொண்டேன். இன்றுவரை அதுவே எனக்கு மிகப் பிடித்தமான நிறமாயிருக்கிறது. 


கிட்டடியில் களை பிடுங்க வேண்டி வந்தது. களை என்று தெரியும். வளரவிடக் கூடாதென்று தெரியும். ஆனாலும் அழகாயிருக்கிறது என்று வளரவிட்டுவிட்டேன். பார்த்துப் பார்த்து வளர்த்த ஒரு செடியினடியில் முளைத்தது. பார்த்ததன் சீத்துவம் இவ்வளவுதானா என்று நீங்கள் கேட்கக் கூடும். ஆனால் கொஞ்ச நாள் செடியினைக் கவனிக்க முடியாமல் போய்விட்டது. அதனோடு வழமை போல பேசி, தருகிற பழத்திற்கு நன்றி சொல்லவில்லை. எப்படியோ களையும் வந்துவிட்டது. சும்மாவும் இல்லை, கொடியோடு சேர்ந்து அதுவும் கிடுகிடென வளர்ந்தபடி. செடிக்குப் போகவேண்டிய சத்தினைக் களை உறிஞ்சுவதைக் கவனித்தேன். களையை பேசாமல் விட்டால் என்ன என்று தோன்றிய ஒரு பொழுதில்தான் அதனால் செடிக்கேற்படும் சத்துக்குறைபாட்டையும் பூக்கள் குறைந்ததையும் காண நேர்ந்தது. 


அழகாய்த்தானிருந்தாலும் களையைப் பிடுங்கி எறிய வேண்டும் என்று புரிந்த தருணத்தைப் போல ஒரு சின்ன ஆனால் தெட்டத் தெளிவான ஒர் கணத்தில் தான் எனக்கு மிகப் பிடித்தமான நீல நிறத்தை நான் கண்டுகொண்டேன். ஒரு வகை நீலம். மிக அழகான நீலம். அதைப் போல காண்கிற போதெல்லாம் பக்கத்திலிருக்கும் ஆளைக்கூப்பிட்டு, இது மாதிரி ஆனா இதுவல்ல என்று சொல்ல வைக்கிற, எனக்குள் கண்டெடுத்து, எனக்கு வெளியே நான் தேடுகிற நீலம் எனக்கேயானது. எத்தனையோ காட்சிகளில் என் மனக்கண்ணில் தன்னை வெளிப்படுத்துவது. எனக்குப் பல உணர்வுகளை அளிப்பது. என்னைப்பற்றியோ பொதுவாக வாழ்க்கை பற்றியோ நினைத்தால் கட்டாயம் படிவது இந்த நீலம் தான். எனது நீலம்.


அட! இப்படி நடந்துவிட்டதே என்று கடந்து போனதைப் பற்றியோ, நாளைக்கு/இனி வரும் நாட்களில் என்ன நடக்கும் என்றோ யோசித்து அதிலேயே மூழ்கிப் போய்விடாமல் வாழ்க்கை என்பது அதன் வழியில் வாழ்ந்து பார்க்கத்தான் என்பது என் எண்ணம். எத்தனை எத்தனை மனிதர்கள், உணர்ச்சிகள், அனுபவங்கள், காட்சிகள்! என்றோ ஒரு நாளைக்குத் தெரியும் நினைத்துக் கொண்டதும் நடந்து கொண்டதும் சரியா என்று. அதற்கிடையில் எனக்குத்தான் என்னைப்பற்றிக் கணக்கில்லாச் சந்தேகங்களும் கேள்விகளும்.ஒரு இலக்குமில்லாமல் நகர்கிறேன் போலத் தோன்றுகிறது. 


இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டமைப்புப் பிடிக்காமல் ஆனால் முழுதும் அந்தக் கட்டுகளைத் தகர்த்து வந்து விடவும் முடியாமல் என்னவாய் இருக்க வேண்டும் என சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதின் தெளிவற்ற சித்திரம் தான் நான். வியாபார உலகிலே பார்த்தால் குறிப்பிட்ட இலக்கு வைத்து அதை நோக்கிச் செயல்பட்டு வெற்றியடைகிறார்கள். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் அதைப் பின்பற்றலாம் என்றே தோன்றுகிறது. என்ன செய்ய இப்படி நடந்து விட்டது/இப்பிடித்தான் நடக்கும் என்று இல்லாமல் நாமாய் முடிவெடுத்துச் செயல்படுத்தி - கஷ்டமாயிருந்தால் தான் என்ன, செய்து பார்ப்பதுதான்! - அதன் படிக்கு வாழ்க்கையைக் கொண்டு போனால்? எங்கள் வழியை முழுக்க நாங்களே தீர்மானித்துக் கொள்வது என்று வந்துவிட்டால் எங்கள் முடிவுகளுக்கும் செயல்களுக்கும் முற்றுமுழுதாக நாமே பொறுப்பு. சற்றுப் பயமுறுத்தும் ஒரு செயல் அல்லவா? எங்களுக்கு நாங்கள்தான் பொறுப்பு. வேறு யாரிலும் பொறுப்பைச் சாட்டிவிடவோ குறை சொல்லவோ முடியாது. அப்படிச் செய்வதனால் இசைந்து போகும் இயல்புக்கு முதல் வேட்டு. நாம் இசைந்து போகத்தான் பழக்கப்பட்டிருக்கிறோம். குடும்பத்துக்கு, பள்ளிக்கு, நண்பர்களுக்கு, அலுவலகத்திற்கு, இனத்திற்கு, மொழிக்கு, மதத்திற்கு என்று ஒரு முடிவில்லாத பட்டியல். வித்தியாசமாய் இருப்பது வேண்டாததாய்ப் பார்க்கப்படும். ஒதுக்கி வைக்கப்படுவோமோ என்று ஒரு பயம். அதுதான் உள்ளூர ஆட்டுவிக்கிறது. 


அந்தப் பயத்தை ஒதுக்கி வைத்து விட்டு எங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் கொண்டு, எவ்வள்வு இலகுவானதென்று கணிக்காமல், கடினமானதாயே இருந்தாலும் எங்களுக்கென்று ஒரு பாதையைத் அமைத்துக் கொள்ள வேண்டும். கடினமாயிருக்கும் பாதையின் பயணமும் இலக்கினை அடைந்தவுடன் வரும் மகிழ்ச்சியும் தரும் சாதனை உணர்விற்கு அளவுகோலில்லை. எந்தவித 'ரிஸ்க்'ம் வாழ்க்கையில் இல்லாமல் இருக்கிறதன் ஆபத்து நமக்கென்று ஒரு பாதையை அமைத்து அதில் வரும் இடர்களைச் சந்தித்துத் தோல்வியடைவதிலும் பார்க்க மிகமிக மோசமானது.  


எனக்காய் இந்த உலகில் எங்கோ காத்துக் கொண்டிருக்கிறது எனது நீலம். அதனை தேடிப் போகிறேன் நான். கண்டடைந்தால் அகத்திலும் புறத்திலும் நீலம். இல்லையேல் அகத்தில் மட்டும். எப்படியும் என் நீலம் என்னிடமிருக்கும்..



வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன்.



(என் கருத்துப்  பிந்தியதாயினும், எதையும் மாற்றப் போவதில்லையாயினும்) நான் கற்ற மட்/ வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் சரஸ்வதி சிலை நிறுவல் எனக்கு தனிப்பட்ட அளவில் ஏமாற்றமளிப்பதாயுள்ளது.

சிலை நிறுவப்பட்டுவிட்டது. எதற்காயிருக்கலாம் என்று யோசித்துப் பிடிப்பது மிகச் சுலபம். அத இந்தப்பதிவில சொல்ல வரவில்லை. பள்ளிக்கூட வளாகத்தில் சரஸ்வதியின் சிலை ஏன் தேவையில்லை  என்பதற்கான காரணங்களை முன்வைப்பதே இதன் நோக்கம்.

1. கிறிஸ்தவ மிசனரிமாரால் 1820ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாயினும் இப்பள்ளி ஒரு தேசியப் பாடசாலையாதலால் தற்போது எவ்வித சமய சார்புடைய நிறுவனங்களாலும் நடத்தப்படுவதில்லை.

2. அரசியலும் சமயமும் கற்பிக்கப்பட்டாலும், பாடசாலையானது அரசியல் மற்றும் சமய சார்பற்றிருக்க வேண்டும்.

3. பாடசாலையில் இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மாணவிகள் கற்கின்றனர். சிங்கள அரசினால் இழைக்கபட்ட அதே அநீதி தானே இங்கும் கிறிஸ்தவ இஸ்லாமிய மாணவிகள்/ஆசிரியர்கள் மீது இந்துக்களால் பிரயோகிக்கப்பட்டுள்ளது.  சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுவதாலும் அவர்களின் குரல் மதிக்கப்படாது போவதாலும் ஏற்படும் மனவுளைச்சல், தொடரும் மனத்தாங்கல்கள் பற்றித் தமிழரான எங்களுக்குத்தான் உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறதே. கற்றவைகளும் அனுபவங்களும் தேவையான எச்சந்தர்ப்பத்திலும் நமக்கு கை கொடுப்பனவாக இருக்க வேண்டும்.

4. இந்தச் சிலையை அமைப்பதற்கான செலவீடு என்னவென்று தெரியவில்லை. ஆனால், கணிசமான தொகையாக இருந்திருக்க வேண்டுமென்பது எனது கணிப்பு. உதாரணத்திற்கு ரூ 1,00,000 என வைத்துக் கொள்ளலாம். சிலை அமைப்பதை விட பின்வருவனவற்றில் ஏதாவொன்றிற்காவது அப்பணம் செலவழிக்கப்பட்டிருந்தால் பிரயோசனமாயிருந்திருக்கும் என நினைக்கிறேன்.


- பாடசாலை நூலகத்திற்குப் புத்தகங்கள் வாங்குதல்.
- விளையாட்டு உபகரணங்கள் வாங்குதல்
- கணினிகள் வாங்குதல்.
- அறிவியல் கூடத்திற்கான உபகரணங்களோ, வேதிப் பொருட்களோ வாங்குதல்.
- வேறு தேவையான உபகரணங்கள் / தளவாடங்கள் வாங்குதல்.
- வறுமையான குடும்பத்து மாணவியரில் ஒருவரையோ சிலரையோ தேர்ந்தெடுத்து அவர்களுக்கான படிப்புச் செலவை ஏற்றுக் கொள்ளல். பணத்தை வைப்பிலிடுவதன் மூலம் அதன் பாவனைக்காலத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
- தேவைப்படும் கட்டிடத் திருத்த வேலைகள் செய்து கொள்ளல்.


இவை மட்டுமே எனக்குத் தோன்றியவை. இதை விட இன்னும் பலவற்றிற்கு  இப்பணம் ஆக்கபூர்வமாகப் பயன்பட்டிருக்கலாம்.

மும்மதத்தவரும் கற்கும் பள்ளியில் பெரும்பான்மை மதத்தவர் தெய்வத்தின் சிலை சொல்வது என்ன? எல்லா நேரத்திலும் எல்லாருடைய கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியனவல்ல என்பதை நாம் அறிவோம். ஆனால், சரியான கருத்து (அது ஒன்றேயாயினும்) பகிரப்படும் போது அங்கே ஒரு உரையாடலுக்கான தேவை வருகிறது. சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் அமைகிறது. சிலைக்கான மெதடிஸ்த திருச்சபையின் கண்டனம் சமய சம்பந்தமானது என்றாலும் அக்கண்டனத்திற்குப் பதிலாக 'யார் என்ன சொன்னாலும் சிலை நிறுவல் நடந்தே தீரும்' என்று பதிலளித்த அதிபர் மாணவியருக்குச் சொல்லாமல் சொன்னது என்ன? ஏனையோரின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியனவல்ல என்பதைத்தானே!

பிந்திய செய்தி:
  http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=36876


My dear school, I am disappointed and ashamed. 


ரயில் வாசம்

இன்றைக்கு ரீடரில் வாசிக்கவென்று தொட்ட அனைத்தும் ஏதோவொரு விதத்தில் ரயிலையோ அல்லது ரயில் நிலையத்தையோ பேசின.

முதலில் பார்த்தது "இவள் என்பது பெயர்ச்சொல்" . அதில் காட்டியிருந்த ரயில் நிலையத்துப் படத்தைப் பார்த்ததும் எனக்குள் ஞாபகம் வரக்கூடிய ஒரே ரயில் நிலையமும் அதன் படியே வந்ததும் ஏறாவூர் ரயில் நிலையமே. (அதைத்தவிர இன்னொரு ஊரென்று நினைத்தால் ரயில் நிலையத்தோடு வருவது எம்மியின் தொரனாகொடவாகத்தானிருக்கும்.) எனது ஞாபகத்தில் இருக்கிற ஏறாவூர் ரயில் நிலையத்திற்கு மிகப் பொருத்தமாய் அமைந்திருந்தது அந்தப் படம். எனக்கு ஞாபகமிருந்து படத்தில் இல்லாமலிருந்தது தென்னோலையால் கட்டப்பட்ட தயிர்முட்டிகளே. விளையாடுவதற்குப் பொருத்தமேயில்லாத பிளற்போமில் விளையாடிய ஞாபகமிருக்கிறது. அங்கே என்னுடன் கூட விளையாடுபவர் ஓர் அக்கா. அங்கே பணிபுரியும் அவரது அப்பாவுக்கு உணவு கொண்டு வருவார். அல்லது அவரைப் பார்க்க வருவார். சித்ரா என்று பெயர். நீண்ட பின்னல். ஆளும் அவரது சிரிப்பும் அவ்வளவு அழகு.

அவரை நிறைய நாள் மறந்து போய், திடீரென்று ஏறாவூர் பற்றிய உரையாடலோ ஞாபகமோ ஏதொவொன்றில் திரும்பக் கண்டெடுத்தேன். விவரம் தேடிய போது சுவிசில் இருக்கிறார் என்று சொன்னார்கள். சுவிசுக்குப் போன போது தேடினால் சுவிசில் இருப்பதாய்ச் சொன்னது வேறொரு சித்ராவாம். தேடுபவர் இன்னும் ஏறாவூரிலாம். ஒரு சேர எமாற்றமும் நம்பிக்கையும் கலந்து உணர்ந்தேன். முழுக்கவும் இல்லையென்று ஆகவில்லையல்லவா!

எனக்கேற்பட்டவை ரயில் நிலையங்களுக்கு மிகவும் பொருந்தக் கூடிய உணர்ச்சிகள். பிரிவிற்கும் சந்திப்பிற்கும் அவற்றோடு கூட வரும் உணர்ச்சிகளுக்கும் எண்ணங்களுக்குமே என ஏற்படுத்தப்பட்டவை விமான, ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள். பிரிவின் சோகமா, சந்திப்பின் சந்தோசமா/ஆசுவாசமா அல்லது தொமஸ் தோக் ரயிலைக் கண்ட என் ரோசாப்பூ மருமகளின் கண்களில் மின்னியது போன்ற பரவசமா.. எத்தனை உணர்ச்சிக் கலவைகள். கூடவே ரயில் நிலையத்திற்கு அப்பால் எங்கேயோ உள்ள கிராமத்திலிருந்து அம்மாவிடம் மருந்தெடுக்க வந்தவேளை கண்ட ரயிலைப் பார்த்து தனது தாயிடம் அது என்னம்மா என்று கேட்ட சிறுவனின் ஞாபகம் வருது. அது வந்தால், 90களின் இறுதியில் யாழ் போனபோது சோதனைச் சாவடிகளில் கண்ட தண்டவாளம் ஞாபகம்வரும். அங்கேயிருந்து மனம் பழையபடி எறாவூருக்கு வந்து ஐந்து சதத்தை எடுத்துத் தண்டவாளத்தில் வைத்துப்பார்க்கிற, அல்லது காந்தம் வைத்திருக்கும் செல்வம் அண்ணாவினதும் இன்பனண்ணாவினதும் பின்னாலேயே அலைந்து கொண்டிருக்கும் ஒரு சிறுமியிடம் வந்து நிற்கிறது. எண்ணங்களும் நினைவுகளும் ரயிலைப் போலத்தான் இல்லையா.. நீண்டு கொண்டே போகின்றன. தரித்து, மனிதர்களை ஏற்றி, இறக்கிப் பயணித்தபடிக்கு .

பயணத்தில் எம்மீது படிந்து போகும் ரயில் வாசமாய் மனிதர்கள்..

இன்னுமொரு மழையிரவு

கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது மழை. நனையாமல் பார்க்கும் போதும் நல்லாய்த்தான் இருக்கிறது. ஆனாலும், அடுத்த கட்டம் பற்றிச் சிந்திக்காது நனைந்து கொள்ளும் அழகில்லை. ஏன் அந்தச் சிறுபிள்ளை ஆசை அப்படியே (பலருக்கு) இருப்பதில்லை? சட்டைப்பையில் இருப்பதை நனையாமல் பற்றிக் கொண்டு குடைக்குள்ளோ கிடைத்த கூரையின் கீழோ எதற்கு மழையுடன் கண்ணாமூச்சி? நனைந்தால் சளி பிடிக்கும் காய்ச்சல் வரும் என்று குழந்தைகளுக்குப் பூச்சாண்டி காட்டி மழையுடன் போடும் ஆட்டத்தைக் கெடுப்பது ஏன்? ஒரு மனமார்ந்த நட்பின் இதத்தோடு தொட்டுப் பேச தடவிக்கொடுக்க, சந்தோசமாய் விளையாட, ஏன், எங்கெ யாரிருக்கிறார் என்று கவனிக்காமல் முத்தமிடக்கூட மழை துளித்துளியாய் சரஞ்சரமாய் இறங்கிவர அதைப் புறக்கணிப்பானேன்? எத்தனை விதமாக உருவெடுக்கிறது - மனிதரைப்போலவே. அது மட்டுமே போதாதா எந்தக் கணத்தையும் அழகாக்கிவிடுவதற்கு. மழை வருவது தெரிகிறதா உங்களுக்கு? அதன் அழைப்புக் கேட்கிறதா? அதன் தொடுகையை, நடனத்துக்கான அழைப்பை உணரமுடிகிறதா? உங்களால் அதனுடன் ஆட்டம் போட முடியாவிட்டாலும் பரவாயில்லை. அதன் ஆட்டத்தைப் பாருங்கள். மனதிலிருப்பதைப் பேசுங்கள். அதைக் கேட்பதற்கு மழையைப் போல வேறு யாருமில்லை, பேசாதிருந்தாலும் மழை ஒன்றும் சொல்லப்போவதில்லை. அதற்குத் தெரியும் மௌனமும் பேச்சுத்தானென்று.

என் இரவுகளிலே மழை. என் பகல்களிலும் காலை மாலைகளிலும் இடைப்பட்ட எவ்வேளைகளிலும். மேகத்திலிருந்து வராது விட்டாலும் ஒவ்வொரு விதமான மழை என்னைத் தொடர்ந்தபடியேதான் இருக்கிறது. எண்ணங்கள் குறிப்பிட்ட ஒருவரிலிருந்து துளியாய் ஆரம்பித்து பெருமழையாய் பலபேரை நினைவூட்டிப் போகும். சாரலாய்த் தொடங்கும் ஒரு நட்பின் தொலைபேசி அழைப்பு அடைமழைப்பேச்சு. இடியென முழங்கி வார்த்தையால் ஆலங்கட்டி மழைபோல் தாக்கும கோவங்கள். துளித்துளியாய் எண்ணிக்கையும் அளவும் அதிகரிக்கிற ஆசீர்வாதங்கள். மழை எப்போதும் எல்லாரையும் எதோவொரு வடிவில் தொடர்ந்தபடியேதானிருக்கிறது.


இலைகள் தெளிக்கும் பன்னீராய் தரை தொட்டு, கண்ணாடியில், கூரையில் எங்கும் நெளி நெளியாய் பளிங்குப் பாம்பாய் நெளிந்து ஓடுகிறது மேகத்திறங்கிய நீர். அதனோடு கூடவே நடனமாடியபடி இலையுதிர் காலத்துக் கடைசி நாளின் வண்ண இலைகள்.. சொல்லாமலேயே அவற்றோடு ஓடிப்போய்விடுகிறது மனம்.

சின்னச் சின்னச் சந்தோசங்கள்

நிறைய நாளாக(வருடங்கள் என்று சொல்லணுமோ!!) ஒரு உடற்பயிற்சியும் இல்லாமல் இருந்துவிட்டேன். உடம்பின் சீத்துவம் பென்னா (அண்ணர்) போன ஆண்டு வந்திருந்த போதுதான் ஓடி வெளிச்சுது. அந்தாள் இருக்கிறதே மலை நிறைஞ்ச நாட்டில. அவரிட வீட்டுக்குப் பின்னாலயும் முன்னாலும் பக்கவாட்டிலேயும் என்று மலை மயம். அது வழியே ஏறி இறங்கி அநியாயத்துக்கு fit ஆக இருந்திச்சு மனிசன். நம்ம ஏறி இறங்கினதெல்லாம் வீட்டில இருந்த படியிலயும் மனிசரிலயும்தான்!! அவரோட குன்றொன்று ஏறுவமென்று போனன். என்க்கும் மலையேறிறது விருப்பம். ஆனா மலை இல்லாத இடத்தில (அதாரது பென்டில் ஹில், செவன் ஹில்ஸ் எல்லாம் இருக்கே என்டுறது!!) நான் என்ன செய்ய!

சரி, பென்னா ஏறினார். நான் ஏறப் பார்த்தன். ம்கூம்... அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ என்டு நான் திரும்பி சிட்னிக்கு வந்திட்டேன். பென்னா காத்தோட சண்டை பிடிச்சு மலையேறின கதை கங்காரு கொவாலாப் பதிவில வாசிக்கக் கிடைக்கிறது. சந்தோசமா சைக்கிலும் ஓட spinning என்ட வகுப்புக்குப் போய் வண்ணம் காட்டினார். ஆனா தங்கச்சி ரோடிலே மட்டும் கிழமைக்கு ஒருதரம் போல சைக்கில் ஓட்டிட்டு விட்டுட்டா. இப்பிடி இருக்க, வீட்டிலே ஒரு நண்பன் தங்க வந்தான். இரண்டு மாதம் நாங்க உண்டு வளர்ந்தம். எங்களுக்கே சகிக்காம ஓகஸ்ட் மாசத்துக் குளிரையும் பொருட்படுத்தாம ஒவ்வொரு நாளும் 2 கிலோமீட்டர் (அதாவது செய்தமே!) நடந்து கொஞ்சம் வளைஞ்சு குனிஞ்சு நிமிர்ந்து உடற்பயிற்சி செய்தம். மிஞ்சிப் போனா 1 மாதம் தான். அவன் ஊருக்குப் போனதும் இங்க உடற்பயிற்சி நிறுத்த்ம்.

புது வேலையொன்றில சேர்ந்து நாலைஞ்சு கிழமையால நிமிர்ந்து பாத்தா அங்க இலவசமா ஒரு ஜிம் இருக்கு. விடுவமா.. 4 கிழமையா போறன். கொஞ்சம் குரொஸ் ட்ரெய்னர், கொஞ்சம் ட்ரெட்மில். இந்தக் கிழமை துடுப்பு வலிக்க ஆரம்பித்திருக்கிறேன். உடற்பயிற்சி செய்த முதல் கிழமை வேணாமென்று போய்விட்டது. ஆனாலும் விடுவதில்லை என்று உறுதி பூண்டிருக்கிறேன். கடந்த வாரமெல்லாம் உடற்பயிற்சி செய்து முடித்ததும் ஒரு .. என்ன சொல்லலாம், buzz.. ஒரு புத்துணர்ச்சி இருந்தது. இரண்டரைக் கிழமைப் பிரயத்தனத்தின் பின் இன்றைக்குத்தான் களைப்பில்லாமல் 1கி.மீ. முழுமையாக ஓட முடிந்திருக்கிறது. என் 5 கி.மீ. ஓட்ட இலக்கை விரைவில் அடைந்து விடுவேன் என்று நம்புகிறேன்.

இன்றைக்கு அப்படி நிறுத்தாமல் ஒடி முடித்ததும் ஒரு சந்தோசம் வந்தது பாருங்கள்.. இன்னமும் என்னில் ஒட்டியிருக்கு. இந்தப் பதிவிலே சொல்ல வந்ததே அதைப் பற்றித்தான். ஆனா வேற திக்கில் கொஞ்சம் போய்விட்டது. சின்னச் சின்னச் சந்தோசங்கள். ஒரு நாளின் வண்ணத்தையே மாற்றி விடுகிற நிகழ்வுகள். ஞாயிற்றுக் கிழமை அப்படி இரண்டு விதயங்கள். அன்றைக்கு என் சிட்னித் தங்கச்சியின் பிறந்தநாள் பரிசுக்கு புதையல் வேட்டை உருக் கொடுத்திருந்தோம். கூடச் செய்ய வேண்டியவர் விடுமுறையில் இந்தியாவில். ஒரு தடயம் நாங்கள் நினைத்ததை விட அவவுக்குக் கடினமாக அமைந்து விட்டது. கண்டு பிடித்ததும் குரலாலேயே துள்ளினா. அதுவும், எல்லாம் முடிந்த பிறகு அவ இறுக்கிக் கட்டிப் பிடிச்சு "இன்றைய நாளுக்கு நன்றி அக்கா" என்றதும் என்க்கு அதே சந்தோசத்தைத் தந்தது.

வீட்டுக்குப் போக ஆயத்தப்படுத்துகையில் பலத்த மழை. மாமா நின்று நிதானமாய்ப் போங்கள் என்றார். ஆறு மணியாயிற்று, அவர் சாமி கும்பிடப் போனார். அவர் சாமி கும்பிடும் போது உடனிருப்பது ஒரு அலாதியான அனுபவம். என் பக்தியோ பெல் வளைவு மாதிரி. திருவிழாக் காலங்களில் உச்சத்தைத் தொடும். அவருடன் கூட நின்று சாமி கும்பிட்டு, தேவாரம் பாடி திருநீறும் பூசிக் கொண்டு புறப்பட்டேன். மழை சற்றே ஓய்ந்திருந்தது போல விளையாட்டுக் காட்டியது. அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு இரண்டு நிமிடங்களில்லை. கொட்ட
த் தொடங்கியது. அன்றைய நாளை அசை போட்டபோட்டபடியே ஒரு அமைதியான பாதையில் வந்து கொண்டிருந்தேன். ஒரு கிழவர் இருக்கையுள்ள உருட்டிக் கொண்டு போகிற நடையுதவி உபகரணத்தைத் மெல்ல்ல்ல்லத் தள்ளிக் கொண்டு நடந்து கொண்டிருந்தார். 70- 75 வயதுதானிருக்கும். ஒரு இளநீல சேர்ட் அணிந்திருந்தார். அதில் மழை நனைத்த தடங்கள் கொஞ்சம் கடும்நீலநிறமாகத் தெரிந்தது. எனக்கோ அவரைக் கண்டதும் அடே நனைந்து கொண்டு போகிறாரே, ஏதேனும் வருத்தம் வந்தால் என்ன செய்ய, பாவம் என்று தோணியது. ஏற்றிக்கொண்டு போய் விடலாமா என்றும் என்ன மாதிரியா ஆளோ என்றும் நான் இரண்டு விதமாக யோசித்து முடிப்பதற்குள் அவரைக் கடந்து போயிருந்தேன். கடைசியில் ஏற்றிக் கொள்ளலாம் என்று நினைத்து வாகனத்தைத் திருப்பிக் கொண்டு வந்து அவரிடம் "கொண்டு போய் விடவா, நனைந்து கொண்டு போகிறீர்களே" என்றால்", தன் தலையைச் சுட்டி "எனக்குத் தலையில் சுகமில்லை" என்றார் மனிதர். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. "என்னிடம் குடையிருக்கிறது; ஆனால் நனையப் பிடிக்கும் என்பதால் நடக்கிறேன். என்னைப் பற்றிக் கவலைப்படாதே" என்று சொல்லி மீண்டும் நடக்க ஆரம்பித்தார். என் உதட்டில் ஒட்டிக் கொண்ட புன்னகை வீடு வந்த பின்னும் அகலவில்லை. அன்றைய நாளை அரை நிமிடத்தில் மிகவும் அழகானதாக்கிப் போனார் அந்தக் கிழவர்.

இப்படிச் சின்னச் சின்னச் சந்தோசங்கள் போதுமானதாயிருக்கு வாழ்க்கையை அனுபவிக்க.

ஒரு மாணவியையும் ஓர் ஆசிரியரையும் பற்றி.

இன்றைக்கு நண்பியுடன் அவளது பிள்ளைகளின் அனுமதிப் படிவத்தைக் கையளிப்பதற்காக அருகிலுள்ள பள்ளிக்கூடத்திற்குச் சென்றிருந்தேன். இங்கே ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பள்ளிக்கூடம். ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் எல்லை வகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கும், அந்த எல்லைக்குள்ளே வசித்தாற்தான் அந்தக் குறிப்பிட்ட பள்ளிக்கு அனுமதி. வேறு பள்ளிக்கூடத்திற்குப் போக முடியாது. எல்லைக்குட்பட்டிருந்தால் அனுமதி அப்பள்ளியில் தந்தேயாக வேண்டும். வேறு கதையில்லை. 6ம் வகுப்பிலிருந்து உயர்நிலைப் பள்ளி செல்லும்போது பரீட்சை ஒன்றிருக்கிறது. தேறினால் பிடித்தமான பள்ளிக்கூடத்திற்கு அனுமதிக்கு விண்ணப்பித்துப் (கிடைத்தால்) போகலாம்.

சரி, இன்றைய சின்னக்கதைக்கு இதொன்றும் அவசியமில்லை.(அப்ப ஏன் சொன்னேன்?) படிவங்களைக் கையளித்து வெளியில் வந்தோம். காரியாலயத்திற்கும் வெளிக்கதவுக்கும் இடைப்பட்ட ப்குதியில் பள்ளி நூலகம். அதை நாங்கள் கடந்து கொண்டிருந்த போது ஒரு மாணவி அதற்குள்ளிருந்து வெளியில் வந்தா. பத்து அல்லது பதினொரு வயதிருக்கும். "Whoo! next is Maths. I love Maths. Here I come" என்று துள்ளிக் கொண்டு வகுப்பை நோக்கிப் போனா. நண்பியும் நானும் புன்னகைத்துக் கொண்டோம்.

எனக்கும் கணிதம் மிகவும் பிடித்தமான பாடமாக இருந்தது 7ம் ஆண்டு வரை. கொழும்பு வந்ததும் பிடிக்கவேயில்லை. 8ம் ஆண்டு கொஞ்சம் பரவாயில்லை (புத்தகமும் கொஞ்சம் சிறிதானது போல ஒரு மாயை. அது மாயை தான் ..ஏனென்றால் 7ம் ஆண்டுக்குரிய புத்தகத்தினைப் போலல்லாமல் தடிப்பம் குறைக்கப்பட்டு நீள அகலம் அதிகரித்திருந்தது. அவ்வளவுதான்). ஆசிரியர்களால்தான் பெரும்பாலும் பாடங்களில் விருப்போ வெறுப்போ ஏற்படுகிறது என்பதை நம்புகிறேன். ஒன்பதாம் ஆண்டில்தான் ஒரு நல்ல, வல்ல, அன்பான, அறிவான (அதாவது எப்பிடி படிப்பிச்சா எங்களுக்கு வால் உட்பட எல்லாம் ஏறும் என்று தெரிந்த) அழகான ஒரு ஆசிரியர் வாய்த்தார். திருமதி ஜோண். அவவின் பாடம் என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். நானும் விதிவிலக்கில்லை. ஒன்பதாம் ஆண்டில் புதிதாய் அப்பள்ளிக்கூடத்தில் சேர்ந்திருந்தேன். முதல் நாளே வெளியில் ஏதோ பிராக்குப் பார்த்துக் கொண்டிருந்தவளை "நீர் பாத்துக்கொண்டிருக்கிறதை விட இன்டெரெஸ்டிங்கா சொல்லித்தருவன்" என்று சொல்லித் (திட்டாமல்) தன்பக்கம் திரும்ப வைத்தவர். 9 - 11 ம் ஆண்டுக்குக் கணிதவகுப்பு அவருடையது. 11ம் ஆண்டில் பொதுப் பரீட்சையில் கணிதப் பரீட்சை முடித்து வெளியில் வந்து அவவிடம் விடைகள் பற்றிப் பேசுகையில் தான் உறைத்தது ஒரு (இலகுவான) முழுக் கேள்வியைத் தவறவிட்டிருந்தது. அதுக்காக திரும்பப் போய்ச் செய்யவா முடியும்? நெஞ்சுத் தண்ணி வத்தினது போல உணர்ந்து கைகாலெல்லாம் சில்லிட்டுப் போய் நிற்கையில் அவவிடம் திட்டும் வாங்கிக் கட்டிக் கொண்டேன். நல்ல காலத்திற்கு சிறப்புச் சித்தி(D) கிடைத்தது.

அந்தப் பெண் அப்படி சொல்லித் துள்ளிக் கொண்டு போனதும் எனக்கு திருமதி ஜோணின் ஞாபகம்தான் வந்தது. திருமதி ஜோணைப் போல ஒரு கணித ஆசிரியர் வாய்த்திருக்கலாம் அம்மாணவிக்கும். இன்றைய பொழுதை அழகானதாக்கிப் போன அந்தப் பெண்ணுக்கு நன்றி.

புதிர்க்காலம்

இருந்து பேசிக் கொண்டிருந்த போது மாமா கதைகள் சொல்லிக் கொண்டே போனார். ஒரே சிரிப்புத்தான். கூடவே இரண்டு புதிர்கள் சொன்னார்... மண்டையை உடைக்காத குறைதான். விடைகள் தெரியவில்லை.. நீங்களாவது சொல்லுங்களேன் (உங்கட புண்ணியத்தில நான் 'கெட்டிக்காரி' என்று பெயரை வாங்கிக் கொள்கிறேன்):

முதலாவது வலு எளிமையான கூட்டல்-கழித்தல் கணக்கு என்றார்.
"29 இல் 32 போனால் எவ்வளவு?"
-3, 29ல 32 போகாது இவையிரண்டும் தான் எங்கள் விடைகளாயிருந்தன. ஆனால் அந்த இரண்டும் பிழையாம். சய (-) இல்லையாம், சக (+) தானாம். 29ல 32 போகுமாம்.. (எங்க போகுமெண்டு கேட்கக் கூடாது)


இரண்டாவது
கொஞ்சம் நீட்டுக் கதை.. புதிர் கடைசியில.
ஓர் ஊரில ஒரு குடியானவன் இருந்தானாம். அவனுடைய மனைவி இனியில்ல எண்டளவு சோம்பேறியாம். (backgroundல யாரப்பா அது....ஷ்!!!!)
குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தாவென்டு கேட்டால் "இப்பத்தான் வேலையெல்லாம் முடிச்சு வந்து கதிரையில குந்துறன்.. எழும்ப வைக்கிறீங்களா!" என்பாவாம்.

திருவாளர் குடியானவன் பார்த்தார்..இது வேலைக்காகாது என்டு, ஒரு வேலைக்காரியை கொணர்ந்தாராம். மனைவிக்கும் ஒரே சந்தோசமாம். என்ன வேலை சொன்னாலும் விரைவாய் முடித்தாளாம். போய் அரிசியைக் களைந்து உலை வை என்றாராம் மனைவி. ஒரே நிமிடத்திலே வந்து நின்றாளாம் "ஆச்சு!" என்று. மனைவிக்கோ வியப்பு. சரி அரிசி வெந்ததும் கஞ்சி வடித்து விட்டுச் சொல்லு என்று பாயிலே சரிந்தாராம் குட்டித் தூக்கத்துக்கு. படுத்துக் கண்ணை மூடவில்லை .. "ஆச்சு அம்மா". மனைவிக்கோ சந்தேகம். போய்ப்பார்த்தால் சோறு அவர் கேட்ட மாதிரியே. இப்படியே என்னத்தைச் செய்யச் சொன்னாலும் நிமிஷமாய் முடித்து விட்டு முன்னால் நின்றாளாம். தொடர்ந்து வேலை கொடுத்துக் கொண்டேஏஏஏ இருக்க வேண்டும். குடியானவன் மனைவிக்குச் சந்தேகம் - இவளைப் பார்த்தால் சாதாரணமாய்த் தெரியவில்லை என்று. கணவனிடம் சொன்னாளாம் தன் சந்தேகத்தை. அவன் மனைவியிடம் கலந்தாலோசிப்பது போலச் சொன்னானாம் "வயல் உழ உதவிக்கு யாருமில்லை.. பெண்ணே உனக்கு உழத்தெரியுமா? நாளைக்காலைக்கிடையில் நாற்றையும் நட்டுவிட வேண்டும்" என்று. ஆமென்று தலையாட்டிய வேலைக்காரி அடுத்த ஐந்தாம் நிமிடம் "ஆச்சு ஐயா" என்றாளாம். இவனுக்கும் சந்தேகம் பிடித்துக் கொண்டது.

இப்படி இருக்கையிலே குடியானவன் வெளியூர்ச் சந்தைக்குப் போக வேண்டி வந்ததாம். வேலைக்காரியிடம் சொன்னானாம் "அம்மாவைப் பார்த்துக் கொள் நான் நாளைக்கு வந்து விடுவேன்". அவனும் போயாச்சு. இரவு இவர்களிருவரும் விளக்கின் திரி குறைத்துப் படுக்கையில் விழுந்தார்கள். மனைவிக்குத் திடீர்ச் சந்தேகம், கதவுக்குத் தாழ்ப்பாள் போட்டதாவென்று. "ஏடி, கதவுக்குத் தாழ்ப்பாள் போட்டதா?" .. கேட்கிறாள். வேலைக்காரிக்கோ தூக்கக் கலக்கம். எழுந்து பார்க்கச் சோம்பலில் (வீட்டுக்காரம்மாவுடன் கொஞ்ச நாளாய் இருக்கிறாளில்லையா.. பழக்க தோசம் போல!) கையை நீட்டுகிறாள். கை நீண்ண்ண்ண்டு போய் கதவுத்தாழ்ப்பாளைத் தடவிப்பார்க்க, வாய் சொல்கிறது, "ஆமாம்மா .. போட்டுத்தான் இருக்கு". கை நீண்டு போனதை குடியானவன் மனைவி அந்த மங்கல் வெளிச்சத்திலும் கண்டு விட்டாள். இது ஏதோ பேயென்று அவள் புரிந்து கொண்டாள். விடியும் வரையும் தூக்கமில்லை. பயம். கணவன் வரும் வரை பார்த்திருந்து அவன் வந்ததும் பிடித்துக்கொண்டாள். (முதலே பிடிச்சதுதானே என்றெல்லாம் சொன்னா நான் அழுதுருவேன்!)

அவனும் பேயைத் துரத்த என்ன வழி / என்ன வேலை கொடுத்தால் பேய் திரும்ப வராது என்டு யோசித்தானாம். பேயாகிய வேலைக்காரியைக் கூப்பிட்டானாம்.. "இந்தா, அம்மாவின் ஒரு தலைமுடி. இதை நெடுக்குவாக்கில் இரண்டாய்ப் பிளந்து கொண்டுவா". வேலைக்காரியும் அதைக் கொண்டு அடுப்படியில் போய் உட்கார்ந்தாளாம். பிரித்தாளாம் பின் கைகள் தட்டுவது (clapping) போல செய்து திரும்ப பிரித்தாளாம் (மாமா செய்து காட்டினார், முடிந்தவரை விளக்கமாய் எழுதியிருக்கிறேன்) .. இப்படியே இன்று வரை செய்து கொண்டே இருக்கிறாளாம்.

புதிர்: அவள் என்ன செய்கிறாள்? ஏன் குடியானவன் கேட்டதைச் செய்து முடிக்க முடியாமற் போயிற்று?

.... சொல்லுங்கப்பா!!! இல்லாட்டி என் தலைமுடிதான் போயிடும்!

சிவப்பல்லாத செம்பருத்தி

வீட்டில் வளர்க்கவென்று ஆசையாக எத்தனையோ பூமரங்கள். எல்லாத்தையும் கொண்டு வந்து வைக்க முடிகிறதா என்ன? அதாலேயே 2-3 மரங்கள்/செடிகளைத் தீர்மானித்திருந்தோம்.

எங்கேயும் ட்ரைவ் போனால் வந்தால் "அங்க பார்.. அந்த பூ வடிவாயிருக்கு".. "நிறம் நல்லாருக்கு".. "செழிச்சு வளருது" இத்தியாதிதான் கார் முழுக்க ஒவ்வொரு நிறத்திலும் அழகிலும் அளவிலும் உதிர்ந்துபோய்க் கிடக்கும். அடிக்கடி போய் வருகிற வழியென்றால் எந்த வீட்டிற்கு முன்னால்(தெருவருகே.. வீட்டு மதிலுக்கு உள்ளே அல்ல) என்ன மரம், அதில் பூ என்ன நிறம் என்றெல்லாம் மனப்பாடம்.

ஒரு சுபயோக சுபகமுகூர்த்தத்தில் ஹாட்வெயார் கடையில் போய் தாவரம் வெட்டும் கத்திரி ஒரு அரையடி நீளத்திலும், வேர் வர ஊக்குவிக்கும் ஒருவிதத் தூளும் வாங்கி வைத்தாயிற்று. மாலை மயங்கக் கிளம்பினால் இருட்டின பிறகு வண்டியை நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்துப் பதுங்கிப் போய் வெட்டிக் கொண்டு வந்து வண்டிக்குள் ஏறிக் கிளம்ப வேண்டியது. (களவெடுத்து வைச்சாத்தானாம் மரம் செடியெல்லாம் நல்ல்ல்ல்லா செழிச்சு வருமாம். நல்லாத்தான் சொல்லி வைச்சிருக்கிறாங்க!! ஹிஹி)


[கொண்டு வந்து வீட்டிலே ஒரு பூந்தொட்டிக்குள் மண் நிரப்பி வெட்டி வந்ததின் அடியை நீரில் நனைத்து வாங்கின தூளில் தொட்டு மண்ணுக்குள் ஊன்றி விட்டு கண்ணும் கருத்துமா.. நீங்க ஒவ்வொருநாளும் தண்ணி (மற்றதில்லப்பா!!) குடிக்கிறீங்களோ இல்லையோ கடமையா நட்டதுக்குத் தண்ணி குடுத்து வந்தாஆஆஆஆ.... ஒரு 5-7 கிழமைக்குப் பிறகு கொஞ்சம் புது உயிர் காட்டும். இலை வரும். (வரணும்.. வர வைப்பமுல்ல!!!).


வேர் பிடிச்சிட்டுதெண்டா 10-12 கிழமைக்குப் பிறகு குட்ட்ட்டியா ஒரு மொட்டு வரும். அதக் கண்ட நாள் முதல் எப்ப பெரிசாகிப் பூக்கும் என்டு பார்க்க வேண்டியது. எங்கட அவதி அதுக்கெங்க விளங்க!! ஆஆஆறுதலா ஒரு 2.5 - 3 கிழமையா மொட்டாயிருந்து கடைசியா ஒரு நாள் பூ விரிஞ்சு சிரிக்கும்.
பத்துத் தரம் போய்ப் பார்க்கச் சொல்லும். உலக மகா சோகம், கிட்டத்தட்ட 18-20 நாள் ஆயத்தப்பட்டுப் பூக்கிற பூ ஒரே நாளில வாடிடுறது தான். என்ன செய்ய.. அடுத்த மொட்டு.. காத்திருப்பு. ]

இப்பிடி "சேகரிச்ச" / "கடன் வாங்கின" / "சுற்றுச் சூழலை மேம்படுத்த நாங்க செய்கிற செயல்" களால சேர்த்தது செவ்வரத்தை/செம்பருத்தியை மட்டும். நாலைந்து நிறங்களில் இரண்டு வகைகளில் (அடுக்கு, தனியிதழ்) கிட்டத்தட்ட 10-15 கந்துகள். இப்ப 2 பிரச்சனை. முதலாவது, எந்தக் கந்து என்ன நிறம் என்டுறதுதான். அதாவது பரவாயில்ல .. பூப்பூத்ததும் தீர்ந்துவிடும். இரண்டாம் பிரச்சனை தான் மண்டைக் குடைச்சல்:

சிவப்பா இருந்தாத்தானே "செம்பருத்தி/ செவ்வரத்தை" .. நாங்க இளஞ்சிவப்பு, மஞ்சள், செம்மஞ்சள், ஊதா நிறங்களில வைச்சிருக்கிறமே.. அதை எப்பிடிச் சொல்லுறது?

எல்லாருக்குமானதொரு மரம்

அந்த மரம் ஏன் அப்படிச் சொன்னது? இரவு முழுக்க யோசித்துக் கொண்டிருந்தேன்.

வழமையில் அதைக் கடந்து போகிற ஒவ்வொரு காலையிலும் மரத்தைத் தடவ வேண்டுமென்ற எண்ணம் எழுந்தாலும் பார்வையால் மட்டும் தடவி மனதுக்குள்ளேயே அதனுடன் கதைத்துப் போகிற என்னைப் பார்த்து அது எதுவும் சொன்னதில்லை. கண்டுகொண்டதாயும் தெரியவில்லை. அது தன்னை வெளிப்படுத்தியதென்று நான் கண்டது காற்று வீசினால் தன்னைக் கொஞ்சம் சிலுப்பிக் கொள்ளுவதை மட்டுமே. அதன் கீழ் நின்று குறைந்தது இரண்டு பேராவது நின்று புகைத்துக் கொண்டிருப்பார்கள் அந்தக் காலைப் பொழுதிலேயே. எரிச்சலாய், கோவமாய் வரும். தங்கள் உடல்நலத்தைக் கெடுப்பது மட்டுமில்லாமல் மரத்துக்கும் கஸ்டத்தைக் கொடுக்கிறார்களே என்று. ஆனாலும் சத்தமின்றிப் பூட்டிக் கொள்ளும் என் வாயைச் சுமந்தபடி மரத்தைக் கடந்து போகப் பழகியிருந்தன என் கால்கள். மரமோ எதையுமே பொருட்படுத்தியதாகத் தோன்றவில்லை. தன்னில் படுகிற வெயிலைக் குடித்து, நாட்களை இலைகளாக்கியபடி அங்கேயே நின்று கொண்டிருந்தது.

கொஞ்சம் வெள்ளனப் புறப்பட்டிருந்தேன். மரத்தைக் கடந்த போது வழமை போல ஏனோவென்று நின்று கொண்டிருந்தது. அதைத் தடவிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் என்னை வெகுவாக அலைக்கழித்தது. வழமை போல நான் கேட்க மாட்டேனோ என்று நினைத்து அந்த எண்ணமே என்னை இழுத்துக் கொண்டு போய் மரத்தடியில் விட்டது. இப்போதும் கூட என்னைக் கண்டு கொள்ளாத மரத்தைத் தடவியபடியே நின்றுகொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் ஒரு கிளையொன்றைத் தாழ்த்தி வாளாவிருந்த என் மற்றக் கையுடன் கோர்த்துக் கொண்டது மரம். மிருதுவான ஆனால் உறுதியான கிளை. எப்போது கேட்டாலும் வசீகரிக்கிற பாட்டினை இலைகள் பாடிக் கிடந்தன. மென்மையாய்ச் சிரித்துக் கொண்டது மரம். அதன் சிரிப்பும் இலைகளின் பாட்டினைப் போலவே வசீகரமுடையதாயிருந்தது.

"மழை பெய்ததே, உனக்குத் தெரியுமா?" என்றது. நனைந்திருந்த அதன் இலைகளைத் தொட்டுத் தொட்டுப் பார்த்த போது கீச்சத்தினால் நெளிந்து என் மேல் நீர்த்துளி தெளிக்க கெக்கட்டம் விட்டுச் சிரித்தது. "அழுக்குப் போகத் தேய்த்துக் கொண்டேன்" என்றது. நான் கவனித்திருக்கவேயில்லை. வழமையில் கடந்து போகும் போது "பாவம்! சிகரட் புகையும் வாகனப் புகையும் வேறு தூசி புழுதியும் பட்டு அழுக்கேறிக் கிடக்கிறதே" என்று தவறாமல் யோசிக்கிற நான் அது சுத்தமாயிருந்ததை ஏன் கவனிக்காமல் விட்டேன்? துக்கமாயிருந்தது. வெண்ணிறத்தாளில் ஒரு பெரிய கரும்புள்ளி வைத்து "என்ன தெரிகிறது?" என்று ஆசிரியர் கேட்ட போது "கரும்புள்ளீ" என்று வகுப்பில் எல்லாருமாய்ச் சொன்ன ஞாபகம் வந்து பிடித்துக் கொண்டது. சுற்றியுள்ள உலகம் இயங்கத் தொடங்கியது. புகை பிடிக்க ஆயத்தமாய் ஒருவன் சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் மரத்துடன் கோர்த்திருந்த கையை இறுக்கிக் கொண்டேன். இலைகள் பாட்டை நிறுத்தி அசையாதிருந்தன. நான் என்னை விடுவித்துக் கொண்டு விடை பெற்றுக் கொண்ட போதுதான் மரம் அதைச் சொன்னது. "எனக்கு இங்கிருக்கப் பிடிக்கவில்லை".

ஒன்றும் பேசாமல் வாய் இருக்க கால்கள் தங்கள் வேலையைச் செய்யத் தொடங்கியிருந்தன. அடுத்த நாள் மரத்துடன் கைகளைக் கோர்த்தபடி நானா அதைச் சொன்னேன்? "விரும்பின இடத்துக்குப் போவன் அப்ப".

அன்றிரவு மரத்துடனிருந்தேன். வேளை வந்தது போல, தன் இடத்திலிருந்து அசைய முற்பட்டது. முடியவில்லை. அதன் வேர்களைக் கொங்கிறீற் பிடித்துக் கொண்டிருந்தது. பெரும் பிரயத்தனப்பட்டு வேர்களை மீட்டுக் கொண்டது மரம். அதன் பிறகு மிக லாகவமாக ஏதோ நீரில் நீந்துவது போல மண்ணினூடாயும் தெருவினூடாயும் நீந்தி நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. கூடவே நானும் நடந்து கொண்டிருந்தேன். கடற்கரையில் வேறு சில மரங்களினருகில் அதன் பயணம் முடிவிற்கு வந்தது. வேர்களை மண்ணிற்குள் ஆழமாய் நுழைத்துத் தன்னை நிறுத்திக் கொண்டது.

விடியத் தொடங்கியிருந்தது. சூரியன் மேலெழ மரத்தில் பூக்களைக் கண்டேன். அவை உடனேயே கனிகளாயின. கனிகள் புத்தகங்களாய் இருந்தன. ஒன்றை என் மடியில் தந்தது மரம். அலைகள் கால் தொட இலைகளின் பாட்டினைக் கேட்டபடி வாசிக்க ஆரம்பித்தேன், அதில் "ஒவ்வொரு நாளும் கடந்து போகிற இவள் ஏன் வந்து வருடவோ, கை கோர்த்துக் கொள்வதோ இல்லை?" என்ற கேள்வியுடன் ஆரம்பித்தது முதலாம் அத்தியாயம்.

மரத்தைக் காணவில்லையென அதன் பழைய இடத்தில் யாரும் தேடிய சுவடே இருக்கவில்லை. ஒற்றைப் பறவையொன்று மட்டும் மண்ணைக் கிளறியபடி நின்று கொண்டிருந்தது. ஒரு வேளை அதற்கான தண்ணீர் மரத்தின் இலைகளிலிருந்து சொட்டியிருந்திருக்கக் கூடும்.

நினைவில் பறவைகள்

ஏதேதோ யோசித்துக் கொண்டேயிருந்தேன். சங்கிலியின் கண்ணிகளாய் தொடுத்துத் தொடுத்துப் பறவைகளில் வந்து நின்றது. தெரிந்த பறவைகளைப் பட்டியலிட்டுக் கொண்டு போன போதுதான் பலதையும் மறந்து போனது உறைத்தது. (நல்லகாலம் கணினி பக்கத்திலிருக்கிறதில் பதிவிடுகிறேன்) ஞாபகம் வந்த பறவைகள்:

  • காகம்
  • சிட்டுக்குருவி
  • மயில்
  • குயில்
  • மைனா
  • பருந்து
  • வாத்து
  • கோழி
  • தாரா
  • அன்னம்
  • Cockatoo
  • மீன்கொத்தி
  • மரங்கொத்தி
  • தூக்கணாங்குருவி
  • ஆள்காட்டிக்குருவி
  • புறா
  • தீக்கோழி
  • Lyre Bird
  • அண்டங்காக்கா
  • Robin
  • கிளி
  • செண்பகம்
  • நாரை
  • கொக்கு
  • ஆந்தை
  • Humming bird
  • வான்கோழி
  • Kiwi
எவை மேலே இல்லாமல் பறந்து போயின?

குப்பை

முன்னிரவில் தொலைபேசுபவர்களே
என் இரவுகளைக் கெடுக்காதீர்கள்
அவை எனக்குச் சொந்தமானவை
உங்கள் கதைகளென் இரவுகளைத் தின்னுகின்றன.

என் காலைகளும் மாலைகளும் அழகானவை.
களவாடாதீர்கள்.
உங்கள் கதைகள் - எங்கும் கொண்டு சேர்க்காத
அந்தப்படிகளில் ஏறிக் களைக்க
எனக்கு நேரமில்லை.
பொழுதுகள் கரைத்து - ஒன்றுமில்லாததைத்
துரத்த நான் வரவில்லை.


ஒரு மாட்டைப் போல அசை போட்டுக் கொள்ள
என்னிடம் கனவுகளும் இனிமையான தருணங்களும்
ஏன் வலிகளும் கூட.

என் பகல்களையும் நான் விரும்புகிறேன்
அவற்றை நிரப்புபவற்றின் பட்டியல்
மிக நீண்டது.
அதில் நீங்களில்லை.
அதனால்
என் பகற்பொழுதைக் கலைக்காதீர்கள்.

உங்கள் கரிசனங்களும் அரைகுறைக் கேள்வி ஞானங்களும்
உண்மையாயிருக்கக் கூடியதாயினுங் கூட உங்கள் அக்கறையும்
வேண்டாம்.
என் இரவுகளையும் என் இயல்புகளையும்
என் நம்பிக்கைகளையும் என் பகல்களையும் தின்பதற்காய்
வேட்டைமிருகங்களாய் அவிழ்க்காதீர்கள்
உங்கள் வார்த்தைகளை.
அவற்றைக் கலைத்துப் போடட்டும்
காற்று.
என்னுலகில் இருக்கிற மனிதரில்
எனக்கின்னும் நம்பிக்கையிருக்கிறது.
இருட்டிலோ வெளிச்சத்திலோ - எவரும்
மனிதர்தான் தேவரில்லை.
கண்ணாமூச்சியாட்டத்தில்
எப்போதும் தட்டுப்பட்டுத் தப்பியோடுகிறது
பிரபஞ்சத்து நியதி.

நான் naive ஆகவே இருந்துவிட்டுப் போகிறேன்.
எனக்கிருக்கிற குழப்பங்கள் போதும் - நான்
குப்பைகள் சேர்க்க விரும்பவில்லை.

குப்பைவண்டி வெள்ளிதான் வரும்.

செவ்வாய்.. நீ கெதியில செல்வாய்!

நீண்டதாகத் தோன்றும் நாள் எது? _ _ _ _ _கக் காத்திருப்பது (இடைவெளியை உங்களுக்குப் பொருத்தமானதை வைச்சு நிரப்பணும்) என்டு சொல்லாதீங்க. ஏனெண்டா நான் அதைப் பற்றிக் கேட்க இல்ல. ஒரு கிழமையில நீண்ட நாள் என்று நீங்க உணருற நாளைப் பற்றிக் கேட்கிறன்.

வெள்ளிக் கிழமை சனி-ஞாயிறை எதிர்பார்ப்பதிலயே கழிந்து விடுகிறது. வியாழக்கிழமையில அட வாரஇறுதிக்கு இன்னும் ஒரு நாள்தானே என்டு உற்சாகம் வந்து விடும். புதன்கிழமை வந்தால் 'அப்பாடா! கிழமையின் நடுப்பகுதி தாண்டியாச்சு' என்றொரு ஆசுவாசம்.

திங்கள் இருக்குதே, அதுதான் ஒரு கிழமையிலயே மிகவும் விரைவில போவது (எனக்கு). சரி சரி.. வாரஇறுதிக்கு அடுத்ததா. வாரஇறுதிக்கு இறக்கை கட்டி விட்டிருக்கு அல்லது கால்ல சக்கரம் பூட்டியிருக்கு. அல்லது இரண்டுமே. எப்பிடி வருது எப்பிடிப் போகுது என்று தெரியாமல் பறந்தோடுகிற 2 நாட்கள். கொஞ்சம் நின்டு நிதானிச்சுப் போகச் சொல்லணும்.. போகாட்டிக் கூடப் பரவால்ல இல்லையா? :O)

விழாக்காலம் தானே.. நத்தார் வந்துது 4 நாள் வார இறுதியோட. ஆங்கிலப் புத்தாண்டு வந்துது 3 நாள் வார இறுதியோட. இப்பிடியெல்லாம் நீண்ட வாரஇறுதியில ஆறுதலா இருந்திட்டு இன்னும் 12 கிழமை காத்திருக்க வேணும் அடுத்த நீண்ட வார இறுதிக்கு. என்ன கொடுமை இது கலண்டர்!

ஐந்து நாள் வேலை செய்தால் மூன்று நாள் வார இறுதியாக இருக்க வேண்டும். எவ்வளவு நல்லா இருக்கும். (அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில 4 நாள் வேலை 3 நாள் வார இறுதியென்று கொஞ்ச நாள் செயல்படுத்திப் பாத்தார்களாம். ஒரு நாளைக்குப் பத்து மணி நேரம் வேலை. உற்பத்தித் திறன் அதிகரித்ததாம். பலருக்கும் திட்டம் பிடித்தும் இருந்ததாம். எனக்கும் பிடித்துத்தானிருக்கு.) இப்ப இருக்கிற 2 நாள் நடைமுறையில, சனிக்கிழமை கொஞ்சம் வீட்டு வேலை செய்து (அல்லது செய்ற மாதிரிப் பாவனை பண்ணி) எங்கேயும் போய் வந்தால் ஞாயிறு 'என்னைப்பார்' என்று ஓடி வந்து விடுகிறது. கொஞ்சம் ஆறிக் கீறி என்னவும் செய்வமெண்டா டாட்டா பாய்பாய் ச்சீரியோ என்டுட்டு ஞாயிறும் தப்பியோடின சனிக்கிழமையைப் பிடிக்க ஓடிடும். பிறகென்ன நீலமான (எழுத்துப் பிழையில்லை) திங்கள். ஆனா நீளம் தெரியாத் திங்கள்.

வேலைக்குப் போகிற நாட்களில் இந்த செவ்வாய் இருக்கே.. அது தன்ட செவ்வாயாலே ("உனக்கு இருக்குடீ" என்டு) எங்களை (என்னைப்) பார்த்துச் சிரிக்கிறது போலும். திங்கள் காலையில் 8.30 மணிக்கு ஒரு வேலை ஆரம்பித்து முடித்து நிமிர்ந்தால் எப்படியும் 10மணிக்குக் குறையாது. அதே வேலையை செவ்வாயன்று செய்து பாருங்கள்.. ஒன்பதேகால் கூட ஆகியிருக்காது. உண்மையாத்தான். நகருதா என்று அடிக்கடி கூர்ந்து பார்க்க வைக்கிற மணிக்கூடு செவ்வாய்க்கிழமைக்கே சொந்தம். நல்ல வேளை இந்த மாதம் எஞ்சியிருக்கிற பொது விடுமுறையான அவுஸ்திரேலியா தினம் செவ்
வாய்க் கிழமை வருகிறது. நீண்ட வாரஇறுதி இல்லாதது கவலைதான்.. ஆனால் செவ்வாய் வேலை இல்லையென்பது அந்தக் கவலையை ஈடு செய்துவிடுகிறது. செவ்வாய்க்கிழமைகள் எத்தனை மணித்தியாலங்களைக் கொண்டவை? கட்டாயம் 24க்கும் கூடவாகத்தான் இருக்க வேண்டும்.

செவ்வாய்க் கிழமைகளை தேசிய வேலை செய்யாத நாளென்று அறிவிக்க வேணும். "ஹலோ, மிஸ்டர். கெவின் ரட், திஸ் இஸ் ஷ்ரேயா ஸ்பீக்கிங்..."

இருந்தும் இல்லாமலும் ஒரு ஆரம்பம்

ஒரு புள்ளிதான் தேவையாயிருக்கிறது
எல்லாத் தொடக்கங்களுக்கும்.

சந்திப்புகளுக்கும்
அறிமுகத்திற்கும்
காத்திருப்புகளுக்கும் பிரிவுகளுக்கும்
அனுபவங்களுக்கும் ஞாபகங்களுக்கும்
கரைந்து போகிற எந்தவொரு தருணத்துக்கும்.

கோவத்தினையும் குழப்பங்களையும்
தீர்வுகளையும் தீர்மானங்களையும்
அழுகை/சிரிப்புகளையும் பயணங்களையும்
மாற்றங்களையும்
ஆரம்பித்து வைக்கிற அதே புள்ளிதான் எதற்குமே தேவைப்படுகிறது
இதை எழுதவும் கூட.

அன்புக்கு மட்டும் ஏதுமில்லை
காலத்தின் சுவாசத்தைப் போல - என்றென்றைக்கும்
அது ஆரம்பமற்றதாய் இருக்கிறது
அம்மாவைக் கண்ட முதல் நாளினை ஒத்ததாய்.

தேவதைகளின் புன்னகை மந்திரம்

இரவு நேரத்துக் காவல்காரர்களாய் பிறையும் நகரத்து வெளிச்சம் விழுங்காத பத்துப் பன்னிரண்டு நட்சத்திரங்களும் கூடவே முழித்திருக்கின்றன. நினைப்பு முழுவதையும் இன்றைக்குக் கண்ட & காணாத அழகிய சிறு பெண்கள் ஏனோ நிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எங்கள் பகுதியில் இருப்பவர்களுக்கான அறிமுகக் கூட்டம் இன்று. அங்கே வந்த இரண்டு அழகிகளுக்கும்
2-3 வயது. ஒருத்திக்குக் கை கொள்ளாதளவு சொக்லட். ஒவ்வொருவரிடமும் போய் "High 5" கொடுத்து அவர்களிடமிருந்து சொக்லட்டை வாங்கிக் கொண்டா. உறையுடனே இருந்த சொக்லட்டை ஒரு கடி கடிப்பா.. பிறகு கையில் இடமில்லாவிடில் அம்மாவிடம் கொடுத்துவிடுவா. அவவின் தலையில் இருந்த இரட்டைத் தென்னைகள் சிறுவயதுத் தலைவாரல்களை ஞாபகப் படுத்திப் போயின. சொர்ணாவாம் பெயர்.. பேசாமல் சொக்லட் என்றே வைத்திருந்திருக்கலாம்.

வந்த மற்றவவோ எம்மி என்னைப் பற்றிச் சொன்னதை நினைவுக்குக் கொணர்ந்தா. எங்கே நடந்தாலும் ஒரு துணி அவவின் கையில் இருந்தது. கோழிக்குஞ்சின் மஞ்சள் நிறத்தில் வெள்ளையினால் கோலம் போட்ட துணி. அவவைப் பார்த்தாலே ஒரு கோழிக்குஞ்சைப் போல தூக்கிக் கொள்ள வேணும் போல இருந்தது. தாய் சொன்னா அந்தத் துணி எப்போதும் அவவோடேயே இருக்குமாம். நானும் சின்னனில 'தூய' என்று என்னால் அழைக்கப்பட்ட துணி இல்லாமல் படுக்க மாட்டேன் என்று எம்மி சொன்ன கதையும் அந்தக் குட்டிப் பெண்ணை இன்று மாலை கண்டதிலிருந்து என்னோடேயே இருக்கிறது.

---*~*~*---
அழகி #1. இவவுக்கும் மிஸ். high5-சொக்லட்டுக்கும் நல்லாவே ஒத்துப் போகும் என்று நினைக்கிறேன். சொக்லட் விரும்பி. "சொக்லட் தாறன், வாறீங்களா இங்கே?" இன்று கேட்டதற்கு "சொக்லட் அனுப்புங்கோ பிறகு வாறன்" என்று சொன்னவ. நான் காணாமல் போன கதை சொன்ன போது படுத்துக் கிடந்து கதை கேட்ட முக பாவம் இன்னும் புன்னகைக்க வைக்கும்.

"சின்னனில பெரியப்பா ஒரு coin swallow பண்ணிட்டார், பிறகு அவர் toiletல இருக்கேக்க அது வெளில வந்தது" என்று தாளமாட்டாத சிரிப்புக்கூடாகச் சொல்லும் அழகி #2. மூன்று வயது வரை சொக்லட் நிராகரிக்கப்பட்ட ஒரு சீவன் இவள். வளர்ந்து chocoholic ஆவாளெனின் அதைப் போல ஒரு பகிடி கிடையாது உலகில்! :O)

"எறும்பு கிட்ட வர மாணாம் சொல்லுங்க" இரண்டரை வயதில் இலங்கை வந்த போது அழகி #3 சொன்னது.
இவ பாடினபடி"இன்னிசை பாடி வரூம்ம்ம் இளங்காற்றுக்கு உடுக்கமில்லை" என்றுதான் எனக்கு அந்தப் பாடல் இப்போதும். இன்னும் ஒரு மாதத்தில் பதின்மப் பருவத்தில் காலடி எடுத்து வைப்பா. ஓ! இந்த நாட்கள் எங்கே தான் போகின்றன?

அழகி #4 குட்டித் தேவதை அஞ்சலி. இவரது கொஞ்சும் தமிழ் கேட்கப் பிடிக்கும். இவவின்இடுகையொன்றைக் களவாடிவிட்டார்களாம் :O(

---*~*~*---

சந்தனமுல்லையைத் பதிலின்றித் திகைக்க வைக்கும் பப்பு முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் பேருந்தில் தாயுடன் கைகோர்த்து அமர்ந்திருக்கும் சிறு பெண் வரை, நினைத்த மாத்திரத்தில் புன்னகை வரவழைக்கும் மந்திரத்தை எம்மீது ஏவியிருக்கும் எல்லா அழகிகளின் நினைவுகளும் மெல்லத் தலை தூக்குகின்றன. சிறிது நேரம் மல்லிகையோ ரோசாவோ ஏந்தியிருந்ததற்கான அடையாளமாய் கையில் தங்கிவிடும் ஒரு மெல்லிய வாசனை போல இவர்களும் புன்னகைகள் அணிந்தபடி, அணிவித்தபடி கூடவே எம்மோடு பயணிக்கிறார்கள்.

விதம் விதமான வேண்டுதல்கள் இவ்வுலகில்

எனக்கு அளவான வெப்ப நிலையிலும் பேருந்துக்குள்ளிருந்த மற்ற எவருக்குமே வெக்கையாவும் இருந்த ஒரு காலைப் பொழுதில் தான் அந்தக் கபில நிறக் கண்ணழகியிடம் நான் மாட்டிக் கொண்டேன்.

பேச ஆரம்பித்து, கையில் வைத்திருந்த புத்தகத்தை வாசிக்கவொண்ணாமற் பண்ணியதன் பேரிலும் அந்தக் காலைப் பொழுதிலேயே சளசளவென்று ஒன்றேகால் மணித்தியாலத்துக்கு வழி நெடுகலும் பேசிக் கொண்டே வந்ததிலும் அந்தப் பெண்ணை இனிக் காணக் கூடாது என்று நான் வேண்டிக் கொண்டதில் எனக்கு வியப்பில்லை. அன்றுதான் கண்டு பேசிய என்னிடம் தன் குழந்தையின் படங்கள் காட்டி, தங்களுடனே வசிக்கும் மாமியார்/மாமனார் பற்றி 4-5 லொறி கொள்ளக்கூடியளவு குறை சொல்லி, தான் இறங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் போல தன் செல்பேசி இலக்கம் தந்து போன அந்தப் பெண்ணைக் காணக் கூடாதென்ற என் வேண்டுதல் கொஞ்ச நாட்களுக்குப் பலித்தது. ஆனாலும் மெர்பியின் விதி வேலை செய்தது நேற்று.

வீடு நோக்கிய பயணத்திற்கு, ஓடோடி வந்தும் பேருந்தைத் தவற விட்டுவிட்டேன்(12B / Sliding Doors திரைப்படங்களின் ஞாபகம் வருதா?) . அடுத்ததாய் வந்து நான் ஏறிய பேருந்துக்குள் அவவைக் கண்டேன். பார்த்ததும் சிரித்தா. உசைன் போல்ட்டின் வேகம் மட்டும் எனக்கு இருந்திருக்குமானால் பிடித்திருக்கக் கூடிய பேருந்தில் இந்தப் பெண் இல்லாமல் புத்தகத்தோடு மட்டுமானதாய் அமைந்திருக்கக் கூடிய பயணத்தை நினைத்துக் கொண்டு எரிச்சலாய் விதியே என்று சிரித்து வைத்தேன்.

சாதாரணமான உரையாடல்கள், கேள்விகளினூடே politically incorrect ஆனதும் மற்றவரின் அந்தரங்கத்துள் அத்துமீறுவதுமான கேள்விகளும் என்னிடம் கேட்கப் பட்டன.
இதுவரை பட்டும் படாமல் பதில் சொல்லிக் கொண்டு வந்த நான் ஒரு கட்டத்தில் நெளிய ஆரம்பித்திருந்தேன். அதைப்பற்றி அவ ஏன் கவலைப்பட!!! "இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல நான் விரும்பவில்லை" என்று சில இடங்களில் சொல்லியும் திரும்பத் திரும்பத் துளைத்தவவை நினைக்க நினைக்க எரிச்சலாயும் அதே நேரம் வியப்பாயும் இருக்கிறது. எப்படி முடிகிறது இவர்களால்?

இந்தியப் பெண்கள் எல்லாத்தையும் தமக்குள்ளேயே மூடி வைத்து புழுஙகி மனவுளைச்சலுக்கு ஆளாகுகிறார்களென்றும் அதனாலேயே இந்தியப் பெண்களைக் கண்டால் பேசினால் அவர்களை மனம் திறந்து பேசப் பண்ணுவதற்குத் தான் முயற்சிப்பதாயும் சொன்னா. கதை பிடுங்க யோசிக்கிறாவோ என்று ஒரு எண்ணம் எனக்குள் ஒரு கணம் வந்து போனது. குமுதம் ஆ.வி போன்றவற்றில் வரும் மாமியார்-மருமகள் சண்டை பற்றிய நகைச்சுவைத் துணுக்குகள் பார்த்தது போல இருந்தது அவவின் மாமனார், மாமியார் குறைப் படலம். என்னிடம் கேட்டா நீயும் மாமனார்-மாமியாருடனா வசிக்கிறாய் என்று? இல்லை என்றேன். அவர்கள் வந்து போவார்களா அவர்களின் தலையீடு உண்டா என்ற கேள்விக்கு அவர்கள் உயிருடன் இல்லை என்று சொன்னேன். ஓ! என்றவர், தனது மாமனார்-மாமியாரைப் பிடிக்காததால் அவர்களின் தலையீடு இருப்பதால் அவர்களுக்கு ஏதேனும் கெட்டது நேரட்டும் என்று வேண்டிக் கொள்கிறாவாம். அவவைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. ஏன் இப்படி?

இப்போது முன்னையிலும் அதிகமாக வேண்டிக் கொள்கிறேன்.. அந்தப் பெண்ணைக் காணக் கூடாதே என்று. காலையில் அவவின் தரிப்புத் தாண்டும் வரை தூங்குவது போல நடிக்கவும் மாலையில் ஏறும் முன் பேருந்தை நோட்டம் விடவும் நேர்கிறது. சாதாரணமான ஒரு பேருந்துப் பயணம் இப்படி ஒரு திகிலளிக்கும் ஒன்றாய், தொங்கல் (Suspense) நிறைந்ததாய் அமையக்கூடும் என்று யார்தான் நினைத்தார்கள்! எதேதோ வேண்டுதல்களைப் பலிக்க வைக்கிற எத்தனையோ கோயில்களும் கடவுளரும் இருக்கின்றனரே.. ஒருவரைக் காண வேண்டாமென்றால் அதிலே எந்தக் கோயில் எந்தச் சாமிக்கு நேர்ந்து கொள்ள வேண்டும்?

என்னுடன் இருக்கும் நீ

உன்னோடு பேசுவது தான் எவ்வளவு இதமாய் இருக்கிறது. உன் வீட்டு முற்றத்து நித்தியகல்யாணியைப் போல எப்போதும் புன்னகைக்க வைக்கிறாய். எனக்கு எப்போது தொலைபேச வேண்டும் என்பதை எப்படியோ உன்னால் அறிய முடிகிறது. எப்படியடி? இன்றைக்கும் எடுத்தாய் - வேறு சில ஆற்றாமைகள் கோபங்களுடன் கூடவே ஒரு மணி நேரமாய் எல்லாப் பெட்டிகளுக்குள்ளும் தேடிக் கிடைக்காத ஆனாலும் வீட்டிற்குள்ளே கட்டாயம் இருக்கிற 3 காமாட்சி விளக்குகளிலும் எரிச்சல் தோன்றி, அதை இறக்க வழியின்றி, ஒரு சுவர் அலுமாரிக்குள் அடைத்து வைத்திருக்கிற பிள்ளையாரை நான் முறைத்து திட்ட ஆரம்பிக்கையில்.

நீயென்று ஸ்கைப்பில் கண்டதும் இயலாமையில் வந்த அழுகை எட்டிப்பார்த்தது உண்மை. "என்னடி செய்ற" என்ர ஒரு கேள்வி போதுமாக இருக்கிறது என் விளக்குத் தேடல் எரிச்சல்களைக் கொட்டிவிட. உன்னுடன் பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஒரு சிறு பெட்டியைத் திறந்ததில் 2 விளக்குகள் கிடைத்தன. சிரிக்கிறாய் நீ. எனக்கு எப்படி இதமாய் இருக்கிறாயோ, அப்படி உனக்கு நானுமிருக்கிறேன் என நம்பிக் கொள்கிறேன்.

அடுத்து மற்றவரால் என்ன சொல்லப்படும் என என்னாலும் உன்னாலும் சொல்ல முடியும். எப்படி அது சாத்தியம் என்பதும், எப்படி உன்னிடம் சொல்லும் போது மட்டும் உப்புச் சப்பில்லாத விதயங்களும் சுவையானவையாகின்றன என்பதும் எனக்குப் புரிவதேயில்லை. எலி பிடித்த அதிமுக்கியமான கதை சொல்லத் தொடங்குகிறேன், என்னைத் தவிர உன் உலகத்தில் வேறு யாருமில்லை என்ற பாவனையில் கதை கேட்கிறாய். வேறெவருக்கும் சொல்லும் போது சிரிப்பே வராத எலி பிடித்த கதை உன்னிடம் சொல்லப்படும் போது மட்டும் வயிறு வலிக்கும் படியான நகைச்சுவையாகிப் போகிற மாயம் என்ன? அன்றைக்கொருநாள் உன்னுடன் கதை பேசிச் சிரித்த ஞாபகம் என் முன் வந்தமர்ந்திருக்கிறது. எதற்கோ உனக்குக் கண் கலங்க அதைப் பார்த்து நானும் அழ பிறகு நாம் அழுவதைப் பார்த்து நாமே சிரித்துக் கொண்டதொரு அழகிய பொழுது. உலகம் முழுவதிலும் எல்லாத் தோழிகளுக்கிடையிலும் இருப்பது போலவே எங்களுக்கேயான பிரத்தியேக சிரிப்புக்கள், பேச்சுக்கள். இதை எழுதுகையில் கூட உன் சீரியல் கனவு சிரிக்க வைக்கிறது. வீட்டிற்குள் பின்கதவால் நுழைவதற்குக் கள்ளன் எடுக்கும் முயற்சியைக் கனவாக, அதுவும் தொடர்ந்த கனவாகக் கண்டவள் நீயாய்த்தானிருப்பாய்.

பதின்ம வயதின் இறுதியிலும் இருபதுகளின் ஆரம்பத்திலும் நடந்தவைகளை இப்போது நினைத்தால் வேறெவருக்கோ நடந்தது போலத் தோன்றுகின்றன.
கண்ணீராலேயே ஒரு கடிதம் போட்டேன் உனக்கு, கல்யாணமாகின பிறகு ஒரு முறை வந்த போது அதைக் காட்டினாய். இன்னும் வைத்திருப்பாயோ என்னவோ!! உன் கணவன் உன் காதலனாயிருந்த காலத்தில் என்னால் "மிரட்ட"ப்பட்டதற்கு மன்னித்துக் கொள்; எக்காரணங் கொண்டும் உனக்கு வலித்து விடக் கூடாதென்பதே என் நோக்கமாய் இருந்தது. அதை நீயும் தெரிந்து கொண்டிருந்தாய். என் மீதான அவன் பயங் குறித்துப் பேசிச் சிரித்திருக்கிறோம். என்னிடம் பயப்பட்ட ஒரே சீவன் - அவனிடம் பேசிக் கொள்ள வேண்டும் ஏன் அப்படி இருந்தது என்பதை. உன் விருப்பமான படிப்பை முடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டாய் என எனக்குத் தெரியும். ஒன்றுமே செய்யாமல் வீட்டில் இருப்பதன் அலுப்புப் புரிகிறது. ஆனால் கண்ணம்மா இந்த நேரத்தை உன்னை அறிந்து கொள்ளப் பயன்படுத்து. உனக்கான நேரம் வரும். நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

கொழும்பின் ஏதாவதொரு வீதியில் மழையில் நனைந்தபடி ஒருவரையும் சட்டை செய்யாமல் உன்னோடு மீண்டும் நடக்கத் தோன்றுகிறது.
இன்றைக்கு ஏனோ உன்னிடம் பேசிக் கொண்டேயிருக்க வேண்டும் போல இருக்கிறது. பபிள் கரைசலுடன் வருகிறாயா மஞ்சள் வெயிலோடு ஒரு புல்வெளிக்கு?

love u டி..

அந்த ஒற்றை வரி

தொடர்வண்டிப் பயணத்தின் போது மனதிற்குள்ளேயே அழகாய் உருக்கொடுத்துச் சிங்காரித்திருந்தேன் அந்த இடுகையை. வீட்டுக் கதவு திறந்தேன். அந்த இடுகையெங்கே? வண்டியிலேயே மறந்து விட்டேனா? அல்லது இறங்கி நடந்து வரும் வழியில் தொலைத்தேனா? "துளிர்த்து, வளர்ந்து, நிறம் மாறி, உதிர்ந்து காற்றிலலைந்து, தரை தடவி், மக்கி, உரமாய் மண்ணுக்குள் ஊறி, வேர் பிடித்து மரத்துக்குள் போய், சத்தாகித் திரும்பத் துளிர்த்து வரும் அந்த இலை போலே என்றென்றைக்குமான எங்கள் அலைதல்களோடேயே நீயும் நானும்" என்று நினைவில் பிசுபிசுத்தது எப்படியோ தொற்றிக் கொண்டு வந்துவிட்ட ஒற்றை வரி.

அணிந்தணிந்து மென்மையாகிப் போன பிரியமானதொரு ஆடையைப் போலே கவிந்திருக்கிறது வெள்ளியிரவு. மிஞ்சிக் கிடந்த அந்த ஒற்றை வரியை நூல் போலப் பிடித்துக் கொண்டு மீதி இடுகையை திரும்பவும் நெய்துவிடலாமென்று பார்க்கிறேன். வரவேயில்லை. காணாமல் போய்விட்ட அந்த இடுகை, இளவரசியின் பதினெட்டு மெத்தைகளுக்கும் கீழே இருந்த பட்டாணியைப் போல என்னை உறுத்துகிறது. யோசித்துக் கொண்டு அவவைப் போலவே விழித்திருக்கிறேன். இளவரசி பாவம். அவவுக்கும் வலைப்பதிவிருந்திருந்தால் ஒருவேளை பட்டாணியால் பறிபோன நித்திரையைப் பற்றி ஏதேனும் எழுதியிருக்கக்கூடும்.

பெட்டகம்