தொடர்வண்டிப் பயணத்தின் போது மனதிற்குள்ளேயே அழகாய் உருக்கொடுத்துச் சிங்காரித்திருந்தேன் அந்த இடுகையை. வீட்டுக் கதவு திறந்தேன். அந்த இடுகையெங்கே? வண்டியிலேயே மறந்து விட்டேனா? அல்லது இறங்கி நடந்து வரும் வழியில் தொலைத்தேனா? "துளிர்த்து, வளர்ந்து, நிறம் மாறி, உதிர்ந்து காற்றிலலைந்து, தரை தடவி், மக்கி, உரமாய் மண்ணுக்குள் ஊறி, வேர் பிடித்து மரத்துக்குள் போய், சத்தாகித் திரும்பத் துளிர்த்து வரும் அந்த இலை போலே என்றென்றைக்குமான எங்கள் அலைதல்களோடேயே நீயும் நானும்" என்று நினைவில் பிசுபிசுத்தது எப்படியோ தொற்றிக் கொண்டு வந்துவிட்ட ஒற்றை வரி.
அணிந்தணிந்து மென்மையாகிப் போன பிரியமானதொரு ஆடையைப் போலே கவிந்திருக்கிறது வெள்ளியிரவு. மிஞ்சிக் கிடந்த அந்த ஒற்றை வரியை நூல் போலப் பிடித்துக் கொண்டு மீதி இடுகையை திரும்பவும் நெய்துவிடலாமென்று பார்க்கிறேன். வரவேயில்லை. காணாமல் போய்விட்ட அந்த இடுகை, இளவரசியின் பதினெட்டு மெத்தைகளுக்கும் கீழே இருந்த பட்டாணியைப் போல என்னை உறுத்துகிறது. யோசித்துக் கொண்டு அவவைப் போலவே விழித்திருக்கிறேன். இளவரசி பாவம். அவவுக்கும் வலைப்பதிவிருந்திருந்தால் ஒருவேளை பட்டாணியால் பறிபோன நித்திரையைப் பற்றி ஏதேனும் எழுதியிருக்கக்கூடும்.
அந்த ஒற்றை வரி
வகை: கிறுக்கினது
மூன்றே கேள்விகளும் சில சுழற்சிகளும்
வழமையா, வேலையிலொரு அணியினுடையதோ தனிப்பட்ட ஒருவரதோ செயல்திறன் எதிர்பார்த்த அளவில இல்லாமக் குறைஞ்சு போயிருந்தா, அதைத் தேத்தி எடுக்கிறதுக்கு ஒரு செயற்றிட்டம்(project) போட்டு நாலு பேரை வைச்சுப் பழையநிலைக்குச் செயற்றிறனைக் கொண்டு வரக் கூடியதாயிருக்கும். அப்பிடியான திட்டங்களுக்காக அலுவலகத்திலே எப்ப பார்த்தாலும் திட்டஅணிக் கூட்டம் நடக்கும். (அங்க யாரு இப்பவே கொட்டாவி விடுறது?). அப்பிடியான கூட்டங்களுக்குப் போய் பொறுக்கிக் கொண்டு வந்த ஒரு சில பயனுள்ள விதயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்டு பாக்கிறேன். எனக்குப் பழக்கமில்லாதளவு நீளமான பதிவு.
ஒரு சின்னக் குறிப்பு: இதில சொல்லப்போறவை உங்களைச் செப்பனிடவோ வேலை செய்யிற விதத்தை மேம்படுத்தவோ மட்டுமில்லாமல் இப்ப ஈழத்தமிழர் எதிர்நோக்கியிருக்கிற நிலைக்கும் பயன்படும்.
விதயத்துக்கு வருவம். பல சந்தர்ப்பங்களில பார்த்தால் செயல்திறனைத் தேத்தி எடுக்கவென்டு கொண்டு வரப்பட்ட அந்தத் திட்டம் அடிப்படையா இருக்கிற பிரச்சனைகளை கருத்தில கொள்ளுறதில்ல. உதாரணமா, அடிப்படைப் பிரச்சனையை நோய் என்டு எடுத்துக் கொண்டா, செயற்திறன் குறையிறது அந்நோயின் அறிகுறிதான். செயற்திறன் பழையபடி மேலுக்கு வருது என்டா நோயிட அறிகுறிதான் கவனிக்கப்பட்டு இல்லாமலாக்கப் பட்டிருக்கு ஆனால் நோய் இன்னும் இருக்கு என்டு பொருள்.
எங்கட சூழல் மாற்றங்களால நிரம்பின ஒன்று. சில நேரங்களில மாற்றம் எங்கள் மேல திணிக்கப்படுது & அதனுடைய விளைவுகளை நாங்கள் சமாளிக்கப் பழகிக் கொள்ள வேண்டியிருக்கு. சில நேரத்தில ஏலவே இருக்கிற நிலையை மேம்படுத்துறதுக்காக நாங்களாக் கொண்டு வாறதாவும் மாற்றங்கள் இருக்கு. எங்கேயோ வாசிச்சது: முன்னேற்றமெல்லாம் மாற்றமெனினும் மாற்றமெல்லாம் முன்னேற்றமல்ல.
நாங்க வழமையா இயங்குற/சிந்திக்கிற முறையில மாற்றம் கொண்டு வாறது கொஞ்சம் தயக்கம் தாற விதயம்தான். என்னென்ன குந்தகம் விளையக்கூடும் என்டு யோசிப்பது இயல்பு. இப்பிடியான யோசனைகளுக்குப் பதிலை நாங்களே கண்டடையக் கூடியதாப் பயன்படுத்த "முன்னேற்றத்துக்கான மாதிரியுரு" என்டு சொல்லக்கூடியதொன்டு இருக்கு. "முன்னேற்றத்துக்கான மாதிரியுரு"(model for improvement) வை 1992ல் நோலன் லாங்லி(Nolan Langley) என்பவர் பிரசுரித்தார். இந்த மாதிரியுரு, முன்னேற்றத்துக்கு இட்டுச் செல்லக்கூடிய வகையில் யோசனைகளை வடிவமைச்சு, அவற்றைச் சீர்திருத்தி, செயற்படுத்திப் பார்ப்பதற்கு ஒரு கட்டமைப்பைத்(framework) தருது.
இந்த மாதிரியுருவில ஒன்றையொன்று சார்ந்த 2 பகுதிகள் இருக்கு.
1. யோசித்து, சீர்தூக்கிப்பார்க்கும் பகுதி. பின்வரும் 3 கேள்விகளையுடையது:
2. செயற்பாட்டுப் பகுதி: 4 பிரிவுகளுண்டு. பகுதி 1 இல் (யோசித்து, சீர்தூக்கிப்பார்க்கும் பகுதி)பெறப்பட்ட முடிவுகளை அடைவதற்காய்ச் செயலில் இறங்கல். இதிலே,
.
ஆக, முன்னேற்றத்துக்கான மாதிரியுரு கீழ உள்ள மாதிரி அமையும்:
முன்னேற்றுறத்துக்கு எடுக்கிற எந்த முயற்சியையும் வடிவாத் திட்டமிட்டுச் செய்வது இலக்கை வெற்றிகரமா அடைவதுக்கு வழிவகுக்கும். மேல காட்டின மாதிரியுருவைக் கொஞ்சம் விளக்கமாப் பாப்பம். முதல்ல கேள்விகள் பகுதி:
1. எதைச் சாதிக்க /நிறைவேற்ற முயல்கிறோம்?
இந்தக் கேள்வி :
போன்றவற்றுக்குரிய விடைகளை உய்த்தறிவதின் மூலம் உங்கட அடிப்படை நோக்கத்தைத் தெளிவாக்க உதவுது.
உதாரணமா, ஒரு உணவகத்திலே சாப்பாடு சுவையில்ல என்டா,
- இப்ப இருக்கிற நிலை: சாப்பாட்டைச் சாப்பிட முடியவேயில்ல.
- மேம்படுத்தல்: சுவை கூட வேணும் - உப்பு சரியாப் போட வேணும், உறைப்புக் குறைக்க வேணும்
- விரும்பிய விளைவு: எப்ப நினைச்சாலும் அட! அதுவல்லோ சாப்பாடு என்டு (சாப்பிட்டவர்கள்) மீண்டும் மீண்டும் தேடி வரச் செய்யோணும்.
- இனிமேல் வித்தியாசமாக: வெவ்வேறு வகையான உணவுகளையும் சுவையாகத் தயாரிக்கிறது, சமைக்கத் தெரிந்த சமையல்காரரைப் பணிக்கு அமர்த்துவது
2. ஏற்படுகிற மாற்றம் முன்னேற்றந்தானா என எப்படி அறிவது?
இந்தக் கேள்விக்குரிய நோக்கம், ஏற்பட்ட மாற்றத்தை அளவிடுறது எப்படி என்பதைத் தீர்மானிப்பது. மாற்றமேற்பட்டதை அறிவது அளவீடில்லாமல் சாத்தியமில்லை. இந்தக் கேள்வி கேட்கப்படும் போது பின்வரும் துணைக்கேள்விகள் அதில் தொக்கி நிற்கின்றன:
இதுக்கு உதாரணமா, உங்கட வலைப்பதிவுக்கு அதிகமான வாசகர்களை வரவழைக்க முயலுறீங்க என்டால்,
- அளவீடுகள்: வலைப்பதிவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை, பின்னூட்டங்களின் எண்ணிக்கை, எப்படியான பதிவுகளுக்கு அதிகமான வாசகர்கள்
- தேர்ந்தெடுக்கப்படும் அடிப்படை: வாசகர்கள் வருவதைக் கணிக்க உதவுது
- எதை அளக்கின்றன: ஒவ்வொருத்தரும் எத்தனை முறை பதிவுக்கு வருகிறார்கள் என்பதை
- அளக்கும் முறை: ஐபிஎண்ணை வைத்து அளக்கலாம்
- அள்வீட்டுத் தொகுப்பு: புள்ளிவிவரச் சேவையை வழங்கும் தளங்களில் ஒன்றையோ, பலதையோ பயன்படுத்தலாம்.. அதான் வெத்திலைபாக்கு வைக்காத குறையாக் கூப்பிடுறாங்களே...
3. முன்னேற்றம் ஏற்படுதற்கு என்ன மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்?
கடைசிக் கேள்வியான இதற்குரிய பதில், உங்கள் இலக்கை அடைவதற்கு / முன்னேற்றமடைவதற்கு தேவையான மாற்றங்களில் எவற்றை முயல ஆயத்தமாய் இருக்கிறீர்கள் என்று தெளிவு படுத்தும்.
கடைசிக் கேள்விக்குரிய உதாரணத்திற்கு, உங்களுக்கு வேலை அதிகம் என்று வைத்துக் கொள்வோம்(என்ன வைச்சுக் கொள்ளுறது, அதேதான் என்டு நீங்க புலம்புவது கேட்குது), குறைப்பதுதான் இலக்கு.
- அநேகமாய்ப் பயன் தரக்கூடியவை: வேலை நேரத்தில் வலை மேயாதிருப்பது, ஒவ்வொரு நாளும் இன்னும் ஒரு மணி நேரம் கூடுதலாய் வேலை செய்வது. இந்த 2 வழிகளும் பயன் தரும் என்பதற்கு ஆதாரம்: பணியை முடிக்கக் கிடைக்கிற மேலதிக நேரம்.
- நல்ல வழியென நினைப்பவை: சீரான பணிமுறைகளைக் கையாளல், உங்கட அலுவலகத்திலேயே உள்ளவருடனான தொடர்பாடல் முறையை தொ.பே அல்லது நேரிலே பேசுதல் ஆக மாற்றல் (பதிலுக்காகக் காத்திருக்க வேண்டிய நேரம் குறையும்தானே.. கெதியா வேலையை முடிச்சு கெதியா வீட்ட போகலாம்)
- வேறெங்காவது பயன்பட்டவை இங்கு: முடிந்தால் வேலையை எந்திரமயமாக்கிறது (அப்ப வேலை போயிருமே என்டு கேட்டால் நான் பதில்ல மாட்டேனேஏஏஏ..)
- வேற புதிய வழிகள்: மேலாளரிடம் சொல்லிப் பளுவைக் குறைப்பது(நடக்கிற காரியமா என்று யோசிக்காம செய்து பார்க்கலாம், சரி வராட்டி் அதேயளவு வேலையத்தானே செய்யப்போறீங்க), சக பணியாளரோடு பேசியோ சொக்ளேற் கையூட்டாக் குடுத்தோ கொஞ்ச வேலையை அவரிடம் தள்ளி விடுவது, வேலை செய்யும் நேரத்தை மாற்றுவது - 9-5 செக்குமாடா இல்லாமல் 8-4 அல்லது 11-7 என்று உங்களுக்கு உசார் அதிகமிருக்கிற நேரத்துக்கு வேலையை மாற்றிக் கொள்வது, பளு குறைந்த வேறு வேலைக்கு மாறுவது.
மேல சொன்னவற்றில வேலைப்பளுவைக் குறைப்பதற்காய் எந்த மாற்றத்தைச் செய்ய நீங்கள் ஆயத்தம் என்ட தெளிவு இதுகளுக்குப் பதில் (உண்மையாச்) சொல்லேக்க கிடைக்கும்.
அடுத்ததா, தி-செ-க-மு சுழற்சி. இதை அடுத்த பதிவில பாப்பம்.
என்ன செய்ய?
திகைத்தல்களுடன் ஆரம்பிக்கிறது தினம்
இதற்கு மேலும் என்ன என்று நினைத்தால் - விஸ்வரூபமாய்
இன்னுமொரு பயங்கரம் விரிகிறது
கையாலாகத்தனத்தின் ஒற்றைப் பிரதிநிதியாய் வழிந்தோடுகிறது கண்ணீர்,
வேறென்ன செய்ய முடிகிறது?
எம் தப்பித்தல்களுக்காய்
வெட்கப்படவும் குற்றவுணர்ச்சி கொள்வதும் தவிர்த்து?வகை: கிறுக்கினது
உலாத்தப் போக..
இந்தப் பதிவு நான் மறக்காமலிருப்பதற்காக.
பயணங்கள் சுகம் தருபவை. போய்ச் சேருமிடம் குறித்த பார்வையோடே பலர் பயணங்களை அணுகுகிறோம். அப்படியில்லாமல் பயணத்தையே இரசித்து முடிவுடம் போய்ச் சேருவோர் நம்மில் எத்தனை பேர்? பயணம் போகலாம் என்று நினைத்தவுடன் மனதில் தோன்றும் அந்த விவரிக்கவியலாப் பரபரப்பும், பயணத்திற்குத் தேவையான ஆராய்ச்சிகளில் இறங்கி முடிவெடுக்கும் போதும் ஏற்படும் கிளர்ச்சி என்பன இனிமையானவை. முடிவிடமடைந்ததும் வேறு விதமான உணர்ச்சிகளாக உருவெடுத்துக் கொள்பவை. பயணத்தை ஒழுங்கு படுத்தும் போதோ, அல்லது பயணித்துக் கொண்டிருக்க்ம் போது இருக்கும் எதிர்பார்ப்பு அங்கு போய்ச் சேர்ந்ததும், 'அடடா..வந்து விட்டோமே' என்றிருக்கும் எனக்கு. (நிறைய நாள் எதிர்பார்த்து திட்டமிட்டுப் போன ஐரோப்பியப் பயணம் அப்படித்தான் இருந்தது பாரிஸ் போயிறங்கின கொஞ்ச நேரத்துக்கு)
விமானப் பயணமே எனக்குப் பிடித்தமானது. சிலருக்குப் பயம், சிலருக்கு ஒன்றும் பண்ணாமல் உட்கார்ந்திருக்க வேண்டுமே என்ற சலிப்பு - எனக்கு இதெல்லாமில்லை. படத்தையோ அல்லது யன்னலுக்கூடாக முகிலோ நிலமோ வானமோ பார்த்து ரசித்து, பக்கத்தில் இருப்பவருடன் பேசி, பணியாளருக்கு மணிக்கொரு தரம் வெந்நீருக்காகத் தொல்லை கொடுத்து, தூங்கியெழுந்து நிறைக்கும் பயணம். இதில் பிடிக்காமலிருக்க, பயப்பட என்ன இருக்கிறது?
போக/பார்க்க நினைத்திருக்கிற இடங்கள்/நாடுகளைப் பட்டியலிட்டு வைக்க நினைத்தது தான் இப்பதிவின் ஆரம்பம். பட்டியல் ஒரு வித ஒழுங்கிலுமில்லை:
- அவுஸ்திரேலியா
- மொரோக்கோ
- இலங்கை
- நியுஸிலாந்து
- இந்தியா
- அந்தமான்-நிகோபார்
- காஷ்மீர்
- கம்போடியா
- நேபாளம்
- கிரேக்கம்
- அயர்லாந்து
- ஸ்கொட்லாந்து
- வேல்ஸ்
- வடதுருவம்
- பிரான்ஸ்
- சுவிட்சர்லாந்து
- நோர்வே
- டென்மார்க்
- சுவீடன்
- தாய்லாந்து
- மாலைதீவு
- கனடா
- ஐஸ்லாந்து
- கிரிபற்றி
- எத்தியோப்பியா
- தென்னாபிரிக்கா
- எகிப்து
- மடகாஸ்கர்
- இந்தோனேசியா(பாலித் தீவு)
- ஈரான்
- துருக்கி
- ஆப்கானிஸ்தான்
திடீரென்று முடிவெடுத்து வெளிக்கிடும் spontaneous பயணங்கள் இல்லவே இல்லாதளவுக்காய் வெகுவாய்க் குறைந்து விட்டன. வாழ்க்கைச் சுழலில் அப்பயணங்களால் வரும் வசதிக்குறைவுகள் கருத்தில் கொள்ளப்பட்டு பல நல்ல அனுபவங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறேன். ஹென்ரிக்கோவுக்கும் பேர்ணடெட்டுக்கும் மீண்டும் வாழ்த்துக்கள். அவர்கள் முடிவு சரியானது. (அவர்களைப் பற்றி இன்னொரு நாளைக்குக் கட்டாயம் பேச வேண்டும்)
--O-0-O--
பயணமென்று சொன்னதும் அண்ணாவுடன் போனவையே ஞாபகத்தில் மின்னுகின்றன. முக்கியமாக ஒரு பயணம். 1999ம் ஆண்டு - நான்கோ ஐந்து நாட்களுக்கு பன்னிரண்டு பேர் செல்லும் வாகனத்தில் பதினெட்டுப் பேர் போனோம். எங்கெங்கெல்லாமோ சுற்றினோம்..சுற்றிய இடமெல்லாம் வரலாற்றுச் சின்னங்கள் மிகுந்திருந்தன. மிகிந்தலை, பொலன்னறுவை, அனுராதபுரம், கதிர்காமம், சிகிரியா, பெயர் மறந்த இன்னும் வேறு இடங்கள். குளம்/ஆறு கண்டால் நிறுத்திக் குளித்துக் கும்மாளமிட்டு பக்கத்திலேயே எங்காவது ஒரு ஆச்சி வைத்திருந்த கடையில் கிடைக்கிற சோறு-கறியோ அல்லது பாண்-சம்பல்-வாழைப்பழம்-தேநீரோ அல்லது பழங்களோ உண்டோம். ஒரு நாள் அரைநிலவொளியில் vanக்குள் சிலர் தூங்க, மீதி துணி விரித்து குளத்தங்கரையில். இன்னொருநாள் அனுராதபுரத்துப் புத்தர்களையும் தாண்டி நிறையத்தூரம் போய் - எங்கள் குழுவிலிருந்த ஒருவரது அக்கா கற்பித்துக் கொண்டிருந்த பள்ளிக்கூடத்தில் இராத் தங்கினோம். தோட்டத்து மரவள்ளி கிண்டியெடுத்து அவித்து சம்பலுடன் உண்டோம். என் கிராமத்திலிருந்து வெளியேறிய சிங்களவர் சிலரும் எங்கள் குழுவிலிருந்தனர். என் கையெழுத்துப் புத்தகத்தில் அவர்களில் ஒருவர் தமிழில் எழுதித் தந்த 'இனன்களுக்கிடையிலான ஒற்றுமை ஓங்குக!' இன்னும் என்னிடமிருக்கிறது. அதைப் பார்த்துத் திருத்தி 'இனங்களுக்கிடையிலான ஒற்றுமை ஓங்குக!' என்று இன்னொரு தாளில் அவரிடமெழுதிக் கொடுத்த என் அபத்தமும் ஞாபகமிருக்கிறது.
தயிரும் கித்துள்பாணியும் நிறைந்த அந்த நாட்களில் எங்களுக்குள் தமிழ்-சிங்களப் பேதம் இருக்கவில்லை. சண்டை எங்கோ வேறொரு கிரகத்தில் நடந்து கொண்டிருந்தது. அதற்கும் எங்களுக்குமான தூரம் ஒன்றினாலும் எட்டிப்பிடிக்க முடியாதபடி நீண்டு போயிருந்தது.
என் கிராமத்தின் அழகுக்கு அடுத்தபடியாக, அங்கிருந்து புறப்பட்டதன் பிறகு, நான் அழகான மனிதர்களையும் இடங்களையும் அப்பயணத்தின் போது கண்டுகொண்டேன். கல்முனை என்றால் என்ன, கம்பகா என்றால் என்ன..அன்பு மிக்க மனிதர்கள் எங்கேயும் அழகுதான்.
பின்நவீனத்துவம்
வலையில் நிறையப்பேர் பின்நவீனத்துவம் என்டு நிறைய எழுதிறாங்க. அந்தளவுக்கு எனக்குத் தெரியாது. ஆனாலும் "கண்ட" அளவில பின்நவினத்துவம் எண்டா இதுதான். :O))
New South Wales Art Gallery ல கண்டது.
வகை: படம் பார்
இரவுகள்
பொதுவிலே இரவுகள் அழகானவை. அதிலும் மழையைப் போர்த்திக் கொண்ட இரவுகள் எப்பவும் எனக்கு மிகவும் பிடித்தமானவையாக இருந்திருக்கின்றன. அவற்றுடன் கூடவே நித்திரை கொள்ளப் போக வேண்டுமென்று தோன்றவே மாட்டாமல் விழித்திருந்து பாடல் கேட்கிற இரவுகளும். பாசாங்குகள் ஏதுமற்று எங்களைப் பகிர்ந்து கொள்வதால் இந்த இரவுகளுடன் மிகவும் இயல்பான நெருக்கம் உருவாகிறது- உற்ற நட்பொன்றினைப் போல. இன்றைக்கும் உட்கார்ந்திருந்தேன்(இருக்கிறேன்). மனதை சங்கடப்படுத்தும்/நடப்புச் சூழலிலிருந்து வெளியே ஒரு கனவுலகுக்குக் கொண்டு போகவோ அல்லது ஞாபகங்களைக் கிளறவோ வைக்கிற இசை மட்டுமே துணை வருகிறது.
இரவுப் பொழுதுகளில்தான் நிறையத் தோன்றுகிறது. இதையிதை இப்படியிப்படி எழுதலாம், இப்படி ஒளிப்படம் எடுக்கலாம், வாழ்த்து மடல்களின் வடிவமைப்பு, தொடர்பற்றுப் போய்க் கொண்டிருக்கும் ஆட்கள் என்றெல்லாம் ஒரு நீரூற்றுப் போல யோசனைகள் பிரசவிக்கின்றன. ஞாபகமிருக்கும் என்று குறிப்பெடுக்காமல் தூங்கிப் போவதே வழக்கமாகிப் போயிருக்கிறது எனக்கு. இன்றைக்கும்போய் படுகையில் சரிந்தால் எப்போதும் நடப்பது போலவே எங்கெங்கெல்லாமோ சுற்றி தொடங்கின எண்ணத்துக்குச் சற்றும் சம்பந்தமில்லாத இன்னுமொரு எண்ணம் ஓடிக்கொண்டிருக்கையில் தூங்கிப் போகப் போகிறேன். அதற்கென்ன அவசரம்.. இன்னும் கொஞ்சம் உட்கார்ந்திருக்கலாம் - வந்திருக்கும் மழையுடன் பேசிக் கொண்டு. மழை போல மனதைக் கழுவுகிற/நிறைவைத் தருகிற விதயங்கள் மிகக்குறைவு. சிரபுஞ்சி போகவேண்டும்..ஓரிரவுக்காவது.
வகை: கிறுக்கினது
சந்திரா என்றொரு அழகி
என்னதான் படித்தாலும், நல்லோர் சகவாசம் இருந்தாலும் எவ்வளவு விதிக்கப்பட்டதோ அவ்வளவுதான் மதி என்று நிறுவிக் காட்டவும் சிலர். இவர்களை நினைத்தாலே கோபமும், அனுதாபமும், சிரிப்பும் ஒருங்கே வருகிறது. (தயவு செய்து யார், ஏன், என்ன என்றெல்லாம் கேட்காதீர்கள்.)
---- சரி, தொலையட்டும் அந்தக் கதை. சந்திராவைப் பற்றிப் பேசலாம்.
எடுத்துப் பேசும் போதெல்லாம் "எப்படியிருக்கிறாய்" என்ற கேள்வியுடன் ஆரம்பித்து அதற்குப் பதில் நான் சொன்னதுடன் நடந்தவைகளில் சிரிப்பானவற்றையோ அல்லது "அம்மா xx மணிக்குப் போனவ, இன்னும் வரேல்ல" என்றோ ""அம்மா சரியான குழப்படி, சொல்லுக் கேட்கிறேல்ல" என்றோ முறைப்பாடு சொல்லும் பெண் இன்றில்லை. உயிர் போய் 36 நாளாகிறது. மனிதர்களைக் கூர்ந்து கவனிக்க, உள்ளே தேடிப்பார்க்க என்று கடுமையாக ஞாபகமூட்டிக் கொண்டும் அட! இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாமே, அவருடன் அதிகநேரம் கழித்திருக்கலாமே என்று காலங் கடந்த ஞானோதயம் தரும் குற்றவுணர்ச்சிகளுடனும் கடந்து போயிருக்கிற ஒரு மரணம்.
செத்தவீட்டில் போன்று இதுதான் நடந்தது என்றெல்லாம் சொல்லப் போவதில்லை. முடிந்து போனபின் எங்கள் ஆறுதலுக்குத்தானே இந்த அக்குவேறு ஆணி வேறாகச் சாக முந்தி நடந்ததும், அவர் சொன்ன வார்த்தைகளுக்கு பொருளும் உள்ளர்த்தம் கண்டு பிடிப்பதும் கற்பிப்பதும். உசாராக சந்தோசமாக அன்பாக வாழ்க்கையை வாழத் தெரிந்த ஒருவர் இப்போது இல்லையே என்ற துக்கம்தான் அவரை அறிந்த சந்தோசத்துடனும் அவர் பற்றின ஞாபகங்களுடனும் சேர்ந்து மனதில் பூத்திருக்கிறது.
இறக்கப் போகிறார் என்று தெரிந்ததும் அதற்காகக் காத்துக் கொண்டிருப்பது பெருங் கொடுமை. அது போன்ற கொடுமைகள் எண்ணிக்கையில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடியனவாய்த்தான் இருக்கும். அதைவிட வெறுங் காலுடன் கொளுத்தும் வெயிலில் வறண்டு போனதொரு ஆற்றின் கரையில் அல்லது பாறையில் அசையாமல் நெடுநாட்களுக்கு நின்று கொண்டேயிருக்கலாம். மற்றவர் இருக்கட்டும்.. அவரது உடல் ஒத்துழைக்க மறுப்பதை உணர்ந்து கொண்டாலும் கருப்பையில் உருவாகின கணத்திலிருந்து கூடவே இருந்து கடந்த சில வருடங்களாக தோழிகள் போல ஒன்றாக வாழ்ந்திருந்தவள் இறக்கபோகிறாள் என்று அறிந்தும் எந்த நிமிடம் வரை என்று அறியாதிருப்பது போல வதை வேறொன்றும் வேண்டாம் என்று தோன்றுகிறது.
அந்த நாளையும் மழையைப் பூசிக் கொண்ட தொடர்ந்து வந்த நாட்களையும் கடந்து வந்த ஒரு பிற்பகலில் சந்திராவின் உடைமைகளினூடாகப் பயணித்துக் கொண்டிருந்த போதுதான் அந்த குறிப்பேட்டைக் கண்டேன். எண்ணற்ற குடும்பங்களுக்கே உரித்தான பரகசியமான இரகசியக் கதைகள். அதிலொன்றுதான் - அடுத்த தலைமுறைக்கு அரசல் புரசலாகத் தெரிந்த கதை..சந்திராவின் கோணத்திலிருந்து.
சிறுவயது வாழ்க்கையும், பட்டப்படிப்புக்கு புனே மற்றும் கல்கத்தா சென்றதும், சிங்களவரைக் காதலித்து மணந்த குற்றத்திற்காய் மூத்த தமக்கையின் குடும்பம் விலக்கினதும், எத்தியோப்பியாவுக்கு கற்பிக்கப் போனதும், அங்கு வேறொருத்திக்குக் கணவரால் பிறந்த பிள்ளைகளையும் அவற்றின் தாயையும் தனதாய் வரித்துக் கொண்டதும், அதையொட்டிய தனது உணர்ச்சிகளையும், பின்னர் தொழில் நிமித்தம் கிரிபத்தி போனதும், கணவர் இறந்த பின் தனியொருவராய் உழைத்து பிள்ளைகளைப் பார்த்ததும், அவர்களுக்கென்று வாழ்க்கை அமைய உதவினதும், தன் மாணவர்கள் பற்றியும், பிறகு நாடு திரும்பி மூத்த தமக்கையின் கணவர் இறந்து போயிருக்க அங்கு சென்று 34-35 வருடங்களின் பின் சகோதரிகளின் சந்திப்பும், அங்கு கூடவே அக்கா இறக்கும் வரையிருந்ததும், அதற்குப் பின் இரட்டைச் சகோதரியுடனிருந்த அன்றாட வாழ்க்கையும் விரிவான எழுத்தில் குறிப்பேட்டின் தாள்களில் நிரம்பியிருந்தது. ஆங்காங்கே அதற்குள் பழைய கடிதங்கள்(1965-69, 1977இல் எழுதியவை), இந்தியாவுக்குப் போக வீட்டிலிருந்து கொழும்பு சென்ற தொடர்வண்டிப் பயணச் சீட்டு(1950களின் ஆரம்பம்), பட்டம் கிடைத்ததென்று அறிவித்த தந்தி, பிள்ளைகளின் ஓவியங்கள், கவிதைகள் என்பனவும் ஒரு வாழ்க்கையின் மௌனச் சாட்சியங்களாய் அந்தக் குறிப்பேட்டில் கொட்டிக் கிடக்கக் கண்டோம். முன்முடிவுகளோ பின்முடிவுகளோ இல்லாமல் பார்க்கிறேன்; அவரெடுத்த முடிவுகளின்படி அதுதான் சந்திரா என்கிற மனுஷியின் வாழ்க்கை.
வாழ்க்கைச் சரிதையை எழுதி வைக்க வேண்டும் என்று சொல்லுகிற கிறிஸ்தவ சமயப் பிரிவொன்றில் சந்திரா சேர்ந்து கொண்டதில் எங்களுக்கும் ஒரு வாழ்க்கையை, வாழ்ந்தவரின் கண்ணுடாகப் பார்க்கக் கிடைத்தது. வாழ்ந்த வரைக்கும் அவர் சம்பாதித்துக் கொண்ட அன்பும் மனிதர்களுமே அதற்குச் சாட்சியம். நிறையப் பேரை இப்படியாக அவர்களின் பார்வையில் தெரியாமல் போய் விடுகிறது. பிறர் கொடுக்கிற நிறக் கண்ணாடிகளுக்கூடாகவே அவர்களின் வாழ்க்கையைப் பார்க்கிறோம்.
வாழ்க்கைக்குத் தேவையானது என்ன என்பதை - முழுமையாக ஒரு எதிர்பார்ப்புமில்லாமல் அன்பு செலுத்தி, எவரென்றாலும் உள்ளன்போடு பழகி, எல்லாருக்கும் நல்லதே நினைத்து நன்மையே செய்த/செய்கிற - சந்திரா மற்றும் அவரது இரட்டைச் சகோதரி போன்ற அழகிகளிடமே கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது.
[சந்திராவின் இரணைக்கும், சந்திராவை அறிந்தவர்கள் எல்லாருக்கும், சந்திரா இருக்கும் போதிருந்தே இருக்கும் நடைமுறை பின்பற்றி முன்வீட்டுப் பிள்ளைகள் தொடர்ந்தும் நீர் வார்த்துக் கொண்டிருக்கிற சந்திராவின் பூஞ்செடிகளுக்கும்.]
வகை: இப்பிடியும் நடந்துது , குழையல் சோறு
உலகமும் உரையாடல்களும்
ஒரு கேள்வி கேட்கிறேன்.. ஒருவர் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றைச் சாதித்திருக்கிறார் என்று சொன்னால் அதை ஏன் materialistic ஆக உள்வாங்கிக் கொள்கிறோம்? ஏன் 'சாதித்தல்/அடைதல்" என்பது பணத்தினதோ, புத்திசாலித்தனத்தினதோ, சமூகத்தில் அவரது இடத்தையோ அளவீடாக கொள்ளப் படுது? (மருத்துவப்படிப்புக்குக் தேர்ந்தானாம், அவளிட கடை நல்ல பெரிசு அல்லது அவர் கோயில் president) இதுகள் தானா சாதனைகள்? (தனக்கு விரும்பின/திறமையுள்ள துறையில படிச்சுத் தேருறதையோ அல்லது தொழில் செய்து முன்னேறுறதையோ குறையாச் சொல்லவில்லை. அதற்குத் தேவைப்படுற கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் I appreciate it)
பொருளைக் கொண்டு மனுசரை அளவிடுற இந்த உலகத்தில, நேர்மை, தீங்கு செய்யாமை போல நல்ல குணங்கள் இருக்கிறதோ, அதுகளை நெறியாக் கொண்டு வாழ்றதோ ஏன் மேற்சொன்னதுகள் போல ஒரு achievement ஆக கருதப்படுறல்ல? பார்க்கப் போனா உங்களாலயும் என்னாலயும் ஆன சமூகம் இப்படிப் பட்ட குணங்களோட வாழுற ஆட்களை மதிக்கிறல்ல. முகத்துக்கு முன்னால சிரிச்சிட்டு பின்னால் போய் பிழைக்கத் தெரியாத ஆள் என்டு ஏன் சொல்லுது?
என்ன திடீரெண்டு இப்பிடி சொல்லுறனென்டு பார்க்கிறீங்களா..
இருபதுகளின் நடுப்பாகத்தை எட்டிப்பார்க்கப் போகிற வயதில் ஒரு சக மனுஷி. அலைவரிசைகளும் இயல்புகளும் ஒத்துப்போறதாலேயோ என்னவோ இந்தப் பெண்ணோட பல விதயமும் பேச முடியுது. அது பிடிச்சுமிருக்கு.
இன்றைக்கு வழமையான நல விசாரிப்புகளுக்குப் பிறகு "it doesn't feel like I've achieved anything in life" என்றா. முதலாம் பந்தில சொன்னமாதிரியான அளவீடாக் கொள்ளப்படுற சாதிப்புகளை தான் இன்னும் செய்யல்ல என்டுறதுதான் - அதுகளை நினைச்சு ஒரு தாழ்வு மனப்பான்மையோட யோசிக்கத் தேவையில்ல என்டு தெரிஞ்ச - இவவுக்கு வந்த யோசனை. இவவோட நடக்கிற உரையாடல்கள் அனேகமாகக் கதைச்சு முடிஞ்ச பிறகும் சிந்திக்க வைக்கும். வழமையாகக் கதைக்கிற ஒரு தலைப்பாக வாழ்க்கை/வாழ்தல் இருந்தாலும் தன்ட வயசு ஆட்கள விடவும் மனமுதிர்ச்சி கொண்ட, தான் தேர்ந்த களத்தில் masters(முதுகலை?) படிக்கிற அவட கூற்று கொஞ்சம் யோசிக்க வைச்சது.
தேர்ந்தெடுத்த துறையில தன்னை இன்னும் மேம்படுத்திக் கொள்ளப் படிக்கிறா. முடிஞ்சளவு உதவிகள் செய்கிறா, ஒழுங்கான வழியில வாழுறா.. ஆனாலும், இப்படி யோசிக்கத் தேவையில்லை என்று தெரிந்து கொண்டும், இப்படி தான் ஒன்றும் சாதிக்கவில்லையே என்று ஒரு கொஞ்ச நேரத்துக்குத்தான் என்றாலும் நினைக்கிற மனநிலை எதனால வருது? கொஞ்ச நேரம் கதைச்சவுடன எழும்பின கேள்விதான், நல்ல முறையில் வாழ்க்கையைக் கொண்டு செலுத்திறது ஏன் சாதனையா கருதப் படுறல்ல என்டுறது.
இப்பிடியே அவவோட கதைச்சது வழமையா நடக்கிறது போல வளர்ந்து வளர்ந்து எங்கெயெங்கையோ போயிற்று. இப்படிப்பட்ட உரையாடல்களில எப்பவும் எனக்குச் சந்தோசம். தயக்கமில்லாம தங்கட மனசை வெளிப்படுத்தி, தங்களையும் உலகத்தையும் அவங்களுக்கே உரித்தான முறையில அலசி ஆராய்றதும் எடுக்கிற சரியான முடிவுகளும் நம்பிக்கை தருது.
கேள்விகள் கொண்ட, அதை அடக்கிவிடாமல் கேட்கிற இந்தத் தங்கைகள் அழகானவர்களாயிருக்கிறார்கள்.
கணிதம்
கணிதத்தின் மேல் எப்பவும் ஒரு விருப்பம் இருந்ததுண்டு. இன்னும் இருக்கிறது. சதுரக் கோடு போட்ட கொப்பிகளும், பாடமாக்கியே தீர வேண்டியிருந்த வாய்ப்பாடுகளும், மடக்கைப் புத்தகமும், இன்னும் வேணும் என்று கணக்குகள் கேட்க வைத்த திருமதி ஜோணும் என்று கணிதம் பற்றிப் பல ஞாபகங்கள்.
அநேகமானோருக்கு இனி இல்லை என்டளவு வறண்டதாய் அலுப்படிக்கக் கூடியதென்று தோன்றும் புத்தகங்கள் அதிசயமாய் எனக்குப் பிடித்து போகின்றன. அப்படி வாசித்தவைகளில் இரண்டு The Seven Daughters of Eve மற்றும் In The Footsteps of Eve. இன்னொன்று ஆப்பிரிக்காவிலும் ஈராக்-ஈரானை அண்டிய பகுதிகளிலும் மேற்கொண்ட தொல்பொருளாய்வு பற்றியது. அதன் பெயர் எப்பவாவது ஒருநாள் திரும்பக்கூடும். :O) அப்படியான ஒரு வரிசையில் கண்ணில் பட்டு நான் வாசிக்க ஆரம்பித்திருக்கிற "The crest of the peacock: Non-European roots of mathematics " எனும் புத்தகம் ஐரோப்பா தவிர்ந்த ஏனைய இடங்களில் கணிதம் பற்றிப் பேசுகிறது. இதனை வாசிக்கும் வரையில் எப்படி உலக நாகரிகங்களில் கணிதம் இருந்திருக்கக்கூடும் என்ற எண்ணம் எனக்கு எழுந்தது மிகமிகக் குறைவு. வந்திருந்தாலும், அது எகிப்தை மையமாக வைத்தே இருந்து, பார்க்கிற எகிப்து பற்றிய ஆவணப்படங்களினூடாக விடையளிக்கப்பட்டிருக்கிறது.
புத்தக ஆசிரியர் பரவலாகக் காணப்படுகிற "கிரேக்கக் கல்வி --(இருண்ட காலம்)--> கிரேக்க அறிவு பற்றிய கண்டுபிடிப்பு --(ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலம்)--> ஐரோப்பிய/அதன் குடியேற்ற நாடுகளின் அறிவு/வளர்ச்சி" என்கிற ஒருதலைப்பட்சமான கற்பித்தலைப் பற்றிப் பேசுகிறார்.
கிரேக்க வழி வந்து மேம்படுத்தப்பட்ட கணித அறிவு தவிர, ஏலவே இருந்திருக்கிற நாகரிகங்களில் கணிதம் பற்றி உலகம் பேசுவதில்லையென்றும் அவற்றைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதென்றும் இப்புத்தகத்தில் சொல்லப்படுகிறது.
இதுவரை வாசித்ததிலிருந்து இரு பந்திகள்:
1. The neglect of the Arab contribution to the development of European intellectual life in general and mathematics in particular is another serious drawback of the 'classical' view. the course of European cultural history and the history of European thought are inseparably tied up with the activities of Arab scholars during the Middle Ages and their seminal contribution to mathematics, the natural sciences, medicine and philosophy. In particular, we owe to the Arabs in the field of mathematics the bringing together of the technique of measurement, evolved from its Egyptian roots to its final form in the hands of Alexandrians, and the remarkable instrument of computation (our number system) which originated in India; and the supplementing of these strands with a systematic and consistent language of calculation which came to be known by its Arabic name, algebra. An acknowledgement of this debt in more recent books contrasts sharply with a failure to recognize other Arab contributions to science.*
*[They include:
(a) An early description of pulmonary circulation of the blood, by Ibn al-Nafis, usually attributed to Harvey, though there are records of an earlier explanation in China;
(b)The first known statement about the refraction of light, by Ibn al-Hayatham, usually attributed to Newton;
(c)The first known scientific discussion of gravity, by al-Khazin, again attributed to Newton;
(d)The first clear statement of the idea of evolution, by Ibn Miskawayh, usually attributed to Darwin;
(e)The first exposition of the rationale underlying the 'scientific method', found in the works of Ibn Sina, Ibn al-hayatham and al-Biruni, but usually credited to Francis Bacon.
A general discussion of the western debt to the Middle East is given by Savory(1976), while detailed references to the specif contributions of Arab science are given by Gillespie(1969-) ]
2. AL-Kwarizmi wrote a [second] book, of which only a Latin translation is extant: Algorithmi de nomero indorum, which explained the Indian number system. While al-Khwarizmi was at pains to point out the Indian origin of this number system, subsequent translations of the book attributed not only the book but the numerals to the author. Hence, in Europe any scheme using these numerals came to be known as an 'algorism' or later, 'algorithm' (a corruption of the name al-Khwarizmi) and the numerals themselves as Arabic numerals.
வாசிக்க வாசிக்க, எப்படி நாம் பைதகரசையும், ஆர்க்கிமிடிசையும் தவிர வேறிடங்களில் கணிதம்/அறிவியல் போன்றவற்றினைப் பற்றிச் சிந்திக்காமல் போனோம் -கேள்விகள் இல்லாதிருந்தோமென்று ஆச்சரியமாயிருக்கிறது. படிப்பு என்பது புத்தகத்திலிருப்பதைச் சப்பியோ கரைத்துக் குடித்தோ பரீட்சையில் சத்தியெடுப்பது என்றளவில் இருக்கிறவரைக்கும் கேள்விகள் மாணவர்களால் எழுப்பப்படாது போல..
(தொடர்ந்தும் இப்புத்தகம் பற்றிப் பதியப்படக்கூடும்.)
வகை: படிச்சுக் கிழிச்சது
இன்றைய கிறுக்கல் குறிப்புகள்.
இனிமைகள் காற்றுடன் கதை பேசும் இலைகளைப் போல தொடர்ந்து இசைத்துக் கொண்டுதானிருக்கின்றன.. நாம்தான் தொடர்ந்து செவி மடுத்துக் கொண்டேயிருப்பதில்லை. இயற்கையும் இசையும் கூட அப்படித்தான் - கவனித்தால் தன் பாட்டுக்கு மனம் இலேசாகி விடுகிறது.
இரண்டாம் குறிப்பு: இன்றைக்குக் கண்ட பிள்ளையார் எறும்புகள். சின்னக் கறுத்த எறும்புகள். இவற்றை ஏன் பிள்ளையார் எறும்புகள் என்று சொல்கிறோம்? (அல்லது வழக்கம் போல நான் தானா!). வீடு வரும்போது கட்டிட வாசலில் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டு ஒரு இறந்து போன பூச்சியின் உடலைத் தூக்கிக் கொண்டு நின்றன. படியேறி வீட்டில் பை வைத்து நூலகத்துப் புத்தகங்களை எடுத்து மீண்டும் இறங்கி வர எடுத்த இரண்டு நிமிட நேரத்தில் மொத்தமாய்க் காணாமற் போயிருந்தன. பூச்சிக்கு அரச மரியாதையுடன் கூடிய தகனமா நல்லடக்கமா அல்லது வேறெதுவுமா?
சின்ன வயதில் எறும்பு கொன்று அதனால் சிவன் நெற்றிக் கண்ணால் எரித்து விடுவாரோ என்று பயந்திருந்த சில நாட்களின் ஞாபகம் திரும்பவும் மேலெழுகிறது.
முதல் குறிப்பு இரண்டாம் பகுதி: அலுவலகத்து 'Secret Santa' தந்த 'Air (French Band)' இனது 'மூன் சபாரி' கேட்கக் கேட்க கண்ணுக்குள் விரியும் ஒரு வேப்ப அல்லது மா மரத்தின் கீழ் போடப்பட்ட ஒரு கயிற்றுக் கட்டில்/ஹமொக், கொஞ்சம் காற்று, கொஞ்சம் பழரசம் (இவையுடன் அந்த இசையும்) சேர்ந்தால் சொர்க்கம் போலத் தோன்றுகிறது. பார்க்கலாம்.. நத்தார் விடுமுறைக்கு வேப்ப/மா மரங்கள் இல்லாவிட்டாலும் ஏதாவதொரு நிழலின் கீழ் இந்தச் சொர்க்கம் கிடைக்கிறதாவென்று. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது பகல் கனவு.
முதல் குறிப்பு முதலாம் பகுதி: நாதமாய் செவியை நிறைக்கிறது. பயிற்சி இல்லாமல் துருப்பிடித்துப் போன சிலவற்றை இரண்டு தரம் திருப்பித் திருப்பி வாசிக்க வாசிக்க நீண்ட நாளைக்குப் பின் சந்திக்கும் நண்பர்களின் அளவலாவல் போல் வீணைத்தந்திகளில் விரல்களின் கோலங்கள். சிலவேளைகளில் கையைக் கூர்ந்து பார்த்தால் எப்படிப் போய் வருகிறது - அடுத்தது இந்த சுரம்தான் என்றெண்ணாமலே - என்பது ஆச்சரியமாயிருக்கிறது. சூழலை மறக்கடிக்கச் செய்யவென்றே இசை வழிகிறது. நனைந்து கொண்டேயிருக்கிறேன்..
வகை: கிறுக்கினது
வெயில்
வெயில் பற்றின முதல் நினைவு எதுவாக இருக்கும்? கூரைக்குள்ளால் ஒளிந்து வந்து தரையில் வட்டம் போடுவதும் இலைகளுக்கூடாய் வந்து விழுந்து தன் 8 நிமிஷப் பயணக் களைப்புப் போக தரையில் கிடப்பதுமே என் ஞாபகமாய் மேலெழும்புகிறது. குளிர்காலத்தில் ஹைட் பார்க்கில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு குளிருக்கு இதமான மெல்லிய சூட்டை அனுபவித்தால் தெரியும்.. வெயிலின் அருமை. அயனவலயப் பிறவி என்ற பெயர் சரியாய்த்தான் இருக்கிறது. வெயில் இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை.. வெயில் தாகம் எடுத்து அலைகிறேனோ என்றதொரு சந்தேகம் முளைத்திருக்கிறது. எப்போதும் சூரிய ஒளி் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கவும் சாயுங் காலத்தில் சூரியன் சாயாமலிருக்கவும் கூடுமானால் என்று கனவு காணத் தோன்றுகிறது. எல்லாம் குளிர் செய்யும் வேலை.. கோடை வந்த பிறகு என்னிடம் கேட்டுப் பாருங்கள்.. மழைதான் வேண்டுமென்று 'முழக்கி'ச் சொல்லுவேனாயிருக்கலாம். :O)
சுட்டெரித்த (போதும் அதைக் கண்டு கொள்ளாமலிருந்த) ஊர் வெயிலுக்கும், முகத்திலறைகிற அனல் காற்றுடன் நடமிடுகிற இங்கத்தேய வெயிலுக்கும் எவ்வளவு வித்தியாசம். அவ்வளவு ஏன் 2-3 மணிக்கெல்லாம் தலை கொதிக்க கவசம் ஏதுமின்றி நடந்து சென்ற கொழும்பு வெயிலும், செழித்த மரங்களுக்கிடையே ஒளித்துப் பிடித்து விளையாடும் கம்பகா வெயிலும், தெருவுக்குப் போட்டிருக்கும் தாரினை உருக்கி உரு மாற்றும் மட்டக்களப்பு வெயிலும், திருக்கோணமலை, யாழ்ப்பாணம், பொலநறுவை, நீர்கொழும்பு, காலி, கதிர்காமம், பிபிலை என்று நான் போயிருக்கிற அத்தனை இடங்களிலும் நான் கண்ட வெயில்களும் வித்தியாசமானவைதாம். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு குணம் அதற்கு. காளிக்குக் கோபம் வருமாம். அவவுக்குக் கோபம் வருகிறதோ இல்லையோ, தன் கோபத்தையெல்லாம் காளி கோயில் மணலில் வெயில் இறைத்து வைத்திருக்கும். தடை போட்டு மரங்களும் கூரைகளும் குடை பிடித்தாலும் எப்படியோ உள்நுழைந்து தரையில் பொட்டு வைத்து / கோலம் போட்டு அழகுபார்க்கும். தாவரங்கள் வாழ உயிர் கொடுக்கும். சில இடங்களில் வெயிலுக்கு ஒரு குளிர்ச்சி கூட வந்துவிடும். மனிதர்களைப் போல வெயிலுக்கும் கோபம், அமைதி, அழகு, கருணை என்று எத்தனையோ முகங்கள், குணங்கள்.
(முதற் தடவை நோர்வே போயிருந்த மூன்று மாதங்கள் அங்கு இலையுதிர் மற்றும் பனிக்காலம். அந்த ஆண்டு பனிக்காலம் பிந்தினதாம்..ஆனாலும் வெயில் இல்லாமல் போகாமலில்லை. என் உற்சாக மட்டமும் அந்நேரத்து வெயிலைப் போலவே குறைந்து போனது. இங்கு வந்த பிறகுதான் வின்டர் ப்ளூஸ் என்பது பற்றிக் கேள்விப்பட்டேன். குளிர்காலமென்றாலும் நல்ல சூரிய வெளிச்சமுள்ள இடத்துக்கு வந்து சேர்ந்தது நல்ல காலம் .)
குளிர்நாடுகளிலே பிறந்தவர்கள் பலர் பாவம்; வெயிலைத் தாங்கார்களாம். ஆனால் எனக்கோ இன்னுமின்னும் வேண்டும் போல இருக்கிறது. வசந்த காலத்து இலைகளையும் பூக்களையும் (விட்டுப் போக மனமில்லாமல் தொங்கும் குளிரையும்) தடவி் காற்றை நிறைக்கும் அந்த மஞ்சள் வெயிலுக்காகவும், அந்த அழகிய மஞ்சள் வெளிறி நிறமற்றுப் போய் ஈரமில்லாமல் சண்டித்தனம் காட்டுகிற காற்றோடு சேர்ந்து எறிக்கிற கோடை வெயிலுக்காகவும் நான் காத்திருக்கிறேன். என்னதான் மழையினை நேசித்தாலும் எப்போ வருமென்று பார்த்திருந்தாலும் முத்துக்களும் வெள்ளிச் சரங்களும் காட்டும் நாட்டியத்துக்காய்க் காத்திருந்தாலும், வெயிலைக் காணாத மாத்திரத்தில் என் மனமும் அலைய ஆரம்பித்து விடுகிறது - வீடு திரும்பப் பிந்துபவரைப் பற்றி எண்ணுகிற ஈழத்துக் குடும்பத்தினதைப் போல .
வகை: இயற்கை , கிறுக்கினது , குழையல் சோறு
நம்பகமான நிறுவனங்கள்
நியுயோர்க்கிலுள்ள ரெபுட்டேஷன் இன்ஸ்ட்டிடியூட் உலகின் நம்பகமான நிறுவனங்கள் பற்றி 29 நாடுகளில் 60,000 பேரிடம் இவ்வாண்டின் தொடக்கத்தில் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகளை போர்ப்ஸ்.கொம் தளத்தில் காணக் கிடைத்தது. அதில் நாடு வாரியாக உயர் 200, உயர் 100, உயர் 50 மற்றும் உயர் 10 இல் காணப்படும் நிறுவனங்களின் நாடுகளைப் பட்டியலிட்டால்..
- உயர் இருநூறில் முதல் ஐந்து இடங்களை (மொத்தமாக 104 நிறுவனங்கள்)அமெரிக்கா, டென்மார்க், ஜப்பான், ரஷ்யா, பிரேசில், சீனா என்பனவும்
குறிப்பிடப்பட்ட 200 நிறுவனங்களில் இந்தியாவில் அமைந்திருப்பவை 7. (சுவிற்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம், நெதர்லாந்து ஆகியவற்றிற்கும் 7 நிறுவனங்கள்): விப்ரோ, இன்போசிஸ், டாடா, மாருதி உத்யோக், எல்.ஐ.சி, இந்துஸ்தான் லீவர் மற்றும் மகிந்திரா & மகிந்திரா.
தத்தமது நாட்டிலேயே இந்நிறுவனங்கள் மதிப்பிடப்படுகின்றன. மக்கள் தம்நாட்டு நிறுவனங்களில் நம்பகமானவற்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவைத் தவிர ஏனைய நாடுகளில் கருத்துக்கணிப்பு இணையத்தினூடாகவே நடத்தப்பட்டிருக்கிறது. வயது, பால், கல்வித்தகைமை வேறுபாடின்றி பலதரப்பட்ட (இணையத் தொடர்பாடல் வசதி உள்ளோரிடம்) கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. கருத்துக்கணிப்பு மற்றும் தரப்பட்டியல் எவ்வாறு கையாளப்பட்டு முடிவு எட்டப்படுகிறது என அறிய இங்கே பாருங்கள் .
பாட்டொன்று கேட்டேன்..
பிரபாவிடம் அல்ல.(கேட்க வேண்டிய ஒரு பாடல் இருக்கிறதுதான்..) :O)
நான் சொல்ல வந்தது யூரோவிஷன் பாட்டுப்போட்டி. மே 12ம் திகதி போட்டியில் சேர்பியா வென்றுமாயிற்று. எங்களூரில் நேற்றைக்கும் இன்றைக்குமாகத்தான் SBS ஒளிபரப்புகிறது. எனக்குப் பிடித்திருந்த பாடல் 6ம் இடம் கிடைத்த பல்கேரியாவினுடையது. டம் டம்மென்று நல்ல அடி.. நீங்களும் பாருங்களேன்:
(மு.பி.கு: பயணக்கதையை அடுத்த பாகத்தோடு முடிக்கிற எண்ணம், சினேகிதி வேறே ஏன் இன்னும் விசரியாவே இருக்கிறீங்க என்றும் கேட்டுவிட்டா.. கெதியில பதிவுகளோட வாறேன். )
வகை: குழையல் சோறு , திரை
விசரியென்கிற நான்...
விளையாடக் கூப்பிட்ட ராதா ஸ்றீராம், பிரபா, மலைநாடருக்கு நன்றி.. விசர்க்குணங்கள் இருக்குது என்டு தெரிஞ்சுதான் கூப்பிட்டிருக்கிறீங்க போல!! :O))
முதல்ல விளையாட்டுக்கு ஆள் சேர்த்திட்டு வாறன்..
யோகன் (பாரிஸ்)
சினேகிதி
மதி
கலை
அஞ்சலி
தங்களது சித்திர விசித்திர குணாம்சங்களைச் சொல்லுமாறு மேற்கூறியவர்களை இத்தால் அழைக்கிறேன்.
எனக்கு இருக்கிற சில விசித்திர குணம் (என்டு எனக்குப் படுபவை)
5. எதாவதொன்றில் ஆர்வம் வந்தால் அதுவே கதி. எப்படியும் 5- 6 வாரமெடுக்கும் அந்த அலை ஓய! பிறகு இன்னொருமுறை அதிலே ஆர்வம் வரும் வரை திரும்பிப் பார்ப்பதேயில்லை. மாறாத ஆர்வம் சிலவற்றில் இருக்கிறது. உதாரணத்துக்கு:
* ஆவணப்படங்கள் கண்டால் பார்க்கவே வேண்டும். வேற ஒன்றும் அந்த நேரத்தில் ஓடாது. பார்க்க முடியாவிட்டால் பதிவு செய்து பிறகு பார்ப்பேன். தொ.காவில சில நிகழ்ச்சிகளை அவற்றின் தலைப்பு/முடிவு இசைக்காகவே பார்க்க ஆரம்பித்ததும் உண்டு. (Sitting Ducks சலனக் கேலிச்சித்திரம், House தொடர்.. இன்னும் சில நிகழ்ச்சிகள்). தொ.கா. நிகழ்ச்சிகள் சிலவற்றுக்கு அடிமையாகவே கிடப்பதும் ஒரேயடியாய் அவற்றைப் பார்ப்பதை நிறுத்துவதும் உண்டு.
* அனுப்பும் வாழ்த்து மடல் அனேகமாக நானே செய்ததாய் இருக்கும். இதற்காகவே, காண்கிற பூக்கள், வித்தியாசமான அமைப்புடைய இலைகள் சேகரிப்பேன். பேரங்காடிக்குப் போய் என்னைத் தவற விட்டால் வந்த வழியில் எங்காவது புத்தக/கைவினைப் பொருள் கடை இருக்கிறதா என்று பார்த்து அதற்குள் நுழைந்தால் என்னைக் கண்டு பிடிக்கலாம். அந்தளவு புத்தக/கைவினை வெறி.
4. கோவம் வரும். ஏன் எதுக்கெண்டெல்லாம் இல்லை. சுள்ளென்று எரிந்து விழுவேன். ஆனால் மற்ற நேரங்களில், அமைதியின் உருவமாய் இருப்பவர்களுக்கே கோவம் வரும் சந்தர்ப்பத்தில், எனக்கே ஆச்சரியம் வரும் வகையில் அமைதியாய் பொறுமையாய் பொறுமையின் சிகரம் ஒரு எருமையாய் இருப்பேன். ஆக, கோவம் வரும். ஆனா எப்ப என்டு தெரியாது.
குறிப்பாக எரிச்சல் வருவது மேற்கத்தேய 'பெண்' வரையறையை தங்களுக்குக் கற்பித்துக் கொண்ட பல்கலைக் கழகம்/வேலை செல்லும் இங்கிருக்கும் பெண்களிடம்(அறிவு சார்பாய் இல்லாமல் தோற்றத்தில் அதிக ஈடுபாடு கொள்வது அதைக் கொண்டே மற்றவர்கள் மதிப்பிடுவது என்பதைச் சொல்கிறேன்.). உடைகளுக்கான கடைகளை விட புத்தகக் கடை பிடிக்கும் என்றும் பேருந்தில் நான் சுவர்ப்பூச்சு கொள்கலன்கள், உலக்கை மற்றும் தகரம் கொண்டு போனதையும் சொல்லி (முழுக்க முழுக்க "நான் எனது தேவைக்காக செய்திருக்கிறேன் பார், ஒரு வெட்கமும் இல்லை" என்று காட்ட என்று சொல்லிக் கொண்டாலும், அப்படிப்பட்ட தேவைகள் இங்கு 99% பேருக்கு வராது என்பதும் நினைவுக்கு வரும்) அவர்கள் முகம் ஆச்சரியத்தில் விரிவதைப் பார்க்க & அவர்களுடன் தர்க்கித்து கற்பிதங்களை உடைக்கப் பிடிக்கும்.
3. சில இடங்களுக்கு முதல் முறையாகப் போனாலும் அவ்விடத்திற்கு முதலும் வந்திருந்த மாதிரித் தோன்றும். நண்பர்களிடம் சொன்னால் போன பிறப்பில் வந்திருப்பாய் என்று கேலி பண்ணுவார்கள். ஏனோ தெரியவில்லை பழைய காலத்து வீடுகள் கட்டிடங்கள் என்பவற்றிற்குப் போனால் அதிகமாகத் தோன்றும். வந்த மாதிரி இருக்கிறது தானே என்று அவ்விடத்தின் உள்ளமைப்புப் பற்றிக் கேட்டால் அம்போ! ஆக வெளியில மட்டும் பார்த்துப் போயிருக்கிறன் போல போன பிறப்பில!!! :O\
2. முந்தினதின் நீட்சியாக யாரைப் பார்த்தாலும் முதல்லே எங்கேயோ கண்ட மாதிரி இருக்கே என்று யோசிப்பது. எப்படியும் இதுவரை வாழ்நாளில் சந்தித்த/பார்த்திருந்த ஒருவருடன் புது முகத்தை ஒப்பிட்டுக் கொள்வது. அப்படி யாரையும் ஒத்திராத முகமா? கண்ணையோ மூக்கையோ காதையோ நெற்றியையோ ஒப்பிடத் தொடங்குவேன்!! புத்தம் புதிதாயே முகம் இருந்தால் மனதில் தேக்கிக் கொள்வேன்.. இன்னொரு ஆளைச் சந்தித்தால்/பார்த்தால் ஒப்பிடுவதற்கு!! :O))
இந்த வியாதி வர வர முற்றுகிறது என்று நினைக்கிறேன்.. வார இறுதியில் சந்தித்த ஒரு வயதுக் குட்டிப் பெண்ணைப் பார்த்து இவளை மாதிரியே யாரைத் தெரியும் என்று யோசித்து, கடைசியில் கண்டு பிடித்தேன்!!!
1. யாரோட கதைச்சாலும் அவங்கட வட்டார வழக்கில/ வேற்று நாடாயிருந்தா அந்த அக்சன்ற்றுடைய ஆங்கிலம் கதைப்பது. மாற்ற வேண்டும் என்டு முயற்சித்திருக்கிறேன். ஆனாலும் கவனிக்காம விட்ட பொழுதொன்றில மூளையும் குரல்வளையும் சதி பண்ணி விடும். சீனாக்காரனிட்டக் கதைச்சா அவன் சொல்லுற மாதிரியே "த்ரீ"க்குப் பதிலா "ட்ரீ/ட்லீ"யும், "ப்ரைட் ரைசு"க்குப் பதிலா "ப்லை லை" யும் தான் என்ட வாயில இருந்து வரும். இதே இத்தாலியனோட என்டா "இட்" "இத்" ஆகிறதும் நடக்கும். வேலையிடத்திலே பல நாடுகளைச் சேர்ந்த ஆட்கள் இருப்பதால் எனக்கும் வசதியாய் அமைந்து விடுகிறது!!(என்ன இதுவரை இந்த ஐரிஷ்/ஸ்கொட்டிஷ்/வெல்ஷ் அக்க்சன்ற்றுகள்தான் வராதாம்.) புதுசு புதுசாய் அக்சன்ற் கற்றுக்கொண்டு வீட்டே போய்/குட்டித்தோழர்களிடம் பேசிக்காட்டுவது பொழுது போக்கு. என் வீட்டு இல்லத்தரசன் யாரோடு பேசினாலும் தனது அக்சன்ற் / 95% இலங்கைத் தமிழிலேயே கதைப்பார். நான் அப்படியில்லைத்தானே.. ஒரு நாள் தமிழக நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அங்கிருந்த ஒரு (தமிழக)முதியவவுடன் பேசினேன். "உன்னோட வீட்டுக்காரர் பேசறது புரியலே, ஆனா நீ சரியா பேசறே" என்றாரே!!
இப்போதைக்கு இவ்வளவுதான் ஞாபகம் வந்தது. இந்த விசர் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? :O))
தலைப்பில்லாத கதை
ஒரு உண்மைச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு (கதையெழுதும் முயற்சியில்) ஆங்கிலத்தில் எழுதியது. அதிலிருந்து தமிழ்ப்படுத்தியிருக்கிறேன். கதைக்குத் தலைப்பு(இதுவரை) இல்லை.
போரில் சம்பூர் அரச படையால் கைப்பற்றப்பட்டதும் கடைக்குப் போன சீலனும் மகள் கவிதாவும் திரும்பி வரும் வரை காத்திருந்து கையில் கிடைத்ததை வாரியெடுத்துக் கொண்டு ஊரோடு சேர்ந்து ஓடின இரண்டாம் நாளே காட்டுக்குள்ளாலே நடந்த மக்களுக்குள் ஆளுக்கொரு பிள்ளையுடன் தொலைந்து போனார்கள் சீலனும் ஆனந்தியும். வீட்டிலிருந்த விதத்துக்கும் காட்டு வாழ்க்கைக்கும் எவ்வளவோ வித்தியாசம். வில்வனுக்கு இவையொன்றும் புரியவில்லை. ஒரு நாள் இரவில் சீலன் திறக்க மாட்டாமல் கண்களை மூடின சில நிமிடங்களில் பக்கத்தில் எங்கேயோ நகர்ந்து நகர்ந்து போய் காஞ்சோன்றிச் செடி பட்டு அரிப்புத் தாங்காமல் அவன் அழுது காட்டையே கலங்கடித்தான். அழுகையை நிற்பாட்ட வாயில் துணியடைய வேண்டி வந்தது.
தூரத்தே கேட்ட வெடிச்சத்தம் ஆனந்தியை எழுப்பிற்று. இன்னும் விடியவில்லை. விடிவதற்கு இன்னும் நேரமிருந்தது. சுற்றியிருந்த மரங்களின் வடிவம் கறுப்பாய்த் தெரிந்தது. சில்வண்டுகளும் விட்டு விட்டுக் கச்சேரியைத் தொடர்ந்து கொண்டிருந்தன. எப்போது தூங்கிப் போனோம் என்று நினைத்தவளாய் பக்கத்தில் படுத்திருந்த கவிதாவையும் தங்களைப் போலவே மரங்களுக்குக் கீழே படுத்திருக்கும் மற்றவர்களைப் பார்த்தாள். நாலைந்து நாட்களாக காட்டுக்குள்ளால் நகர்கிற கூட்டம். விடிகாலையில்தான் கொஞ்சமேனும் உறங்கும். நித்திரை எவ்வளவு அதிசயமான ஒன்றாக இருக்கிறது. நேற்றைக்கு பாம்புக் கடியில் தன் மகனைத் தொலைத்த தாய் கூட இப்போதைக்கு மகன் இல்லை என்கிற நினைப்பிலிருந்து எவ்வளவு தூரமாய் உறங்குகிறாள். விடியல் சூரியனையும் அவளிடமிருந்து புது அழுகையையும் கொண்டு வரும். நித்திரைதான் திறமான வலிநிவாரணி - அது உடல்சார்ந்ததோ அல்லது மனம் சார்ந்ததோ. பகலில் அத்தனை வேலை வைக்கும் வில்வன் கூட இரவில் அமைதியாக உறங்குவானே என்று தன் மகனைப் பற்றி நினைத்ததும் ஆனந்திக்கு நித்திரை வரவில்லை. சீலன் தன்னைப்போல் பொறுமையாகப் பார்க்க மாட்டானே என்ற எண்ணம் எழுந்து அலைக்கழித்தது.
சீலனுக்கு ஆனந்தியில்லாமல் வில்வனைச் சமாளிப்பது முடியவில்லை. நடந்து களைத்தால் நின்று ஓய்வெடுக்கிற சூழ்நிலையில்லை. வில்வன் திமிறி அழ அழ மற்றவர்களுடன் ஈடு கொடுத்து வில்வனைச் சமாளித்தபடியே வலுக்கட்டாயமாக நடந்தான். இரவுகளில் கொஞ்சம் பரவாயில்லை. நடந்த களையில் படுத்துவிடுவான். ஆனாலும் இடையிடையே எழுந்து பார்த்துக் கொள்ள வேண்டும். சிலவேளைகளில் ஆத்திரமாய் வரும். வடிகாலுக்கு எங்கே போக? ஆனந்தி இதுவரை எப்படிச் சமாளித்தாள் என்று அதிசயமாக இருந்தது.
விடிந்து பார்த்தால் வில்வனைக் காணவில்லை. வந்தவழியே சுற்றுமுற்றும் ஒருநாள் முழுவதும் தேடினதுதான் மிச்சம். ஆனால் பிரிந்த குடும்பம் 'சீலன், உன்ட மனிசி இந்தா எங்களோடதான் இருக்கு" என்று அவர்கள் ஊர்க் கிழவி ஒருவர் சீலனை அடையாளங் கண்டு கொண்ட தயவால் சேர்ந்தது. மகனைத் தொலைத்த குற்றத்துடன் ஆனந்தியிடம் போய் நின்றான். அவன் விவரஞ் சொன்ன போது வந்த பதற்றமும் அவர்களிருவருமாய் இன்னொரு பகல் முழுதும் தேடி சூடுபட்ட வில்வனின் உடலைக் கண்டெடுத்த நேரம் ஏற்பட்ட வேதனையும் மனவுளைச்சலை அதிகரித்தன. தான் மகனை வெறுத்து "அவன் இல்லாமல் போனால்.." என்று நினைக்கவில்லையே.. அன்றைக்கு ஏதோ அலுப்பில் எண்ணியது உண்மையாகி விட்டதே என்று நினைத்து நினைத்து மறுகினாள் அந்தத் தாய். தான் நிலைகுலைந்தால் ஆனந்திக்கு ஆறுதல் சொல்வது யார் என்று சீலனும், வில்வனில்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க விரும்பாத ஆனந்தியும் அழுகையை மறுதலித்து நின்றனர்.
ஆனாலும் தாய்க்கும் தந்தைக்கும் மகனைக் கவனிக்கிற பளு இல்லாமல் போனது கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தபோதிலும் பிள்ளை இறந்ததில் இப்படியெல்லாம் நிம்மதிப்படுகிறோமே என்று குற்றவுணர்வும் அதன் கூடவே வந்தது. ஆனந்திக்கு இருந்ததைப்போலவே சீலனுக்கும் அதே குற்றவுணர்வைத் தந்து திருப்திப்பட்ட அந்த நிம்மதி அவர்கள் அதை வன்மையாக எதிர்த்தொதுக்கியபோதும் மனதில் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டது. இரவு வந்து, கவிதா 'இனி தம்பி இல்ல என்னம்மா' என்று அவனுக்காகவே தூக்கிக் கொண்டு வந்த கணிதப் புத்தகத்தைத் தடவியபடி சொன்ன மட்டில் வில்வனுக்காகவா அல்லது தங்களுக்காகவா என்று தெரியாமல் அவர்கள் அழ ஆரம்பித்தார்கள்.
வகை: கதை
இரண்டாம் தரிப்பு II
ரெய்ன்(f)பால் நீர்வீழ்ச்சிக்குக் காலையில் போகவென்றிருந்த பயணம் பிற்பகல் இரண்டு/மூன்று மணி போலத்தான் சாத்தியமாயிற்று. ஷாவ்ஹௌசன் (சாருஹாசன் அல்ல) கன்ரோனில் ஜெர்மன் - சுவிஸ் எல்லைக்கருகில் இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சிதான் ஐரோப்பாவிலேயே பெரிதென்றார்கள். இரண்டு மூன்று வழிகளில் இவ்விடத்தை அடையலாம். இங்கே பாருங்கள்.
விரைவிலேயே பனிமூட்டம் சூழ்ந்துவிட்டதால் நிறைய நேரம் நிற்கவில்லை. நீர்வீழ்ச்சி ஆரம்பிக்குமிடத்திற்கும் ஏறவில்லை. கோடை காலத்திற்தான் செல்லலாம். மேலே ஒரு கோட்டையும் இருக்கிறதாம். படகுச் சவாரி போகலாம், அல்லது நடந்து மலையேறலாம். மலை ஏறுவதற்குமே வெவ்வேறு வழிகளுண்டாம். நாங்கள் அடிவாரத்திற்குப் போனோம். குட்டியொரு பாலமிருக்கிறது. கீழே பார்த்தால் தரை தெரியக்கூடியளவு தெளிந்த நீர். தரைதான் தெரியவில்லை... அவ்வளவிற்கு மீன்கள். சாப்பாட்டுப் புத்தி போகுமா.. எப்பிடிப் பிடிக்கலாம் என்றெல்லாம் ஆராயப்பட்டதுடன் பொரிச்சா சுவையாயிருக்குமென்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்பட்டது. கதையோடவே முடிஞ்சு போச்சு.. செயலிலே இறங்கவில்லை. அத்துடன் தப்பின மீன்கள். :O)
கடந்து அந்தப்பக்கம் கோட்டைக்குப் போனால் ஒரு ஞாபகச் சின்னக் கடையும் (பூட்டியிருந்தது) படகுத் துறையும், ஒரு உணவகமும் இருந்தன. தண்ணீரோ சில்ல்ல்!!. வீரம் காட்டவென்று தண்ணிருக்குள்ளிருந்து வெளியே தலை நீட்டிக் கொண்டிருந்த ஒரு பெரிய கல் மேலே நின்று படமெடுத்தோம். குளிர்காலத்தில் போவதில் சனமில்லாமல் ஆறுதலாய் இடம் பார்க்கக் கிடைத்தாலும், கோடைகாலத்திலே செய்யக்கூடியதாயிருக்கிற படகுச் சவாரியோ, மலையேறலோ இல்லாமல் போனது வருத்தமே.
இதுவரை இப்படி அழகான இடத்தைப் பனிமூட்டத்திற்கூடாகப் பார்க்கும் சந்தர்ப்பம் படங்களிலும் (கதாநாயகி அறிமுகம்/பாடல்)(இதற்கு நக்கலாக 'அழகிய தீயே'ல் கடைசியில் ஒரு காட்சி வைக்கப்பட்டதல்லவா. இன்னும் சிரித்துக் கொள்வேன் அதை நினைத்து) விளம்பரப் பிரசுரங்களிலும் மட்டுமே கிடைத்தது. படத்தைப் பார்த்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
ஷாவ்ஹௌசனில் படங்கள் வரையப்பட்ட பழங்காலத்து வீடுகளும் இருக்கின்றனவென்று அறியக்கிடைத்தது. செல்லவில்லை. விவரங்கள் கீழேயுள்ள சுட்டிகளிற் கிடைக்கும்.
1. http://www.about.ch/cantons
2. http://www.virtualtourist.com
வின்ரத்தூரிலிருந்து சுவிஸ்ரயிலெடுத்து இரண்டு மணி நேரத்தில் தூன் நகரை வந்தடைந்தோம். போன இடங்களிலெல்லாம் எங்களைச் சாப்பிட வைத்தே அழகு பார்த்தார்கள். தூனில்தான் கொஞ்சமாவது அதிலிருந்து விடுதலை; அடுத்தநாள் நாட்டுக்கோழி இறைச்சியென்று - அதற்குள்ளிருந்த முட்டைகளோட சேர்த்து - பரிமாறும் வரை :O(. சுட்ட மீனும் சலட்டும் சாப்பிட்டுவிட்டு பத்து நிமிட நடையிலுள்ள நகர் மையத்தைப் பார்க்கப்போனோம். நத்தார்ச் சோடனைகள் ஆரம்பித்திருந்தன. அடுத்தநாள் சந்தையாம். கடைகளின் எலும்புக்கூடுகளாய் சில stalls முளைத்திருந்தன. 12ம் நூற்றாண்டிலிருந்தே இருக்கிற கோட்டை கண்ணில் பட்டது. அடுத்தநாள் அதைப் பார்க்கப் போகிறதாய் முடிவு. கண்ணிற் பட்ட ஒரு மணிக்கூட்டுக் கடைக்குள் நுழைந்தோம். ஒரு அடி உயரமிருக்கும் ஒரு கடிகாரத்தைக் காட்டி விலை கேட்டோம்.. 20,000 சுவிஸ் பிராங்குகளாம்!!!! அடேயப்பா! கையாலேயே செய்யப்படுவதால் அவ்வளவு விலை.
அடுத்தநாள் மப்பும் மந்தாரமுமாய் விடிந்தது. சுவிஸில் கடைசி நாளென்பதால் மனம் சோர்ந்தும், கோட்டை & இன்னொரு நாடு (அடுத்தநாளாயினும்) பார்க்கப் போகிற உற்சாகமும் கலந்து மனம் ஒரு நிலையில்லாமல் இருந்தது. சந்தை & கோட்டையைப் பார்க்கப் போனோம்.
வகை வகையாய் சீஸ். தோற் பொருட்கள், ஆடைகள், நத்தார் அலங்காரங்கள், பூக்கள், காதணி/மாலைகள்/மோதிரங்கள், பிரம்புப் பொருட்கள் என்று பலதும் விற்கும் கடைகள். பிரம்புக் கூடையொன்றை ஒரு சிறு இயந்திரத்தினுதவியுடன் சில நிமிஷங்களிலேயே பின்னுகிறார் கடைக்காரக் கிழவர். அவருக்கு எதிர்த்தாற்போல் ஒரு சிறுகடை. பொன்னிறமாய் சிற்றுருவங்கள். கண் பார்த்ததும் கால் இழுத்துச் சென்றது. தேன் மெழுகாலான மெழுகுதிரிகள். சந்தையிலே கொஞ்சம் சீஸ் வாங்கிச் சாப்பிட்டு கோட்டை நோக்கி நடந்தோம்.
கோட்டையில் கீழ்த்தளத்தில் ஒரு 'சத்திரம்'. கோட்டையின் கீழ்த்தளப்பகுதியில் கொஞ்சத்தை இப்போது கடைகளாக்கி விட்டார்கள். குதிரைகள் ஏறுவதற்கென்று வைத்தவை போலிருந்த படிகளில் ஏறி நடுத்தளம் அடைய ஒரு பீரங்கி வரவேற்றது. அதிலேயே ராசா ராணியாய் முகம் வைத்துப் படமெடுக்க ஒரு ஓவியம். ராசா ராணி (வீரன், காதலி?)யின் முகங்களைத் திறந்து அந்த ஓட்டையிலே எங்கள் திருமுகங்களை வைத்துப் படமெடுக்கலாம். ஒரு சின்ன அருங்காட்சியகமும் இருக்கிறது. நாங்கள் போன அன்றைக்குப் பூட்டு. இன்னும் கொஞ்சம் படியேறிப் போக ராசாவின் சாப்பாட்டறை. இப்பவெல்லாம் விழாக்கள்/விருந்துகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது. அன்றைக்கும் கதிரை-மேசைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள். வேலை செய்பவர்களை ஒரு knight மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார். 
மேலிருந்து படங்கள் எடுத்துக் கொண்ட பிறகு கீழிறங்கினோம். பழைய பாலத்தைப் பார்க்கப் போகிற வழியில் மதிலேறிச்(புத்தி போகாதே!!) சில படங்கள் எடுத்துக் கொண்டேன்.
பாலத்தடிக்கு நடந்தோம். தூனுக்கூடாக ஓடும் ஆறு வசந்த காலத்தில் பெருக்கெடுக்குமாம். குளிர்காலத்தில் கொட்டியுள்ள பனியெல்லாம் உருகியோட, ஆறு சந்தை வரை வரும். அதற்கேற்றபடி நீரோட்டத்தைக் கட்டுப்படுத்த மதகுகளை(சரியான பிரயோகம்தானா? அல்லது மடை என்று சொல்ல வேண்டுமா?) பொறி கொண்டு இயக்குகிறார்கள். அப்பொறிகள் கொண்டதொரு சிறிய மரப்பாலம் தான் பழைய பாலம்.
மேற்கூரையில் பாசி படர்ந்து போயிருந்தது. நீர் துள்ளிக் குதித்து ஓடி வருகிறது. ஒரேயொரு மடைக்கதவைத் திறந்து வைத்திருந்தார்கள் அன்று. ஆற்றில் பாண்/உரொட்டித் துண்டுகளை வீசினால் அன்னங்கள்/நீர்ப்பறவைகள் விரைந்து வருகின்றன. பின்புலமாய்க் கோட்டையும் வேறு கட்டிடங்களும். நடை பயில நல்லதொரு இடம்.
தூனில் பார்க்க இன்னுமொன்றிருக்கிறது. வொக்கர் பனோராமா (Wocher Panorama) எனப்படுகிற சுற்றிவர வரைந்த ஒரு ஓவியம். பத்தொன்பதாம் நூற்றாண்டு வாழ்க்கை பற்றியது. இது குறித்த மேலதிகத் தகவலுக்கு: http://www.thunersee.ch/en
இப்படியெல்லாம் சுற்றிவிட்டு வீட்டே வந்து அடுத்த நாள் பயணத்திற்கு ஆயத்தமானோம்.
ஜேர்மனி. கத்திகளுக்குப் பேர்போன சொலிங்கனில் கால் பதித்தோம். எனக்கே மழை அலுக்குமென்று நான் எதிர்பர்க்கவில்லை. ஜெர்மன் வாசிகளுக்கு hats off. காற்றும் மழையும் ஊசியாக் குத்தின குளிரும்.. அப்பப்பா!!! கொட்டின மழையில் இடம் பார்க்க எங்கே போவது? கடைசியில் ஷ்வேப பான்(schwebe bahn) தான் பராக்குக் காட்டிற்று. வழமையாக் கீழே இருக்கிற தண்டவாளம் இதற்கு மேலே. தொங்கிக் கொண்டு ஓடுகிறது இந்த ரயில். கொஞ்சத் தூரத்துக்கு மேலே ரயிலோட கீழே ஆறோடுகிறது.
(இரவிலெடுத்த படம் தெளிவில்லை என்பதால் விக்கியில் பாருங்கள்.
ஜேர்மனியில் நின்ற இரண்டு நாட்களும் கட்டாய் ஓய்வு போலத்தான். வெளியில் இறங்க முடியவில்லை. குளிர். இங்கிருந்து நோர்வே போகிற திட்டம். சிட்னியிலிருந்து விலை பார்த்த போது 30 யூரோ இருந்த விமானப் பயணச்சீட்டு 100 யூரோக்கும் மேலாலே எகிறியிருந்தது. ஒரு மாதம் முதல் பதிவு செய்வதற்குத்தானாம் அந்தக் குறைந்த விலை. அவசரப் பயணகாரருக்கு தண்டம்தான். சில நாட்கள் முன்னே பின்னே போகக்கூடும் என்று பதிவு செய்யாமல் விட்டதன் விளைவு ஆளுக்கு 100 யூரோக்கும் மேலாகக் கொடுத்து விமானச் சீட்டைப் பெற்றுக்கொண்டதுதான். விமானச் சீட்டு எடுப்பதானால் 3 - 4 வாரத்திற்கு முன்னரே வாங்குவது உத்தமம்.
இலையுதிர்/வசந்த காலம், பின்னிரவு/அதிகாலைப் பயணம், செவ்வாய்-வியாழக் கிழமைப் பயணம் என்பனவற்றைத் தேர்ந்தெடுத்தால் மலிவு விலை விமானச்சேவைகளின் பயணச்சீட்டுகளை இன்னும் மலிவாய்ப் பெறலாம். எல்லாவற்றையும் விட முக்கியமானது முன்பதிவு செய்தல். குறைந்தது 3 வாரங்களுக்கு முன்பாகவே.
நிறைய நாடுகள் போகிறீர்கள். ஒரே பயணச்சீட்டிலேயே எல்லாத் தரிப்பும் போட்டெடுத்தீர்களேயானால் இலகுவாக இருக்கலாம்; ஆனால் கட்டாயம் விலையாக இருக்கும். நடுக் கட்டங்களை தனிப்பயணங்களாய்க் கருதிப் பயணச் சீட்டு எடுப்பது பணப்பைக்குச் சேதம் விளைவிக்காது. உதாரணமாய் நான் சிட்னி-பரிஸ்-ஸூரிக்-உவுப்பர்ட்டால்-ஒஸ்லோ-பரிஸ்-சிட்னி பயணிக்கிறேனென வைத்துக் கொள்வோம். சிட்னி-பரிஸ் & பரிஸ்-சிட்னி மட்டுமே பிரதான சீட்டில் எடுத்துக் கொண்டு, பரிஸ்-ஸூரிக்-உவுப்பர்ட்டால்-ஒஸ்லோ-பரிஸ் பயணங்களை விமானம்/பேருந்து/ரயில் என்று விருப்பமான comboவில் போட்டெடுத்துக் கொண்டால் விலை குறைவாக இருக்கும்.
மலிவுவிலை விமானச் சேவை
"இரை" மீட்டல் 3
சாப்பாட்டைப் பத்திக் கதைச்சித்திருந்தனான், நடுவுல உட்டுத்துப் பொயித்தன். குறை நினையாதங்க மனே.
கடற்கரைக்குப் போனாக் கட்டாயம் இரிக்குமெண்டு சொன்ன சாமான் கொத்துரொட்டி. சில ஆக்கள் வீச்சு ரொட்டியெண்டுஞ் சொல்லுறவங்க. என்ன சாமான் என்டு விளக்கத் தேவல்லத்தானே... உருட்டி வைச்சிரிக்கிற மாவை நாலு சுழட்டுச் சுழட்டி விசுக்கினா விரிஞ்சி வாறத்த 'டங்கர டங்கர'யெண்டு போட்டிருக்கிற பாட்டுக்கு ஏத்த ஒரு தாளத்துக்குக் கோவா, முட்டை, இறைச்சி, வெங்காயம், பச்சக்கொச்சிக்கா எல்லாம் போட்டு கொத்தின ரொட்டி. என்னதான் களையெண்டாலும் அந்தப்பாட்டுக்கும் கொத்துரொட்டித் தாளத்துக்கும் கால் சும்மா தானா ஒரு ஆட்டம் போடப்பாக்கும். கவனமா இரிக்கோணும். சாப்பாட்டுப் பேப்பரில சுத்தி பிறகு பேப்பரில சுத்தித் தருவாங்க. சாப்பாட்டைக் கட்டுறதே தனிக்கலை. எவ்வளவுதான் முயற்சிச்சாலும் கடசில சொருகிறத்துக்கு எனக்கெண்டா பொக்கற் மாரி இரிக்கிறதேல்ல.
சாப்பாடுப் பார்சலப் பத்திக் கதைக்கக்குள்ளதான் ட்ரெயினில போகக்குள்ள கொண்டு போற சாப்பாட்டு ஞாவகம் வருது. அநேகமா இடியப்பப் பிரட்டலாத்தான் இரிக்கிற. பயணத்தண்டைக்கு விடிய ஒழும்பி இடியப்பம் புழிஞ்சி பிச்சி பிரட்டுவாங்க. ஆனா முட்டையோட நின்டிரும். இறைச்சி/மீனெல்லாம் பாவிக்கிறல்ல. அதைச் சிந்தாமக் கொள்ளாம மடில வச்சிச் சாப்பிடோணும். இல்லாட்டி பாண்/பணிஸ். முதலை பணிஸ்தான் பிள்ளையள் விரும்பித் தின்னிற. இல்லாட்டி கிறீம் பணிஸ். இப்ப இருக்கிற சீனி consciousness அப்ப எங்க கிடந்த!! [பாண்/பணிசுகள் சாப்பிடக்குள்ள வடிவா ஒரு பரிசோதனையும் செய்யலாம். தொடர்ந்து ஒரு ரெண்டு மூண்டு கிழமைக்கு சாப்பிட்டா வயிறு ஊதும். சாப்பிடல்லண்டா வயிறு குறைஞ்சிரும்.]
இந்தக் கொத்துரொட்டிய சும்மா வழிக்கடையில வாங்கிச் சாப்பிடல்லாம்.. அந்த மாரி இரிக்கும். [ருசியே செய்யிறவன்ட வேர்வை கலக்கிறதிலதான் வருது என்டு அண்ணா சொன்னாச் சரி, நமக்கு வாய்க்கால சாப்பாடு இறங்கா. "புள்ளைய ஏன் அரியண்டப் படுத்தா" என்டு வாங்கிக் கட்டுவாரு. என்டத்தையும் பங்கு போட்டுத் தின்றதான்.] கொழும்பில நல்லம் என்டா அது சரியற்காரன்ட(Chariot) கொத்துரொட்டிதான். நல்லாச் செய்திரிப்பான். விலையும் பரவால்ல. எங்கயோ கொட்டாஞ்சேனை/மருதானை/கோட்டைப் பக்கம் போனாலும் அண்ணாப்பிள்ளையர் வாங்கித்து வருவேர். அதுவும் நல்லா இரிக்கிற. என்ன கடையெண்டு எனக்குத் தெரியா.
என்னதான் கொத்துரொட்டியத் திண்டாலும், பசியெண்டா முதல்ல என்ன ஞாவகம் வரும்? சோறும் கறியும் தானே? [நமக்கென்ன பஸ்ற்றாவும் நூடுல்சுப்பும் அப்பெங்க தெரிஞ்ச?அதென்னண்டு தெரியா இனி இல்லண்ட பசி வந்தா நாம ஏன் சாப்பிட லேசான, உடன வயித்த நிறப்பிற சாப்பாட்டத் தேடுற?] மத்தியானச் சாப்பாட்டுக்கு ரெண்டிடம். ஒன்டு மஜஸ்ற்றிக் சிற்றிக்குள்ள. மற்றது கொள்ளுப்பிட்டில க்றீன் கபின்/பகோடா(Pagoda. பக்கோடா இல்ல). ஒரு சிங்கள ஊரில போய் மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டா எப்பிடியான கறி இரிக்குமோ அப்பிடியான சாப்பாடு மஜஸ்ற்றிக் சிற்றிக்குள்ள இருக்கிற கடையில. கடையிர பேர்தான் மறந்துத்தன். விலாசா கிச்சனோ என்னயோ. எனக்கு ஞாவகமா போஞ்சி, வாழப்பூ, கறணக் கிழங்கு(சமைச்சொழியும் மட்டும் வெட்டினாளுக்கு கை கடிக்கும்), மரவள்ளிக்கிழங்கு, பிலாக்கா, பிஞ்சுப் பிலாக்கா (பொலொஸ்),கோழிறச்சி, மீன்/கணவா/றால் குழம்பு/ பொரியல்,கத்தரிக்கா, வெண்டிக்கா, கரவில(பீர்க்கங்கா என்டு நினைக்கன்) சீனிசம்பல், தேங்காப்பூ சம்பல், சட்னி,லீக்ஸ், கீரை ஏதாவது என்டு நிறையக் கறி இரிக்கும். விருப்பமான சோறு - சிவப்பு, வெள்ளை - கேட்டெடுக்கல்லாம். கறியளக் காட்டக் காட்ட போட்டுத்தருவாங்க. இலையிலதான் சாப்பாடு போடுவாங்க. இலைய வட்டில்ல வச்சித் தருவாங்க. அத நாம பிறகு கரண்டி/முள்ளுக்கரண்டியால சாப்பிடுற. :O)
அங்க அப்பிடியெண்டா கிறீன் கபினில நீங்க போய் நிண்டு எடுத்து வரோணும். என்ன கறி மாறினாலும் இவனிட்ட கட்டாயம் நெத்தலிக் கருவாட்டுப் பொரியலும் பப்படமும் தேங்காப்பூச் சம்பலும் சட்னியும் பருப்பும் கீரையும் இருக்கும். இருந்து சாப்பிடுறதுக்கு நல்ல தோதான இடம். வெள்ளை உடுப்புப் போட்ட waiter/server. அரைவட்டமா இருக்கை (சுவரோட கட்டிச் சீமெந்து போட்டது) போட்ட வட்ட மேசை நாலைஞ்சு. (மற்றக் கதிர மேசையளும் இரிந்ததான்..) பின்னுக்கு சுவரில பழங்காலத்திய முறையில கீறின/அச்செடுத்த ஓவியம். நல்ல நிழலா இருக்கும். பக்கத்தால காலிவீதி கிடக்கெண்டு மறந்தே பொய்த்திரும். பிறகு சாப்பிட ஐஸ்கிறீம், வட்டிலப்பம், பழக் கலவை இல்லாட்டி தயிரும் கித்துள் பாணியும்.
கித்துள் பாணியப்பற்றிச் சொல்லோணும். நல்ல இனிப்பான பாணி. நான் முதல் இதத் தென்ன மரத்திலருந்துதான் எடுக்கிறண்டு நினைச்சித்திருந்த. அப்பிடியில்ல. கித்துள் (Caryota Urens) என்டே ஒரு மரங் கிடக்கு.
Kingdom Plantae - Plants
Subkingdom Tracheobionta - Vascular plants
Superdivision Spermatophyta - Seed plants
Division Magnoliophyta - Flowering plants
Class Liliopsida - Monocotyledons
Subclass - Arecidae
Order - Arecales
Family - Arecaceae (Palm family)
Genus - Caryota L. (fishtail palm)
Species - Caryota urens L. (jaggery palm)
தென்னையிட விட்டத்தில மூண்டில ஒரு பங்குக்குத்தான் வரும். 15 - 20m உய..ரமா வளரும். கொண்ட பனை(கொண்டைப் பனை?), கூன்டல்பனை(கூடல் பனையெண்டு கேள்விப்பட்டிருக்கிறன்.. அதா இதெண்டு தெரியல்ல), திப்பிலி என்டு தமிழில சொல்லுறதாமெண்டு இந்தப்பக்கம் சொல்லுது.
"This and other large Caryota species are sources of sago, fibre and toddy (fermented sap). The genus is the only one within the palm family with bi-pinnate (doubly divided) leaves. Caryotas are monocarpic, that is, when the flowering stem has finished fruiting it dies. The fruit is filled with crystals that cause severe irritation and should not be handled" - என்டுது இந்த ஊர் Royal Botanic Gardens தளம். கிட்டத்தான் கிடக்கு.. போய்ப் படம் எடுத்து வந்து இணைக்கிறன்.
கித்துள் பாணி, கித்துள் மரத்திட பூவை (பாளை?) வெட்டி எடுக்கிற. பாளையிட அடில வெட்டி மூலிகைக் கலவை கொஞ்சம் பூசிற. இப்பிடிப் பூசிறது பாளை முதிராமத் தடுக்கும். ரெண்டு நாளைக்குப் பிறகு பாளையச் சேத்துக் கட்டி நுனிகள வெட்டிருவாங்க. கீழ ஒரு பானைய/முட்டிய வைச்சா பிறகென்ன, பாணி அறுவடைதான். நேரடியா மரத்திலருந்து வாறதால அப்பிடியே சத்தும் இரிக்கும். இப்ப என்னண்டா நிறைய விக்கோணும் என்டதால சீனியக் கலந்தும் விக்கிறாங்க. வாங்கக்குள்ள பாத்து வாங்கோணும். (வாயில வைக்க மட்டும் எப்பிடி வித்தியாசம் கண்டு பிடிக்கிறண்டு எனக்குத் தெரியா). கித்துள் பாணியைக் காய்ச்சினா சக்கரை. பாணில மாதிரியே இதிலயும் சீனி கலக்கிறாங்களாம் இப்ப. சக்கரை வாங்கக்குள்ள கடும் நிறமாயும் மென்மையாவும் இருக்கிறதுதான் நல்ல சக்கரை. சீனி போட்ட சக்கரை நிறங் குறைஞ்சி கடிக்க/உடைக்க ஒண்ணாம கடினமா இரிக்கும். அத வாங்கப்படா!
தென்னையிலிருந்து கள்ளு எடுக்கிற மாதிரியே கித்துள் மரத்திலருந்து கள்ளும், தென்னந் தும்பிலருந்து கயிறு செய்யிறது மாதிரி கயிறும் செய்வாங்களாம். கயிறு மட்டுமில்ல, கூடைகள், தூரிகை செய்யக்கூடப் பாவிக்கிற. மரமும் நல்ல உறுதியா இருக்கிறவடிவா வீட்டுச் சாமான்/உத்திரம் செய்றவங்க.
எனக்குத் தெரிஞ்ச கித்துள் பாணிக் கதை இவளவுந்தான். ஆருக்கும் மேலதிக விவரம்/நான் சொன்னதில திருந்தங்கள் தெரிஞ்சாச் சொல்லுங்க.
அ.சொ.பொ.வி:
-----------------------
பச்சக் கொச்சிக்கா - பச்சை மிளகாய்
கடிக்க/உடைக்க ஒண்ணாம - கடிக்க/உடைக்க முடியாமல்
பாண் - bread
பணிஸ் - bun
வாயில வைக்க மட்டும் - வாயில் வைக்கும் வரை
வகை: இயற்கை , கும்பகர்ணனுக்குத் தங்கச்சி


